ஞானானந்தம் - பழி போடாதீர்!
கிராமத்தில் வளர்ந்த நெட்டையனுக்கு, பொறாமைக் குணம் அதிகம். அக்கிராமத்தை சேர்ந்த குட்டையன் மீது, இவனுக்கு பொறாமை ஏற்பட்டது. அவன் எல்லாரிடமும் நயமாக பேசுவதும், நல்ல பெயர் எடுப்பதும் நெட்டையனுக்கு பிடிக்கவில்லை.எனவே, அவன் பெயரை கெடுக்கும் வகையில் ஏதாவது செய்ய வேண்டும் என்று திட்டமிட்டான். ஊர் பஞ்சாயத்தில், குட்டையன் மீது பொய்யான பழியை சுமத்தினான். இதையடுத்து, பஞ்சாயத்தார் அவனுக்கு தண்டனையும் கொடுத்தனர்.சில நாட்கள் கடந்தன. வீண் பழி சுமத்தப்பட்டதால், மிகவும் அவமானத்துடன் வாழ்ந்து வந்தான், குட்டையன். அவனது பரிதாப நிலையை பார்த்த, நெட்டையனுக்கு மனம் வலித்தது. மனசாட்சி உறுத்தியது. தான் மிகப்பெரிய தவறு செய்து விட்டதாக நினைத்தான். இந்த பாவத்திற்கு, பரிகாரம் தேடத் துவங்கினான்.பக்கத்து ஊரில் சாது வந்திருப்பதை அறிந்து, அவரை தேடிச் சென்றான், நெட்டையன். தன் தவறை அவரிடம் விளக்கிக் கூறி, அதற்கு என்ன பிராயசித்தம் என்றும் கேட்டான்.சற்று நேரம் யோசித்தார், சாது.பின், '3 கிலோ இலவம் பஞ்சை எடுத்து போய், இன்று இரவு, குட்டையன் வீட்டுக்கு முன்னால், அதை பரப்பி விட்டு வந்து விடு. அதன்பின், நாளை வந்து என்னை பார்...' என்றார்.ஊர் திரும்பிய நெட்டையன், சாது கூறியது போல், இலவம் பஞ்சை எடுத்து, குட்டையன் துாங்கிய பின், அவன் வீட்டுக்கு முன், பரப்பினான். மறுநாள் காலை, சாதுவை வந்து சந்தித்தான்.'சுவாமி... நீங்கள் கூறியபடியே, நேற்று இரவு, குட்டையன் வீட்டு முன், இலவம் பஞ்சை பரப்பி விட்டேன்...' என்றான்.'இப்போது, குட்டையன் வீட்டுக்கு போய், நேற்று பரப்பி வைத்த பஞ்சையெல்லாம் அள்ளி எடுத்து வா...' என்றார், சாது.சாது கூறியதை கேட்டு குழம்பிய நெட்டையன், அவர் சொல்படியே செய்ய வேண்டும் என்று எண்ணி, ஊருக்கு சென்றான்.அங்கே, குட்டையன் வீட்டில் நேற்றிரவு பரப்பி வைத்திருந்த பஞ்சு, துளிக் கூட காணவில்லை. அனைத்தும் காற்றில் எங்கெங்கோ பறந்து போயிருந்தது. அதிர்ந்து போனான்.ஏமாற்றத்துடன் சாதுவிடம் வந்தவன், அங்கே எதுவும் இல்லை என்பதை தெரிவித்தான்.அதைக் கேட்டு, சிரித்தார், சாது.'நீ பரப்பிய பஞ்சை இப்போது உன்னால் அள்ள முடியவில்லை. அப்படித்தான் ஒருவர் மீது வீண் பழியை சுமத்தினாலும், அதை திருப்பி அள்ள முடியாது. அதனால், உனக்கு ஏற்பட்ட பாவத்தை போக்க முடியாது...' என்றார்.இதைக் கேட்டதும் நொந்து போனான், நெட்டையன். 'சுவாமி... பரிகாரம் கேட்டால், இப்படிச் சொல்கிறீர்களே... உங்களை மலை போல நம்பித்தானே வந்தேன்...' என்று கதறினான், நெட்டையன். 'என்னால் எதுவும் செய்ய முடியாது. உன் தவறுக்காக கடவுளிடம் மன்னிப்பு கேள். அது மட்டும் தான் ஒரே வழி...' என்றார், சாது.வீண் பழியை பிறர் மீது சுமத்தினால், பின்னர், உங்கள் மனசாட்சியே உங்களை பாடாய் படுத்தும். அதற்கு விமோசனம் கிடைக்கவே கிடைக்காது.- பி.என்.பி.,