ஞானானந்தம்: மரியாதை கிடைக்க வேண்டுமா!
இரவில் மாறு வேடத்தில் நகர்வலம் வந்தார், மன்னர் ஒருவர். காவலர்களும் கூடவே சென்றனர். திடீரென்று சூறைக்காற்றுடன் பெரும் மழை பெய்தது. வீதிகளில் வெளிச்சத்துக்காக ஏற்றி வைத்திருந்த விளக்குகள் அணைந்து விட்டன. இருட்டில் காவலர்களிடமிருந்து பிரிந்து, வழிதவறி எங்கோ போய் விட்டார், மன்னர்.துாரத்தில் வெளிச்சம், ஒரு சிறு புள்ளியாகத் தெரிய, அதை நோக்கி நடந்தார், மன்னர். அது ஒரு குடிசை. அந்தக் குடிசைக்குள் கிழிந்த ஆடை அணிந்த ஒரு மனிதன் இருந்தான். மாறுவேடத்தில் இருந்தாலும், மிடுக்கான தோரணையுடன் குடிசைக்குள் நுழைந்தார், மன்னர்.மன்னரை பார்த்தும் எந்தச் சலனமும் இல்லாமல் அமர்ந்திருந்தான், அந்த மனிதன். அவன் மரியாதை தராமல் அமர்ந்திருந்ததில் மன்னருக்குக் கோபம் வந்தது.'உன் வீட்டுக்கு வந்திருக்கிறேன். நீ மரியாதையே இல்லாமல், ஒரு வணக்கம் கூடச் சொல்லாமல் உட்கார்ந்திருக்கிறாயே?' என்றார். 'மழையிலிருந்து தப்பிக்க, நீ தான் என் வீட்டுக்குள் அடைக்கலம் புகுந்திருக்கிறாய். உனக்கு ஏன் நான் வணக்கம் சொல்ல வேண்டும்?' என்றான், அவன்.மன்னரால் இதைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அவர் எப்போதும் நகர்வலம் செல்லும்போது இடுப்பில் ஒரு பொற்காசு மூட்டையை வைத்திருப்பார். அதை அவனிடம் பிரித்துக் காட்டி, 'பார்த்தாயா... நான் எவ்வளவு பெரிய ஆள் தெரியுமா? இப்போது எனக்கு வணக்கம் சொல்வாயா?' என்றார். அவன் அலட்சியமாக, 'இப்படி ஒரு ஏழை பக்கத்தில் இருந்தும், ஒரு மூட்டை பொற்காசை நீயே வைத்திருக்கிறாயே, உனக்கு எப்படி வணக்கம் சொல்வது?' என்றான்.மன்னர் கோபமாக அதிலிருந்து ஒரு பொற்காசை எடுத்து அவனிடம் வீசி, 'இப்போது வணக்கம் சொல்வாயா?' என்றார். அவன் அந்தக் காசை எடுக்கவில்லை. 'ஒரு மூட்டை பொற்காசை, கையில் வைத்திருக்கிறாய். அற்பமாக ஒற்றைக் காசை எடுத்து வீசுகிறாயே, உனக்கா வணக்கம் சொல்வேன்?' என்றான்.இன்னும் உக்கிரமானார், மன்னர். பாதி மூட்டையை அவனருகே பிரித்துக் கொட்டி விட்டு, 'சரிபாதியை உனக்குக் கொடுத்து விட்டேன். இப்போதாவது வணக்கம் சொல்வாயா?' என்றார்.அவன் முகத்தில் இப்போது மெல்லிய புன்னகை.'உன்னிடம் இருக்கும் அளவுக்கு என்னிடமும் இப்போது பொற்காசுகள் உள்ளன. இருவரும் சமமாகி விட்டோம். எனக்கு சரிசமமாக இருக்கும் உன்னை எதற்கு, நான் வணங்க வேண்டும்?' எனக் கேட்டான்.மன்னருக்கு ஆத்திரம் கண்ணை மறைத்தது. மிச்சமிருந்த மூட்டையும் அவனிடம் வீசினார். 'என்னிடம் இருந்த எல்லாப் பொற்காசுகளையும் கொடுத்து விட்டேன். இப்போதாவது எனக்கு வணக்கம் சொல்...' என்றார், மன்னர்.அவன் சிரித்துக் கொண்டே, 'இப்போது என்னிடம் ஒரு மூட்டை தங்கம் இருக்கிறது. உன்னிடம் ஒன்றுமே இல்லை. நியாயமாகப் பார்த்தால், நீ தான் எனக்கு வணக்கம் சொல்ல வேண்டும்...' என்றான்; திகைத்துப் போனார், மன்னர்.நிரந்தரமான மரியாதை என்பது, பணத்தைக் கொடுத்து வாங்கும் பொருள் இல்லை. உண்மையான அன்பையும், மரியாதையையும் பிறருக்கு கொடுங்கள். அதுவே பலமடங்காக திரும்பக் கிடைக்கும்.அருண் ராமதாசன்