ஞானானந்தம் - தர்ம தேவதைக்கே சாபம் தந்தவர்!
மாண்டவ்யர் என்ற முனிவர், தவத்தில் ஆழ்ந்திருந்த போது, அவருடைய ஆசிரமத்துக்குள் சில திருடர்கள் வந்து பதுங்கிக் கொண்டனர். அவர்கள் கொள்ளையடித்த பொருட்களையும் ஆசிரமத்தில் மறைத்து வைத்தனர். திருடர்களை துரத்தி வந்த காவலர்கள், தவத்திலிருந்த முனிவரிடம் விசாரித்தனர். தவ யோகத்தில் இருந்ததால், பதில் கூறாமல் மவுனம் காத்தார், மாண்டவ்ய முனிவர்.ஆசிரமத்துக்குள் தேடி, திருடர்கள் விட்டுச் சென்ற பொருட்களை கைப்பற்றினர். மேலும், திருடர்களுக்கு இந்த முனிவரே தலைவர் என நினைத்து, அரசரிடம் கூறினர், காவலர்கள்.ஒரு திருடன், முனிவர் வேடம் போட்டு இருக்கிறானா என்ற கோபத்தில், 'அந்த திருடனை கழுமரத்தில் ஏற்றுங்கள்...' எனக் கூறிவிட்டார், அரசர். கழுமரத்தில் ஏற்றுவது என்பது, கூர்மையான உயரமான மரத்தில், உயிருடன் உடலை குத்தி வைப்பது. இது மரண தண்டனைக்கு சமமானது. தவயோகத்தில் இருந்தபோது, கழுமரத்தில் ஏற்றினர். பல நாட்களாக உணவு, தண்ணீர் இல்லாமல், கழுமரத்தில் தொங்கிக் கொண்டிருந்தார், மாண்டவ்ய முனிவர். உண்மை அறிந்து, தான் விசாரிக்காமல் செய்த தவறை உணர்ந்து, மன்னிப்பு கேட்டான், அரசன். அறியாமல் தவறு செய்த அரசன் மீது கோபம் வரவில்லை. ஆனால், தனக்கு ஏன் இப்படி ஒரு நிலை ஏற்பட்டது என்பதை அறிந்து கொள்ள, தர்ம தேவதையிடமே நியாயம் கேட்டார், மாண்டவ்யர்.அப்போது, 'மாண்டவ்யரே, நீர் சிறுவனாக இருந்த போது, வண்டுகளையும், சிறு பறவைகளையும் துன்புறுத்தினீர். அந்த பாவத்தின் பலனையே இப்போது அனுபவிக்க நேர்ந்தது...' என்று கூறினார், தர்ம தேவதை. 'பாவ புண்ணியம் தெரியாத குழந்தைப் பருவத்தில், செய்த தவறுக்கு இவ்வளவு பெரிய தண்டனையை கொடுத்த நீ, பூமியில் மனிதப் பிறவி எடுப்பாயாக...' என்று, கோபத்துடன், தர்ம தேவதைக்கு சாபம் தந்துவிட்டார், மாண்டவ்ய முனிவர். முனிவரின் சாபத்தால், விசித்திர வீர்யனின் மனைவி அம்பாலிகையின் வேலைக்காரி ஒருத்தியின் வயிற்றில் பிறந்தார், தர்ம தேவதை. அவர் தான், தர்மவானாகப் போற்றப்படும், விதுரன். அந்த விதுரனின் நல்வார்த்தைகளை அலட்சியம் செய்ததால் தான், பாரதப் போரில் கவுரவர்கள் அழிந்தனர். தர்ம தேவதையையே கண்டிக்கும் ஆற்றல், தவ வலிமைக்கு உண்டு என்பதை உணர்த்தும் சம்பவம் இது. பி. என். பி.,