இது உங்கள் இடம்!
இப்படியும் வருமானம் ஈட்டலாமே!கோவையின் புறநகர் பகுதியில் வசிக்கும் நண்பரின் மகன், பாலிடெக்னிக் முடித்து, வேலை தேடி வந்தான்.ஒருநாள், அவனுடைய பழைய சைக்கிளில் ஏற்பட்ட பழுதை, சிறப்பாக சரி செய்வதை பார்த்த நான், 'வேறு வேலை கிடைக்கும் வரை, இதையே வேலையாக செய்யலாமே?' என, ஆலோசனை கூறினேன்.என் நண்பரும், அவர் பங்குக்கு, பழைய சைக்கிள்களை பழுது பார்க்கும், 'நடமாடும் மெக்கானிக் கடை'யை ஆரம்பிக்க ஒப்புக் கொண்டார். தன் சேமிப்பில் இருந்த தொகையை முதலீடாகத் தந்து, அடிப்படையான பழுது பார்க்கும் கருவிகளை வாங்கிக் கொள்ள செய்தார். அத்தோடு, பழைய, 'பைக்' ஒன்றையும் புதுப்பித்து, அதை, 'மொபைல் மெக்கானிக் ஷாப்' ஆக மாற்ற உதவினார்.அதன்பின் நண்பரின் மகன், கோவை மற்றும் சுற்றுப்புற பகுதிகளிலுள்ள குடியிருப்புகளில், தன்னுடைய சேவையை துவக்கினான். 'வாட்ஸ்-ஆப்' குழுக்கள் மூலமும் விளம்பரம் செய்ததால், பல வாடிக்கையாளர்கள் அவனை தொடர்பு கொண்டனர்.குறைந்த கட்டணமும், வீட்டு வாசலுக்கே வந்து சேவை செய்யும் வசதியும், மக்களைப் பெரிதும் கவரவே, இப்போது, நேரமின்றி ஓடிக் கொண்டிருக்கிறான்.ஒவ்வொரு மாதமும், சராசரியாக, 20 ஆயிரம் ரூபாய்க்கு மேல் வருமானம் ஈட்டும் அவன், 'வேறு வேலை கிடைத்தாலும், பகுதி நேரமாக இதைத் தொடர்வேன்...' என்கிறான்.சுயதொழிலில் உயர்ந்து வரும் அவனை, மற்ற வேலையில்லா இளைஞர்களும் பின்பற்றி, ஒரு தொழில் கற்று, வாழ்க்கையில் முன்னேறலாமே!— எம்.முகுந்த், கோவை.பூஜை இடையே உபன்யாசம்!எங்கள் ஊரிலுள்ள புகழ்பெற்ற ஆஞ்சநேயர் கோவிலுக்கு, குடும்பத்துடன் சென்றிருந்தேன். நிறைய கூட்டம். கருவறையில் திரை போட்டிருந்தனர். அலங்காரம் முடிய அரை மணி நேரத்திற்கும் மேலாகும் என்றனர்.'மைக்'கில், மகாளயபட்சய சிறப்பு, ராமாயண கதை மற்றும் புராண கதைகளை அழகாக கூறினார், கோவிலின் தலைமை பட்டாச்சாரியார்.பெரியவர்கள் முதல் சிறியவர் வரை அனைவருக்கும், நேரம் போனதே தெரியவில்லை. கோவில்களில் அபிஷேகம் முடிந்து, திரை போடும் சமயம், இதுபோல பல விஷயங்களை ஆன்மிக விளக்கங்களை பட்டாச்சாரியார்கள் கொடுக்கலாம். வரிசையில் நிற்பவர்களுக்கு சிரமம் தெரியாது; பக்தி கதைகளை கேட்டு பயனும் அடைவர்.— ஆர்.ஜெயலட்சுமி, திருநெல்வேலி.முன்மாதிரி திருநங்கை!வெளியூரிலிருந்து வந்த ஒரு குடும்பத்தினர், எங்கள் தெருவில் உள்ள வீட்டில், வாடகைக்கு குடியேறினர். அந்த குடும்பத்தில், ஒரு திருநங்கையும் இருந்தார்.தன் குடும்ப பொருளாதாரத்திற்காக, முந்திரிப் பருப்பு, பலாப்பழம், கொய்யாப்பழம், பூ வியாபாரம் என, பல்வேறு தொழில்களை செய்வார்.அக்கம் பக்கத்தினருடன் அன்பாக பழகுபவர், அவர்களுக்கு வேண்டிய உதவிகளைச் செய்வார். அவருடைய அன்பான பேச்சு, உதவும் குணம், மரியாதையான அணுகுமுறையால், வெகு விரைவிலேயே எல்லாரையும் கவர்ந்து விட்டார்.அக்கம்பக்கத்தில் யாருக்காவது சிறு பிரச்னையோ, உடல்நலக் குறைவோ ஏற்பட்டாலும், வீட்டு வேலைகளில் உதவி தேவைப்பட்டாலும் முதல் ஆளாக அவர் தான் நிற்பார். பொறுமையாக அருகில் இருந்து, ஆறுதலும், உதவியும் அளிப்பார்.இதையறிந்து, எங்கள் பகுதியிலுள்ள குடியிருப்பு ஒன்றில், உதவியாளர்கள் இல்லாத குடும்பங்களுக்கு, உதவியாளராக இருக்கும்படி அழைத்து, கணிசமான சம்பளத்துடன் வேலை போட்டு கொடுத்துள்ளனர்.சமூகத்தில் பல சவால்களை எதிர்கொண்டிருந்தாலும், யாரையும் சார்ந்து வாழாமல், தன் திறமையால் உழைத்து உயர்ந்து வரும் அந்த திருநங்கை, முன் மாதிரியாகவும், வழிகாட்டியாகவும் திகழ்வதாக, அவரது குடும்பத்தினரே பெருமையுடன் கூறுகின்றனர்.—வி.நர்மதா, உளுந்துார்பேட்டை.