உள்ளூர் செய்திகள்

இது உங்கள் இடம்!

இப்படியும் வருமானம் ஈட்டலாம்!கிராமத்தில் வசிக்கும் உறவினர் ஒருவர், தன் சொந்த இடத்தில், விவசாயம் செய்து வருகிறார். அவருடைய நிலத்துக்கு அருகிலேயே ஆறு ஓடுவதால், பாசன வசதிக்கு குறைவில்லை.அவருடைய, இரண்டு மகன்களும், குடும்பத்தோடு வெளிநாடுகளில் பணிபுரிவதால், மனைவியோடு தனிமையில் வசிப்பது, மனதுக்கு வேதனையாக இருப்பதாக கூறி வருந்தினார்.அவரின் தனிமையை விரட்டவும், கூடுதல் வருமானத்திற்காகவும் ஓர் ஆலோசனை கூறினேன், நான்.அதன்படி, அவருடைய விவசாய பண்ணையில், சகல வசதிகளுடன் சிறிய குடில்களை கட்டினார். சந்தடி மிகுந்த நகர வாழ்க்கையிலிருந்து ஒதுங்கி, இயற்கையான சூழலில் சில நாட்கள் அமைதியாக தங்கி, புத்துணர்வு பெற விரும்பும் குடும்பத்தினருக்கு, வாடகைக்கு விடத் துவங்கினார்.அவ்வாறு தங்குவோருக்கு அவர்கள் விரும்பும் கிராமத்து உணவு வகைகளையும் சமைத்துக் கொடுக்கவும், ஆட்களை நியமித்தார். பொழுதுபோக்கு வசதிகளை ஏற்படுத்தி வைத்திருந்தாலும், புகை, மது உள்ளிட்ட போதை வஸ்துக்களுக்கு, கண்டிப்பான தடை விதித்திருக்கிறார்.இப்போது, அவருடைய பண்ணை வீட்டுக்கு வருவோருடன் பேசி பழகுவதால், மகிழ்ச்சியாக இருப்பதாக கூறினார்.கிராமங்களில் விசாலமான பண்ணை வைத்திருப்போர், அதில் தங்கும் விடுதிகள் போல சின்ன சின்ன குடில்களை கட்டி, வருமானம் ஈட்டலாமே!— வி.முருகன், காஞ்சிபுரம்.ரயிலில் பயணம் செய்கிறீ்ர்களாசமீபத்தில் என் சொந்த ஊருக்கு செல்ல, சென்னை எழும்பூரில் இருந்து, ரயிலில் புறப்பட்டேன். வழியில் குடிக்க தண்ணீர் பாட்டில், இரண்டு வைத்திருந்தேன். அவற்றை என் இருக்கைக்கு முன் இருந்த பாட்டில் வைக்கும் பகுதியில் வைத்தேன்.இதைப் பார்த்து, 'தம்பி, ரொம்ப துாரத்துக்கு பயணம் பண்ற மாதிரி இருந்தால், தண்ணீர் பாட்டிலை இரவு நேரத்தில் இப்படி வெளியே வைத்துவிட்டு துாங்காதீர்கள்.'ஏனெனில், வழியில் இந்த பாட்டிலில், கயவர்கள் ஊசி மூலம் மயக்க மருந்தை கலந்து விடுவர். நாம் அது தெரியாமல் இரவில் எடுத்து குடித்துவிட்டால் மயக்க நிலைக்கு சென்றுவிடுவோம்.'பிறகு நம் உடமைகள், 'அபேஸ்' ஆகிவிடும். எனவே, தண்ணீர் பாட்டிலை உங்களின் பையிலேயே வைத்து விடுங்கள். இரவில் தாகம் எடுத்தால் எடுத்து குடியுங்கள்...' என்று, 'அட்வைஸ்' செய்தார், அருகில் பயணித்த பெரியவர் ஒருவர்.மேலும், 'எனக்கு தெரிந்த ஒரு குடும்பத்தினர், இப்படி தண்ணீர் பாட்டிலை வெளியே வைத்திருந்ததால், அதன் வழியாக மயக்க மருந்தை செலுத்தி, அவர்களுடைய உடைமைகளை திருடிச் சென்றுவிட்டனர்...' என்றார், அந்த பெரியவர்.அவர் கூறியதை கேட்டு, தண்ணீர் பாட்டிலை பையில் வைத்து, அவருக்கு நன்றி தெரிவித்தேன்.ரயிலில் பயணம் செய்யும் நண்பர்களே... நீங்களும் இதை கடைப்பிடியுங்கள்.— வெ.காந்தி, சென்னை.இப்படியும் ஓர் ஜோசியர்!எங்கள் பகுதியில் உள்ள பள்ளிக்கூடம் ஒன்றின் அருகில், கைரேகை ஜோசியர் ஒருவர், தொடர்ந்து, இரண்டு நாட்களாக, மாலை நேரத்தில் இருந்ததை கவனித்தேன்.'பள்ளி மாணவ - மாணவியர் மட்டுமே இந்த பகுதியில் நடமாடும் நிலையில், இவர் யாருக்கு ஜோசியம் பார்க்க, இப்படி சாலை ஓரம் அமர்ந்து இருக்கிறார்...' என யோசித்தேன்.அதே பள்ளியில், பிளஸ் 2 பயிலும் உறவினர் மகனிடம், 'உங்க பள்ளி முன், ஜோசியர் ஒருவர் இருக்கிறாரே, அவர் யாருக்கு ஜோசியம் பார்க்க அமர்ந்து இருக்கிறார்...' என்றேன்.அதற்கு, 'எங்க பள்ளி மாணவர்களுக்கு தான்! படிப்பு வருமா, வராதா என, மாணவர்களை அழைத்து ஜோசியம் பார்த்து சொல்வார். அதற்கு, 50 ரூபாய் கட்டணம் வசூல் செய்கிறார். மேலும், மாணவர்களிடம், நைசாக, 'காதல் வருமா... வராதா...' என, கூறுவதாக சொல்லி, அதற்கு கூடுதலாக, 50 ரூபாய் கட்டணம் வாங்குகிறார்.'மாணவர்களும், தங்களது வீட்டில் பொய் சொல்லி, பணம் வாங்கி வந்து, ஜோசியம் பார்க்கின்றனர். ஜோசியம் பார்த்த பல மாணவர்கள், இப்போது, காதலிக்க முயற்சி செய்து, படிப்பில் கவனம் செலுத்தாமல் இருக்கின்றனர்...' என, ஒளிவு மறைவு இல்லாமல் கூறினான்.அதைக்கேட்டு அதிர்ச்சியடைந்தேன்.ஜோசியர், தன் சுய லாபத்திற்காக மாணவர்களின் எதிர்காலத்தோடு விளையாடுகிறார் என்று புரிந்தது.மறுநாள், அவரிடம், 'இனிமேல் இது போன்று கல்வி நிலையங்களின் பக்கத்தில், ஜோசியம் பார்க்கிறேன் என கூறி, அமர்ந்திருந்தால் நடக்கிறதே வேற...' எனக்கூறி, எச்சரிக்கை செய்தேன். மேலும், பள்ளி தலைமையாசிரியரிடமும் தகவல் கூறி, நடவடிக்கை எடுக்க செய்தேன்.- பி.என்.பத்மநாபன், கோவை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !