சுற்றுலா போகிறீர்களா?
விடுமுறை விட்டாச்சு... அடுத்து, சுற்றுலா போக திட்டமிடுகிறீர்களா? பயணம் மகிழ்ச்சியானதாக இருக்க, சரியான திட்டமிடல் அவசியம். பட்ஜெட் துவங்கி தங்கும் இடம், உணவு, போக்குவரத்து வசதிகள் என, அனைத்தையும் திட்டமிட வேண்டும். பயணத்திட்டமிடல் பற்றி சில தகவல்களைப் பார்ப்போம்...பட்ஜெட்!இடத்தை முடிவு செய்து, அதற்கேற்ப பட்ஜெட்டை திட்டமிடுவதை விட, நம் பட்ஜெட்டுக்கு ஏற்றவாறு பயண இடங்களைத் தேர்வு செய்வதே சரி.பட்ஜெட்டுக்கு உகந்த இடங்களை முதலில், 'லிஸ்ட்' எடுத்து, பருவநிலை, சூழல் தெரிந்து, குடும்ப உறுப்பினர்களின் விருப்பத்தோடு தேர்வு செய்யலாம்.இடம், பட்ஜெட், எத்தனை பேர் என்பதையெல்லாம், மூன்று மாதங்களுக்கு முன்பே திட்டமிடுங்கள்.கூட்டமாகச் செல்லும்போது பயணத்தில் சில சலுகைகளைப் பெற முடியும்.போக்குவரத்து! பேருந்து, ரயில், விமானம் மற்றும் கார் என, எந்த வகை போக்குவரத்தை தேர்வு செய்கிறீர்கள் என்பதை, முதலில் முடிவு செய்து கொள்ளுங்கள். செலவை குறைக்க, அரசு பேருந்துகளை தேர்வு செய்யலாம். நமக்கான இருக்கைகளை நாமே தேர்வு செய்யும் வசதி கூட இப்போது இருக்கிறது.ரயில் பயணம் எனில், மூன்று மாதங்களுக்கு முன்பே டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதி இருப்பதால், தாமதம் இல்லாமல் முன்பதிவு செய்வது நல்லது. கடைசி நேரத்தில், 'தட்கல் டிக்கெட் புக்' செய்யலாம் என நினைத்தால், டிக்கெட் கிடைக்காத சூழலில் மொத்த பிளானும் சொதப்பி விடும். எனவே, சுற்றுலா செல்வதற்கு, 'தட்கல் டிக்கெட்' வசதியை நம்பாமல், முன்னரே திட்டமிடுவது சிறந்தது.விமானத்தில், பயணம் செய்வதற்கு, 60 நாட்களுக்கு முன், டிக்கெட் முன்பதிவு செய்தால், கட்டணம் குறைவு. சில நேரங்களில் சில இருக்கைகளுக்கு சலுகை கொடுப்பர். அப்படி ஏதேனும், சலுகை இருக்கிறதா என்பதை, 'செக்' செய்துவிட்டு, டிக்கெட் முன்பதிவு செய்யலாம்.சில இணைய தளங்களில் டிக்கெட் விலையை மட்டும் குறிப்பிட்டிருப்பர். குறிப்பு பகுதியில் சிறிய எழுத்து வடிவில், ஜி.எஸ்.டி., மற்றும் வரி பற்றி குறிப்பிட்டு இருப்பர். அதை கவனிக்காமல் கட்டணம் குறைவாக இருக்கிறதே என, டிக்கெட்டை முன்பதிவு செய்தால் திட்டமிட்டதை விட, அதிக பணத்தை செலவு செய்ய வேண்டிய சூழல் வரலாம்.பஸ், ரயில் மற்றும் விமானம், என, எல்லா பயணத்திலும், டிக்கெட்டை ரத்து செய்வதற்கான வசதிகள் இருக்கின்றன. தங்கும் இடம்! அறைகளை நேரில் சென்று முன்பதிவு செய்வதை விட, 'ஆன்லைனில்' முன்பதிவு செய்துவிட்டு கிளம்புவது நல்லது. 'ஆன்லைன்' பக்கத்தில் புகைப்படங்களை பார்ப்பதற்கும், நேரில் சென்று பார்ப்பதற்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கும். எனவே, ஹோட்டல் அறை, முன்பதிவு செய்யும் முன், மற்றவர்கள் கொடுத்து இருக்கும், 'ரெவியூ'களை படித்து பாருங்கள் அல்லது அந்த ஊருக்கு சென்று வந்த நண்பர்களிடமோ, அங்குள்ள நண்பர்கள் அல்லது உறவினர்களிடமோ விசாரித்து, முன்பதிவு செய்யலாம்.சில ஹோட்டல்களில் அறைகள் முழுவதும், முன்பதிவு செய்யப்பட்டிருந்தால், 'ஆன்லைன்' முன்பதிவை ரத்து செய்யும் அதிகாரம், சம்பந்தப்பட்ட விடுதிக்கு இருப்பதாக, குறிப்பில் கொடுத்து இருப்பர். அதை கவனிக்காமல் முன்பதிவு செய்து, பயணத்தை மேற்கொண்டால், சிக்கலான சூழலுக்கு உள்ளாக வேண்டியிருக்கும்.எனவே, குறிப்பில் இருப்பதை முழுமையாக படிக்கவும். அறையின் முன்பதிவை ரத்து செய்யும் விவகாரத்தில், சம்பந்தப்பட்ட வாடிக்கையாளர்களைக் கேட்காமல், முடிவு எடுக்கும் உரிமை ஹோட்டல்களுக்கு இருக்கிறது என்று குறிப்பிட்டு இருந்தால், அங்கு அறைகள் முன்பதிவு செய்வதை தவிர்க்கலாம்.போகும் இடங்களுக்கு மையமாக இருக்கும் பகுதியில், தங்கும் இடத்தை தேர்வு செய்தால் ஆட்டோ, கார், பேருந்துக்கான தொகையை மிச்சப்படுத்தலாம். அறை முன்பதிவு செய்யும் முன், போக்குவரத்து மற்றும் உணவக வசதிகள் இருக்கிறதா எனவும், பார்க்க வேண்டும். ஹோட்டல்களில் அறை முன்பதிவு செய்யும் முன், அங்கு குடும்பமாக தங்க இயலுமா என்பதையும், 'செக்' செய்து கொள்வது நல்லது.கவனிக்க வேண்டியவை!பிரபலமான இடங்களை மட்டும் பார்த்து விட்டு திரும்பாமல், நண்பர்கள், தெரிந்தவர்களிடம் விசாரித்து, வெளியில் அதிகம் தெரியாத மற்ற இடங்களையும் பார்வையிடுங்கள். 'டூரிஸ்ட் கைடு'களை தேர்வு செய்தால் இப்படிப்பட்ட இடங்களையும் சுற்றிக் காட்டுவர்.பயணத்தின் போது ஏரியா ஸ்பெஷல் உணவுகளை வாங்கிச் சுவைக்க ஆசை இருக்கும். அதை அளவாக எடுத்துக் கொண்டால், உடல் நலன் பாதிக்கப்படாமல், பயணத்தை மேற்கொள்ளலாம்.திட்டமிடுதல் துவங்கி பயணம் செய்வது வரை குழப்பமோ, பயமோ இருந்தால், மத்திய சுற்றுலாத்துறை அமைச்சகத்தால், அங்கீகரிக்கப்பட்ட ஏஜன்ட்டுகளை தொடர்பு கொள்ளலாம்.