உள்ளூர் செய்திகள்

இது உங்கள் இடம்!

மனைவியிடம், 'ஈகோ' பார்க்காதீர்கள்!சமீபத்தில், என் உறவினர் ஒருவரை சந்தித்தேன். அவர், திருமணமாகி, இரண்டு குழந்தைகள் பெற்ற பிறகு, மனைவியை விவாகரத்து செய்துவிட்டு, தற்போது தனியாக வசித்து வருகிறார்.பள்ளியில் பயிலும் குழந்தைகளை பார்க்க ஆசையாக இருப்பதாகவும், கோர்ட் அனுமதித்தாலும், அவருடைய முன்னாள் மனைவி, அதற்கு சம்மதிப்பதில்லை என வருந்தினார்.இப்போது வருந்துபவர் தான், சில ஆண்டுகளுக்கு முன், படிப்பிலும், ஊதியத்திலும் தன்னைவிட மனைவி மேலாக இருக்கிறார் என, 'ஈகோ' பார்த்து, அவரை, 'டார்ச்சர்' செய்து, விவாகரத்துக்கு காரணமானவர்.சம்பாதிக்கும் பணம் மற்றும் சேமிப்பில் இருந்த தொகையை, 'ஆன்லைன்' சூதாட்டத்தில் இழந்ததோடு, பலரிடம் கடன் பெற்று, சூதாடி தோற்று, தற்சமயம் கடன்களை அடைக்க, இருந்த வீட்டை விற்று விட்டார். வாடகை வீட்டில் இப்போது வசிக்கிறார்.கடந்த காலத்தில் மனைவியை அனுசரித்து வாழாமல் இருந்து விட்டு, நிகழ்காலத்தில் புலம்பிக் கொண்டிருக்கிறார்.ஆணாதிக்க சிந்தனையோடு, யாருடைய அறிவுரையையும் கேளாமல், அடாவடியாக நடந்து கொண்டதன் பலனை, இப்போது அனுபவிப்பதாக கண்கலங்கினார்.இவரைப் பற்றி அறிந்த பிறகாவது, மனைவியிடம், 'ஈகோ' பார்க்கும் ஆணாதிக்கவாதிகள் திருந்தினால் சரி.— டி.எல்.குமார், விழுப்புரம்.நல்லதொரு செயல்!சமீபத்தில், கேரள மாநிலம், திருவனந்தபுரத்திற்கு போயிருந்தேன். அப்போது, இயற்கை உபாதையைக் கழிக்க, பஸ் நிலையத்தில் இருந்த கட்டண கழிப்பிடத்திற்கு சென்றேன்.அங்கு அமர்ந்திருந்த நபரின் மேஜையில், எண்ணெய், சோப், பல்பொடி, பிரஷ், பேஸ்ட், சீப்பு, முக பவுடர் மற்றும் பெண்களுக்கு தேவையான, 'சானிட்டரி நாப்கின்' மற்றும் குழந்தைகள், முதியவர்களுக்கு தேவையான, 'டைபர்' என, அனைத்தும் இருந்ததைக் கண்டு ஆச்சரியமடைந்தேன்.குறிப்பாக, வெகு துாரத்தில் இருந்து வரும் பயணிகளுக்கு, இது மிகவும் பயனுள்ளதாக இருந்தது.ஒவ்வொரு பொருளையும் தேடி தேடி அலைய வேண்டிய அவசியம் இல்லை. அனைத்தும் ஒரே இடத்தில் கிடைத்து விடுவதால், நேரமும் மிச்சமாகிறது.அதிகாலை நேரத்தில், கடைகள் திறக்கப்படாத சூழ்நிலையில், தேவையான பொருட்கள் கிடைப்பது வரவேற்கத்தக்கது.மற்ற மாநிலத்தில் உள்ள கட்டண கழிப்பிடங்களிலும் கடைப்பிடிக்கலாமே!— அ.துரைமணி, கன்னியாகுமரி.நடமாடும் நுாலகம்!எங்கள் வீட்டிற்கு கோடை விடுமுறையை கழிக்க, உறவினர் வீட்டு குழந்தைகள், விருந்தாளியாக வந்திருந்தனர்.ஒரு ஞாயிற்றுக்கிழமை எங்கள் பகுதிக்கு அருகில் இருக்கும், சிறுவர் பூங்காவுக்கு அந்த குழந்தைகளை அழைத்து சென்றேன். அப்போது, பூங்காவின் அருகில் ஒரு வேன் வந்து நின்றது. வேனை கண்டதும், பூங்காவில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகள் அனைவரும் ஆவலோடு ஓடினர்.உடனே, நாங்களும் அவர்களோடு சென்று பார்த்தோம். அது, நடமாடும் குழந்தைகள் நுாலக வேன் என்பது தெரிந்தது.ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமைகளில், சிறுவர் பூங்கா, கடற்கரை, கோவில்கள் என, குழந்தைகள் கூடும் இடங்களில் மாலை, 5:00 மணி முதல், இரவு, 7:00 மணி வரை, இந்த நடமாடும் நுாலகத்தை நிறுத்தி வைப்பராம்.குழந்தைகளுக்கான அனைத்து விதமான புத்தகங்களை விற்பனை செய்வதும் தெரிந்தது.வேனில், இரண்டு அலமாரிகள் செய்து, அது முழுவதும் காமிக்ஸ், சிறுவர் கதைகள் மற்றும் அறிவை வளர்க்கும் குழந்தைகளுக்கான புத்தகங்கள் அடுக்கி வைத்திருந்தனர். குழந்தைகள், அந்த நுாலக வேன் உள்ளே சென்று, அவர்களுக்கு பிடித்தமான புத்தகங்களை தேர்ந்தெடுத்து கொள்ளலாம்.எங்கள் வீட்டுக்கு வந்த குழந்தைகளும், புத்தகங்கள் வாங்க சென்றனர். விற்பனை பிரிவில் இருந்த தாத்தா, இன்முகத்தோடு வரவேற்று, குழந்தைகளிடம் கனிவாக பேசி, அவர்கள் வாங்கும் புத்தகங்களுக்கு விளக்கங்கள் கொடுத்தார்.அதிகமாக புத்தகங்கள் வாங்குபவர்களுக்கு, பேனா, பென்சில், நோட்டு என, அன்பு பரிசுகளையும் கொடுத்து உற்சாகப்படுத்தினார்.ஒரு தனியார் நிறுவனம் லாப நோக்கம் இல்லாமல், சமூக சேவையாக, குழந்தைகளுக்காக இதை செய்து வருவதாக கூறினார், தாத்தா.இந்த நடமாடும் நுாலகம், எல்லா நகரங்கள் மற்றும் கிராம புறங்களில் சிறப்பாக செயல்பட்டால், குழந்தைகளுக்கு மிகவும் பயன் உள்ளதாக இருக்கும்.— வி.கமலா, புதுச்சேரி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !