அந்துமணி பதில்கள்!
எம்.பி.தினேஷ், கோவை: குற்ற வழக்குகளில் கைதாகும் அரசியல் கட்சி பிரமுகர்கள் யாரும், காவல் நிலைய கழிவறையில் வழுக்கி விழுவதில்லையே...கைது செய்ய போலீசார் வரப் போவது, அரசியல்வாதிகளுக்கு முன்கூட்டியே தெரிந்து விடுகிறது. அதனால், மருத்துவமனை ஐ.சி.யு.,வில், 'அட்மிஷன்' வாங்கி விடுகின்றனர். நிலைமை இப்படி இருப்பதால், காவல் நிலையம், கழிப்பறை... இத்யாதி சமாசாரமெல்லாம் இவர்களுக்கு கிடையாது! இளங்கோ, மயிலாடுதுறை: 'வீட்டு மின் இணைப்புகளுக்கு, எந்தவித கட்டண உயர்வும் இல்லை...' என, தமிழக அரசு அறிவித்துள்ளதே...தேர்தலுக்கு தயாராக வேண்டாமா! இன்னும் பல அறிவிப்புகளும், அடுத்தடுத்து வரும் என, எதிர்பார்க்கலாம்!தேன் ராஜா, நெய்வேலி: சில தி.மு.க., அமைச்சர்கள் போல், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், ஏதாவது பேசி, வம்பில் மாட்டிக் கொள்கிறாரே...ஒவ்வொரு நாட்டிலும், பெரிய பதவியில் ஒரு, 'ஜோக்கர்' இருப்பார்; அமெரிக்காவுக்கு, 'அதிர்ஷ்ட வாய்ப்பாக' அதிபரே அத்தகைய, 'பெரிய பெயர்' பெற்று விட்டார்!* நெல்லை குரலோன், பொட்டல் புதுார், தென்காசி மாவட்டம்: ராஜ்யசபா சீட்டுக்கு, ஏன் பயங்கர போட்டா போட்டி?முதல் பாயின்ட், கவுரவம்; இரண்டாவது, மத்திய அரசை ஆட்டிப் படைக்கலாம்; மூன்றாவது, திடீர் புயல் போல் அதிர்ஷ்டக் காற்று வீசினால், மத்திய அமைச்சரவையில் இடம் பிடிக்கலாம்; நான்காவது, பதவி இறங்கினாலும், 'ராஜ்யசபா முன்னாள் எம்.பி.,' என்ற, 'லெட்டர் பேடை' வைத்துக் கொண்டு, வாழ்நாள் முழுதும், செல்லும் இடமெல்லாம், 'கெத்து' காட்டலாம்; ஐந்தாவது பாயின்ட், வாழ்நாள் முழுதும், 'பென்ஷன்' கிடைக்கும்!ஆர்.பிரதீபன், திருச்சி: பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில், பீஹார் மாணவி, ஜியா குமாரி, தமிழில், 93 மதிப்பெண் பெற்றுள்ளாரே...தமிழகத்தில் படிப்பவர், இவர். பீஹாரில் லாலு, நிதிஷ் என, மாறி மாறி ஆட்சி செய்பவர்கள், கல்வித் துறையை சரியாக பராமரிக்காமல், மாணவர்கள், தேர்வில், 'காப்பி' அடிப்பது, ஆசிரியர்களை மிரட்டுவது போன்ற செயல்கள் அதிகரித்து, அம்மாநிலமே கல்வியில் பின்தங்கி விட்டது.ஆனால், அம்மாநில மாணவர்களுக்கு சரியான முறையில் பாடம் கற்றுக் கொடுத்தால், அம்மாநிலம் முன்னேறும் என்பதற்கு, ஜியா குமாரி சாட்சி!* மு.நாகூர், சுந்தரமுடையான், ராமநாதபுரம்: டில்லி தேசிய அரசியலில், சீனியர் தி.மு.க., - எம்.பி.,கள் அனைவரும் ஓரங்கட்டப்பட்டு, துாத்துக்குடி எம்.பி., கனிமொழி முன்னிலைப்படுத்தப் பட்டுள்ளாரே...கனிமொழி எம்.பி., மிக திறமையானவர். அவருக்கு பல மொழிகள் தெரியும்; அதனால், இந்த அங்கீகாரம்! ந.மாலதி, துாத்துக்குடி: 'வீக் எண்ட்'களில் என்ன பண்ணுவீர்கள்?தினமும் வாசகர்கள் கடிதம் எழுதும் போது, அவற்றை அன்றன்றே படிக்க வேண்டுமே! 'வீக் எண்ட்'களையும் விடுவதில்லை; அன்றும் ஆபீஸ் தான்!