இது உங்கள் இடம்!
பணி ஓய்வில் சமூக தொண்டு!என் நண்பனின் தந்தை, ஓய்வு பெற்ற உடற்கல்வி ஆசிரியர். வயது முதிர்வால், உடல் தளர்ச்சி அடைந்திருந்தாலும், உள்ளத்தை சுறுசுறுப்பாக வைத்திருப்பவர்.அவர் வசிக்கும் குடியிருப்பு பகுதியில், தினமும் காலை மற்றும் மாலை நேரங்களில், நீரிழிவு மற்றும் இதய நோயால் பாதிக்கப்பட்ட முதியோர் பலர், நடைப்பயிற்சி செய்வர். அவர்களை ஒருங்கிணைத்து, எளிமையான உடற்பயிற்சிகளை கற்றுக் கொடுத்தார்.இதை பார்த்து, அக்குடியிருப்பில் உள்ள இல்லத்தரசிகள் பலர், தாமாகவே முன்வந்து அவரிடம் பயிற்சி எடுத்து ஆரோக்கியத்தை பராமரித்து வருகின்றனர்.அதுமட்டுமின்றி, பண்டிகை தினங்களில் குடியிருப்புவாசிகளுக்கு விளையாட்டு போட்டிகள் வைத்து, அவர்களை உற்சாகப்படுத்தி, சொந்த செலவில் பரிசுகள் வழங்கியும் மகிழ்விக்கிறார்.தன்னலமற்ற சமூகத் தொண்டால், தன்னையும், தன்னை சுற்றி இருப்பவர்களையும் பாதுகாத்து, அனைவரது அன்பையும் சம்பாதித்து, பாராட்டு பெற்று வருகிறார்.இவரைப் போலவே, பணி ஓய்வு பெற்ற பலரும், அவரவர் துறை சார்ந்த வழிகாட்டுதல் பயிற்சிகளை, தங்களை சுற்றியுள்ளவர்களுக்கு செய்யலாமே!டி.எல்.குமார், விழுப்புரம்.ரிலாக்ஸ் செய்யும், ரிக்கார்ட் டான்ஸ்!ஒருநாள் மாலை, கிராமத்திலுள்ள நண்பர் வீட்டிற்குச் சென்றிருந்தேன். அவருடன் பேசி விட்டுக் கிளம்ப, இரவு, 9:00 மணி ஆகிவிட்டது.'டூ - -வீலரில்' வீடு திரும்பும்போது, அவ்வூரிலுள்ள பொதுத் திடலில், நாடோடி குடும்பம் ஒன்று, சீரியல் பல்புகளின் சரம் கட்டி, ஒலிபெருக்கி வைத்து, 'ரிக்கார்ட் டான்ஸ்' ஆடிக் கொண்டிருந்ததைப் பார்த்தேன்.சிறு வயதில், எப்போதோ இப்படியான நிகழ்ச்சியைப் பார்த்த ஞாபகம் வர, 'டூ- - வீலரை' ஓரங்கட்டி, அங்கிருந்த கும்பலோடு இணைந்து, 'ரிக்கார்ட் டான்ஸ்' பார்க்கத் துவங்கினேன்.பழைய மற்றும் புதிய சினிமா பாட்டுகளை ஒலிக்கவிட்டு, 'டான்ஸ்' ஆடி மகிழ்வித்தனர். அதுமட்டுமின்றி, இடையிடையே, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், மின் சிக்கனம், போக்சோ சட்டம், 'ஹெல்மெட்' அணிந்து, 'டூ - வீலர்' ஓட்டுதல் மற்றும் போக்குவரத்து விதிகளை மதித்தல் என, பல்வேறு ஓரங்க நாடகங்களையும் நடத்தினர்.கால மாற்றத்திற்கு ஏற்றவாறு, தங்கள் நிகழ்ச்சி முறையை மாற்றி, சமூக நலனுக்கும் முக்கியத்துவம் கொடுத்து வரும், அந்த நாடோடிகளுக்கு, மன நிறைவோடு பணப்பரிசு அளித்து, பாராட்டிவிட்டு வந்தேன்!-எம்.முகுந்த், கோவை.வியக்கவைத்த மருந்து கடை சிப்பந்தி!சமீபத்தில் உடல் நலம் சரியில்லாததால், மருத்துவரை அணுகி, அவர் எழுதி கொடுத்த மாத்திரை சீட்டுடன், மருந்து கடைக்கு வந்தேன்.எனக்கு முன்னால் நின்றிருந்த நபருக்கு, மருந்துகளை பட்டியல்படி எடுத்துக் கொடுத்த கடை சிப்பந்தி, அவரது பட்டியலில் இருந்த ஒரு குறிப்பிட்ட மருந்துக்கு எதிரே இருந்த எண்ணிக்கையை பேனாவால் சுழித்தார். கடை சீலை வைத்து, முழுதும் வழங்கப்பட்டது எனக் குறிப்பிட்டு, தேதியையும் எழுதினார். அந்த நபர் சென்றதும், இதுகுறித்து, கடை சிப்பந்தியிடம் விபரம் கேட்டேன்.அதற்கு, 'அந்த மருந்து, மனதை அமைதிப்படுத்தி, துாக்கம் வரவழைப்பது. மருத்துவர் பரிந்துரைப்படியே அந்த மாத்திரை வழங்கப்பட வேண்டும். இதே சீட்டைக் காட்டி, பல மருந்து கடைகளில் மாத்திரைகளைப் பெற்று, தவறான வழியில் பயன்படுத்தி விடும் அபாயம் இருக்கிறது. அதற்காகவே, சீட்டில் சுழித்து, கடையின் சீலை வைத்தேன்...' என்றார், சிப்பந்தி.வியாபாரத்தை மற்றும் பார்க்காமல், மனித உயிரின் மேல் அவர் கொண்ட அக்கறை, என்னை வியக்க வைத்தது.ஆர்.பிரகாஷ், பொன்மலை, திருச்சி.