உள்ளூர் செய்திகள்

ஞானானந்தம்: மனக்கட்டுப்பாடு அவசியம்!

தேவர்களின் குருவாகிய, பிரஹஸ்பதியிடம் கல்வி கற்கையில், பிரஹஸ்பதியின் மனைவியான தாரையின் மேல் ஆசை கொண்டான், சந்திரன். இதனால், கோபமடைந்த பிரஹஸ்பதி, 'காச நோயால் துன்புறுவாய்...' என, சந்திரனை சபித்தார்.இதற்கிடையில், சந்திரனை மிகச்சிறந்த அழகனாக மதித்து, தக்ஷன் தன், 27 மகள்களை அவருக்கு மணமுடித்துக் கொடுத்தார். ஆனால், சந்திரன் அவர்களுள், ரோகிணியிடம் மட்டும் அதிக அன்பு செலுத்தியதால், மற்ற மனைவியர் தங்களது தகப்பனாரான தக்ஷனிடம் புகார் தெரிவித்தனர்.சந்திரனுக்கு பல அறிவுரைகளை தக்ஷன் கூறியும், அவை பயனில்லாமல் போயின. இதனால், கோபம் கொண்ட தக்ஷன், 'சந்திரனுடைய கலைகள் அனைத்தும் நாளுக்கு நாள் குறையட்டும்...' என, சபித்தார்.சாபத்தால் ஒளியிழந்த சந்திரன், முழுமுதற் கடவுளான விஷ்ணுவை அணுகி, தன்னுடைய ஒளியிழந்த நிலையைக் கூறி குமுறினார்.கருணை உள்ளம் கொண்டவரான பகவான் ஸ்ரீ விஷ்ணு, 'திருவரங்கம், சுகந்தவனம் மற்றும் தலைச்சங்காடு ஆகிய திருத்தலங்களுக்கு சென்று, அங்குள்ள புஷ்கரணியில் நீராடி, என்னை வழிபட்டால் உம் சாபங்கள் நீங்கும்...' எனக் கூறி, சந்திரனின் சாப விமோசனத்திற்கான வழியைக் கூறினார்.இப்படியாக, புலன்களுக்குத் தலைவராக இருக்கக்கூடிய முழுமுதற் கடவுளான பகவான் ஸ்ரீ விஷ்ணு, புலன் மற்றும் மனக் கட்டுப்பாட்டை இழந்த சந்திரனுக்கு ஏற்பட்ட கொடூர சாபத்தை முழுமையாகப் போக்கி அருள்பாலித்தார்.மனக் கட்டுப்பாட்டை இழப்பதால் தான், நாமும் சந்திரனைப் போன்று பலவித துன்பங்களுக்கு ஆளாகிறோம்.பகவான் ஸ்ரீ கிருஷ்ணர், பகவத் கீதையில் கூறுகிறார்:மனதின் உதவியுடன் ஒருவன் தன்னை உயர்த்திக் கொள்ள வேண்டுமே ஒழிய, தாழ்த்திக் கொள்ளக் கூடாது. மனமே, கட்டுண்ட ஆத்மாவின் நண்பனும், எதிரியுமாகும். மனதை வென்றவனுக்கு மனமே சிறந்த நண்பன். ஆனால், அவ்வாறு செய்யத் தவறுபவனுக்கோ அதுவே மிகப்பெரிய விரோதியாகும்.அருண் ராமதாசன்அறிவோம் ஆன்மிகம்!அடிக்கடி உடல்நல குறைவும், மன சஞ்சலமும் ஏற்படுகிறதா? தினமும் சூரிய நமஸ்காரம் செய்து, கிழக்கு நோக்கி அமர்ந்து, 'ஆதித்ய ஹிருதயம்' தோத்திரம் கூறி வரவும். உடல் ஆரோக்கியமாகும், மன சாந்தியும் ஏற்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !