உள்ளூர் செய்திகள்

இது உங்கள் இடம்!

மளிகைக்கடைக்காரரின் நல் மனசு!எங்கள் பகுதியில், மளிகைக்கடை நடத்தி வந்த நபர் ஒருவர், கடையை விற்று விட்டு, சொந்த ஊருக்கு செல்ல இருந்தார்.'கடையில் நிறைய லாபம் கிடைத்து வரும் நிலையில், கடையை விட வேண்டிய அவசியம் என்ன...' என்று கேட்டேன்.அதற்கு, 'டாக்டருக்கு படித்திருக்கும் மகன், தனியாக கிளீனிக் ஆரம்பிக்க இருக்கிறான். அவனுக்கு, ஒத்தாசையாக இருக்க விரும்புகிறேன். கடையை வாங்குவதற்கு, ஆள் இருந்தால் கூறுங்கள். பொருட்களுக்கு ஒரு விலை போட்டுக்கலாம். கட்டடத்தை வாடகைக்கு விட்டிருக்கும் நபரிடமும், நான் பேசி கொள்கிறேன்...' என்றார்.தனியார் நிறுவனத்தில், தினசரி ஊதியத்தில் வேலை பார்க்கும் நண்பர் ஒருவர், சம்பளம் போதவில்லை என, புலம்புவார். அதை மனதில் வைத்து, நண்பரிடம், 'கடையை நீ எடுத்து நடத்தலாமே...' என்றேன்.'கடை நடத்துவது குறித்து எனக்கு எதுவும் தெரியாது. நஷ்டம் வந்தால் என்ன செய்வது?' என்றார், நண்பர்.'நான் உங்களுக்கு வழிகாட்டுகிறேன். எந்ததெந்த பொருட்கள் எங்கு சென்று வாங்கினால், லாபம் கிடைக்கும், வாடிக்கையாளர்களிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும். பற்று - வரவு கணக்குகளை எப்படி எழுதி வைத்திருக்க வேண்டும் என, ஆதிமுதல் அந்தம் வரை சொல்லித் தருகிறேன்...' என்றார், மளிகைக்கடைக்காரர்.நம்பிக்கையுடன், கடையை எடுத்துக் கொண்டார், நண்பர்.மளிகைக்கடைக்காரர் வழிகாட்டுதலால், நண்பரது கடை நல்ல, 'பிக் - அப்' ஆகி, வியாபாரம் நன்றாக நடக்கிறது.தினசரி ஊதியத்தில் கஷ்ட ஜீவனம் நடத்தி வந்த நண்பர், இப்போது நிம்மதியாக இருக்கிறார்.தான் மட்டும் வாழ வேண்டும், பிறர் எக்கேடு கெட்டு போனால் என்ன என, எண்ணாமல், தொழில் ரகசியத்தை சொல்லித் தந்த, அந்த நபரை, நண்பரின் குடும்பத்தினர் அனைவரும் வாயார வாழ்த்தி வருகின்றனர்.பி.என்.பத்மநாபன், கோவை.சம்பாதிக்க ஆயிரம் வழிகள்!என் வீட்டிற்கு அருகில், ஒரு அலுவலகம் இருக்கிறது. அங்கே பணி செய்யும் பெண்களில், பெரும்பாலானவர்களுக்கு, மூன்று மற்றும் நான்கு வயதில், குழந்தைகள் உள்ளனர்.பெரும்பாலும், இவர்கள் தங்கள் குழந்தைகளை வயதான, தன் தாயார் அல்லது மாமனார் - மாமியாரிடம் ஒப்படைத்து விட்டு வருவர். சில நேரங்களில் இந்த பெரியவர்கள் வெளியில் செல்ல, உடல்நிலை சுகவீனம் அடைந்தால், குழந்தைகளை அவர்களிடம் ஒப்படைத்து வர சங்கடப்படுவர்.எனக்கு ஒரு யோசனை உதித்தது. 50 - 55 வயதிற்குட்பட்ட, ஏழ்மை குடும்பத்தை சேர்ந்த நான்கு பெண்மணிகளுக்கு, அந்த அலுவலகத்தின் அருகிலேயே, ஒரு இடத்தை வாடகைக்கு எடுத்து, குழந்தைகளை பார்த்துக் கொள்ள ஏற்பாடு செய்தேன்.'குழந்தைகளை இங்கே கொண்டு வாருங்கள். நாங்கள் கண்ணும் கருத்துமாக, உங்கள் குழந்தைகளை பார்த்துக் கொள்கிறோம்...' என்று அலுவலக பெண்களிடம் கூற, குழந்தைகளை இப்பெண்மணிகளின் பொறுப்பில் விட்டனர். கைக்கு கணிசமான பணமும் கிடைக்கிறது.அந்த அலுவலகத்தில் வேலை செய்யும், பெண்களே, தினமும் ஆளுக்கு ஒருவராக, அப்பெண்மணிகளுக்கு மதிய உணவும் கொண்டு வந்து விடுகின்றனர். அதுமட்டுமின்றி, தேவையான துணிமணி, படுக்கை வசதிகள், சில நேரங்களில் மருந்து மாத்திரைகள் கூட, வாங்கித் தந்து உதவி செய்கின்றனர்.இந்த, நான்கு பெண்மணிகளும், அப்பெண்களுக்கு, அருகில் உள்ள காய்கறி மார்க்கெட்டில், பல சரக்கு கடைகளில் இருந்து வேண்டிய பொருட்களை வாங்கி வந்து வைத்து, மாலையில் குழந்தைகளை அழைத்துச் செல்ல வரும் போது, அவர்களிடம் சேர்ப்பித்தும் விடுகின்றனர்.வீட்டிலிருந்தே வேலை வாய்ப்பு பெற, பணம் சம்பாதிக்க, ஆயிரமாயிரம் வழி இருக்கிறது. கொஞ்சம் தைரியமாக இருக்கணும். கொஞ்சம் கூடுதலாக சிந்திக்கணும். கொஞ்சம் கூடுதலாக முயற்சிக்கணும். வாழ்வது சுலபம்; பணம் சம்பாதிப்பதும் சுலபம்.செல்வபெருமாள், காஞ்சிபுரம்.வீடு வாங்குபவர்களே!பழைய வீடு ஒன்றை வாங்கி, அதை புதுப்பிக்கும் முயற்சியில் இறங்கினார், நண்பர்.வீட்டை பார்வையிட அவர் வீட்டிற்கு சென்றேன்.மதில் சுவர், தோட்டம் பராமரிப்பு மற்றும் புதிய செடி நடும் வேலைகள் நடந்து கொண்டிருந்தது.அதில் ஈடுபட்டிருந்த ஒருவர், 'செப்டிங் டேங்க் சிலாப்' உடைந்து, குழிக்குள் விழுந்து விட்டார். அவரை மீட்டு, மருத்துவமனைக்கு அழைத்து சென்றோம்.பழைய வீட்டை விலைக்கு வாங்குவோர், 'செப்டிக் டேங்க்' குறித்து, வீட்டாரிடம் கேட்டு தெரிந்து கொள்வதில்லை. பராமரிப்பு மற்றும் தோட்ட வேலைகள் செய்யும்போது தான், அதுபற்றி தெரிய வரும்.விலை குறைவாகவும், 'ரெடிமேட்' ஆகவும் உள்ள, 'செப்டிக் டேங்கை' வாங்கி அமைக்கின்றனர், சிலர். இது, பலம் குறைந்து, உடைந்து, ஆபத்தை விளைவிக்கும்.பழைய வீடோ, புதிய வீடோ, எதை வாங்கினாலும், சம்பந்தப் பட்டோரிடம், 'செப்டிக் டேங்க்' குறித்த விபரங்களை கேட்டு, தெரிந்து கொள்வது நல்லது!அ.துரைமணி, கன்னியாகுமரி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !