உள்ளூர் செய்திகள்

அந்துமணி பதில்கள்!

ஆர்.ஜெயபாரதி, சாத்துார்: 'இந்தாண்டு, சட்டசபை தேர்தலில் ஜெயலலிதா ஆட்சியை கொண்டு வருவேன்...' என்று, அவரது தோழி சசிகலா பேட்டி கொடுத்திருப்பதைப் பற்றி தங்கள் கருத்து?ஆண்டு தொடக்கத்திலேயே, 'கிச்சு கிச்சு' மூட்ட ஆரம்பித்து விட்டார், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி, சசிகலா. எந்த கட்சியிலும் அடிப்படை உறுப்பினராகக் கூட இல்லாதவர். எப்படி ஆட்சிக்கு வரப் போகிறோம் என்பது கூட அவருக்கு புரியவில்லையே! * சி.சசிகலா, விருதுநகர்: வட மாநில தொழிலாளியை, கஞ்சா போதையில், நம் மாநில சிறுவர்கள், அராஜகமாக தாக்கி, தலைகுனிவை ஏற்படுத்தி விட்டனரே... அமைச்சர், மா.சுப்ரமணியன், தமிழகத்தை போதை இல்லாத தமிழகமாக மாற்றி உள்ளதாக அறிக்கையும், சவாலும் விடுகிறார். அமைச்சருக்கு இன்னொரு கேள்வி... மது என்ன, தி.மு.க.,வுக்கு ஆரோக்கிய பானமா?* என்.இளங்கோவன், மயிலாடுதுறை: பொங்கலுக்குள், த.வெ.க., கூட்டணியில், டி.டி.வி.தினகரன், மற்றும் ஓ.பன்னீர்செல்வம் இணைந்து விடுவர் என்று கூறுகிறாரே, த.வெ.க., ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன்... டி.டி.வி.தினகரனுக்கும், ஓ.பி.எஸ்.,சுக்கும், 'பர்ஸ்' காலி. அதனால், வேறு எந்த கட்சியும் அவர்களை சேர்க்க மறுக்கிறது. அக்காரணத்தால், விஜயின் த.வெ.க.,வில் அவர்கள் சேர, அதிக வாய்ப்பிருக்கிறது! மு.ஆதினி, சேலம்: புகையிலை மற்றும் பான் மசாலா விளம்பரத்துக்காக, தனக்கு, 40 கோடி ரூபாய் தருவதாகக் கூறியும், அதை தான் நிராகரித்து விட்டதாக, பாலிவுட் நடிகர், சுனில் ஷெட்டி கூறியிருப்பது பற்றி... ஹிந்தி நடிகர், சுனில் ஷெட்டியின் இந்த சிந்தனையைப் பாராட்டுவோம். புகையிலை மற்றும் இணையதள சூதாட்ட விளம்பரங்கள் சட்டத்துக்குப் புறம்பானவை. இவற்றுக்கு சொந்தமான நிறுவனங்கள் மீது இது குறித்து வழக்கு பதியும்போது, விளம்பரங்களில் நடிக்கும் நடிகர்களும் வழக்கில் சிக்குகின்றனர். இதனால், இத்தகைய விளம்பரங்களை, சுனில் ஷெட்டி தவிர்த்து விடுகிறார்! கே.வல்லவன், வேலுார்: டில்லியில், 5 ரூபாய்க்கு சாப்பாடு வழங்கும், 'அடல் கேன்டீன்' திறக்கப்பட்டுள்ளது பற்றி... அருமையான திட்டம். ஏழைகள் பலர் பயன்பெறுவர். இந்த திட்டத்திற்கு முன்னோடி, தமிழ்நாட்டின், 'அம்மா உணவகங்கள்' தான் என்ற பெருமை நமக்கு உண்டு. அதை இங்கே துவக்கி வைத்தவர், நம் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா என்பது அனைவரும் அறிந்தது தானே!கே.ஜே.செல்வராஜ், கோத்தகிரி: கடந்த பார்லி., கூட்டத் தொடரில், 50 உரைகள் தமிழில் நிகழ்த்தி, சாதனை படைக்கப்பட்டுள்ளதாமே... நம் அரசியலமைப்பு சட்டத்தில், அலுவல் மொழிகளாக, 22 மொழிகள் இடம் பெற்றுள்ளன. இந்த மொழிகளில் பேசினால், மொழி பெயர்க்க, லோக்சபாவில் வசதி செய்யப்பட்டுள்ளது. அதைப் பயன்படுத்தி, கனிமொழி, பாலு, திருமாவளவன், துரை வைகோ போன்றோர், தமிழில் பேசினர். தமிழச்சி தங்கபாண்டியன், ஒரு முறை மட்டும் பேசினார். ராஜா, அருண் நேரு, கலாநிதி வீராசாமி, கார்த்தி சிதம்பரம், மாணிக்கம் தாகூர் ஆகியோர், ஆங்கிலத்தில் தான் பேசினர்.சு.உமா, ஆதிச்சபுரம், திருவாரூர்: தமிழ்நாட்டை சேர்ந்த, ப.சிதம்பரம், நிர்மலா சீதாராமன் போன்றவர்களே, மத்திய அரசின் நிதி அமைச்சராக தொடர்ந்து நியமிக்கப்பட்டுள்ளது, எதைக் காட்டுகிறது? தமிழர் ஒவ்வொருவரும் பெருமைப்பட வேண்டிய விஷயம் இது. நிதி மேலாண்மையில், தமிழர்கள் மிகவும் திறமையானவர்கள் என்பது தெளிவாகிறது. அதையும், 'திராவிட மாடல்' என, சிலர் சொந்தம் கொண்டாடாமல் இருந்தால் சரி!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !