கோவிலில் திருமணமா?ச மீ பத்தில், உறவினரின் மகளுக்கு கோவிலில் வைத்து திருமணம் நடைபெற்றது. அங்கே சென்றபோது, முகூர்த்த நேரம் நெருங்கி விட்டதாக சொல்லி, மணமகளை, மாப்பிள்ளை வீட்டார் கொடுத்த முகூர்த்த பட்டுப்புடவையையும், ஜாக்கெட்டையும் மாற்றிக்கொண்டு வரும்படி அவசரப்படுத்தினர். அன்று முகூர்த்த நாள் என்பதால், கோவிலில் கூட்டம் அதிகமாக இருந்தது.மணப்பெண், கோவிலில் மாலை மாற்றிக்கொள்ளலாம். உடை மாற்றிக்கொள்ள முடியுமா? அதுவும் அந்த பெரும் கூட்டத்திற்கு இடையே. இதையெல்லாம் எதிர்பார்க்காத மணப்பெண், கூச்சத்தாலும், சங்கோஜத்தாலும் தடுமாறினாள்.உடனடியாக, உறவினர் பெண்கள் கூட்டமாக நின்று, மறைவு ஏற்படுத்திக் கொடுத்து, அவளை உடை மாற்றச் செய்தோம். கோவிலில் திருமணம் வைப்பவர்கள் முகூர்த்த புடவையை முன்பே ஆற அமர கட்டி வரச் சொல்லலாமே? சம்பிரதாயங்கள் என்ற பெயரில் கோவிலில் உடை மாற்றச் சொல்வது சரியா?இன்றைக்கு எல்லார் கையிலும் மொபைல் போன் இருக்கிறது. இப்படி உடை மாற்றுவதை யாரேனும் மறைந்திருந்து படம் எடுத்து வைத்தால் என்ன செய்வது? அது மட்டுமல்லாமல், கோவில்களில் கண்காணிப்பு கேமராக்களும் பொருத்தப்பட்டுள்ளன. அவற்றில் இதெல்லாம் பதிவாகி தொலைத்தால் என்னாவது?கோவிலில் திருமணம் செய்பவர்கள் இதை எல்லாம், யோசித்து செயல்படுவது நல்லது!-
பா.சுபானு, காரைக்குடி.பிறந்தநாளில் உண்டியல் பரிசு!அ ரசு நடுநிலைப்பள்ளியில் ஆசிரிய ராக பணியாற்றி வரும் நண்பரை சந்திக்க, அவர் பணியாற்றி வரும் பள்ளிக்கு சென்றிருந்தேன்.காலை வழிபாட்டு கூட்டம் நடந்து கொண்டிருக்க, சற்று தள்ளி நின்று கவனித்து கொண்டிருந்தேன். தமிழ், ஆங்கில செய்தியை வாசித்ததுடன், ஆங்கிலச் சொற்களுக்கு விளக்கம், அன்றைய தினத்தின் சிறப்பு, பொன்மொழி மற்றும் பழமொழி எல்லாம் வாசிக்கப்பட்டது.அதை தொடர்ந்து, அன்று பிறந்தநாள் கொண்டாடும் மாணவர்களை அழைத்து, வாழ்த்து தெரிவித்தனர். கூடவே, பள்ளியின் சார்பில் உண்டியல் ஒன்றையும் பரிசாக வழங்கினார், தலைமையாசிரியர்.கூட்டம் முடிந்ததும், உண்டியல் பரிசு பற்றி நண்பரிடம் கேட்டேன்.'இது சில ஆண்டுகளாக தொடர்கிறது. இன்று வழங்கப்படும் உண்டியல் அடுத்த ஆண்டு பிறந்தநாள் அன்று திறக்கப்படும். அதில், அவர்கள் சேர்த்த பணம் கணக்கிடப்படும். உண்டியல் அவர்களின் வீட்டில் தான் இருக்கும்.'ஓர் ஆண்டில் சேமித்த பணத்தை, அவர்கள் எப்படி பயனுள்ள வழியில் செலவிடவும், சேமிக்கவும் கற்றுத் தருகிறோம்.'மாணவப் பருவத்திலேயே சேமிப்பு, சிக்கனம், எது அவசியமான செலவு, எது ஆடம்பர செலவு என, உணர்த்துகிறோம். எதை வாங்க விரும்பினாலும், அது அவசியமா என்பதை யோசித்து செயல்பட வேண்டும் மற்றும் வாங்கும் பொருளுக்கு தேவையான பணத்தை சேர்த்த பின்பு தான் வாங்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்...' என்றார்.பள்ளி நிர்வாகத்தின் இந்த உண்டியல் பரிசு திட்டத்தை பாராட்டினேன்.பிற பள்ளிகளிலும் இதை பின்பற்றலாம்!-
சோ.ராமு, செம்பட்டி, திண்டுக்கல்.விளையாட்டு மைதானங்களில் உடற்பயிற்சி செய்யும் போது உஷார்!நா னும், என் தோழியும், எங்கள் பகுதியில் உள்ள விளையாட்டு மைதானத்திற்கு காலை வேளையில், நடைப்பயிற்சி செல்வது வழக்கம். பெண்கள் மற்றும் ஆண்கள் என, பலரும் அங்கு வந்து உடற்பயிற்சி, யோகா செய்வதுமாக இருப்பர்.ஒருநாள் காலை, நாங்கள் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த போது, நான்கு இளைஞர்கள் வந்து, பெஞ்சில் அமர்ந்தனர். பெண்கள் ஒருபுறம், ஆண்கள் ஒருபுறம் என, உடற்பயிற்சி செய்து கொண்டிருக்க, அவர்களோ, பெண்கள் இருந்த பக்கமாக திரும்பி, மொபைல் போனை பார்த்து கொண்டிருந்தனர்.'இவர்களும் உடற்பயிற்சி செய்யத்தான் வந்திருப்பர்' என்று நினைத்தேன். ஆனால், தொடர்ந்து அவர்கள் மொபைல் போனை துாக்கி பிடித்தவாறு இருந்தது சந்தேகத்தை ஏற்படுத்தியது. அங்கு, நான்கைந்து பெண்கள் கீழே குனிந்து, நிமிர்ந்து, கைகளை உயர்த்தி உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தனர்.நிலைமையை உணர்ந்த நான், அருகில் இருந்த ஆண்களை அழைத்து, இளைஞர்களின் மொபைல் போனை பரிசோதிக்க சொன்னேன். அவர்கள், மொபைலை பிடுங்கி, பார்த்த போது, அதிர்ச்சியாக இருந்தது.அதில், அந்த பெண்கள் உடற்பயிற்சி செய்ததை புகைப்படம், எடுத்ததுடன், 'ஜாக்கிங்' செல்லும் பெண்களை வீடியோவும் எடுத்து வைத்திருந்தனர். உடனே, காவல்துறைக்கு தகவல் கொடுத்து, வரவழைத்து, அந்த இளைஞர்களை, அவர்களிடம் ஒப்படைத்தோம்.தோழிகளே... விளையாட்டு மைதானங்களில் உடற்பயிற்சி செய்யும்போது, எச்சரிக்கையாக இருங்கள்.
- செ.சவுமியா, அரூர், தர்மபுரி.