கண்ணுக்கு தெரியாத பேருதவி!
மகாபாரத காலத்தில், உதங்கர் என்று ஒரு மகான் இருந்தார். ஒருமுறை அவர், பாலைவனம் வழியாக பயணம் போக நேர்ந்தது. கோடைக்காலம் வேறு; உதங்கருக்கு தாகத்தால், நா வறண்டு போனது. அதே பாலைவனத்தின் வழியாக, துவாரகாபுரிக்கு சென்று கொண்டிருந்தார், கண்ணன். தாகத்தால் தவித்துக் கொண்டிருந்தவர், கண்ணனைத் துதித்து, 'நான் விரும்புகிற போது, விரும்புகிற இடத்தில் குடிக்க தண்ணீர் கிடைக்க செய், பரந்தாமா...' என்று வரம் வேண்டி நின்றார். சிரித்துக் கொண்டே, முனிவரின் வேண்டுகோளை ஏற்று, வரம் தந்தார், கண்ணன். வரம் தந்துவிட்டாலும், ஆயர்பாடி சிறுவனாக இருந்த, பாலகிருஷ்ணனின் குறும்புத்தனம் மட்டும் போகவில்லை.கண்ணன் தந்த வரத்தை நினைத்தார். ஆனால், அவர் எதிர்பார்த்த மாதிரி மழையோ, பாலைவனத்தில் நீர் ஊற்றோ காணப்படவில்லை. அப்போது, தாழ்ந்த குலத்தவன் என்று கருதப்பட்ட, ஏழை ஒருவன், உதங்கர் முன் வந்தான். அவன் தோளில் தொங்கிய குடுவையில் தண்ணீர் இருந்தது. அந்த காலத்தில், முற்றி உலர்ந்துபோன சுரைக்காயை குடைந்து, குடுவையாக பயன்படுத்தி, தண்ணீர் எடுத்து போவதுண்டு. இதை, சுரைக் குடுக்கை என்று சொல்வர். 'என்ன சாமி, தாகமா இருக்குதா, தண்ணீர் குடிக்கறீங்களா?' என்று, உதங்கரை பார்த்து கேட்டபடி குடுவையை எடுத்தான், அந்த ஏழை வழிபோக்கன். அவனுடைய அழுக்குத் தோற்றம் கண்டு, முகம் சுளித்து, 'வேண்டாம் போ...' என்று அவனுடைய உதவியை மறுத்து நடந்து சென்றார், உதங்கர். வரம் தந்த கண்ணன் மீது, அவருக்கு கோபம் வந்தது. சட்டென்று முனிவர் முன் தோன்றி, 'என்ன உதங்கரே, இந்திரனிடம் தண்ணீர் கொடுத்து அனுப்பினேனே குடித்தீரா?' என்றார், கண்ணன். 'என்ன கண்ணா சொல்லுகிறாய். தாழ்ந்த குலத்தவன் கொடுக்கும் தண்ணீரை எப்படி அருந்துவது?' என்று கேட்டார், உதங்கர். 'உதங்கரே, ஆண்டவன் படைத்த உயிர்களில், உயர்வு, தாழ்வு எதுவுமில்லை என்பது உமக்குத் தெரியாதா? 'தாழ்ந்த குலத்தவனாக வந்தவன், இந்திரன். அவன் குடுவையில் இருந்தது அமிர்தம். அதை அருந்த மறுத்து விட்டாயே...' என்றார். பக்குவமும், ஞானமும் இல்லாமையால், அமிர்தத்தையே இழந்தார், உதங்கர். ஆனாலும், அவர் மீது கருணை காட்டி, உதங்கர் விரும்புகிற போது, வானத்தில் மேகங்கள் கூடி மழை பொழிய அருளினார், கண்ணன். அவற்றை, 'உதங்க மேகம்' என்று சொல்வர். உருவத்தை மட்டும் பார்த்தால், உண்மை கண்ணில் படாமல் போய்விடும் என்பதை விளக்கும் கதை இது.பி. என். பி.,