கவிதைச்சோலை: தனித்த மாண்போடு திகழ்வாய்!
அக்., 17 கண்ணதாசன் நினைவு தினம்தமிழன்னை ஈன்றெடுத்த தன்னிகரில்லா தவப்புதல்வனே... மாந்தரின் உணர்வத்தனைக்கும் பாடல் பாடிய கவியரசனே! சொல்லுக்குள் சுவை படைத்தாய் கவிதைக்குள் பொருள் நிறைத்தாய்... உன் சுவாசத்தையும் இசையாக்கி எங்கள் ஆயுளை நீட்டி தந்தாய்! காதலை மொழி பெயர்த்தாய் கனவுகளுக்கும் வழி கொடுத்தாய்... கண்ணீரின் கதைகளையும் எழுதி கலங்கிய நெஞ்சம் தேற்றினாய்! தத்துவத்தை தேனாக்கி தரணிக்கெல்லாம் பருகத் தந்தாய்... வாழ்க்கையின் புதிர்களை வார்த்தைகளில் விடுவித்தாய்! திரையுலகத் திரை விலக்கி திசையெங்கும் தமிழ் வளர்த்தாய்... திரைப்பாடல் ஒவ்வொன்றாலும் திக்கெட்டும் பெரும்புகழ் பெற்றாய்! மனிதர்களின் மனம் அறிந்தாய் அதில் மறைந்த வலி அறிந்தாய்... மகிழ்ச்சிக்கும் துயரத்துக்கும் இளைப்பாற வாய்ப்பு தந்தாய்! ஆன்மிகத்தின் ஆழம் சென்று பக்திப் பரவசத்தில் ஆழ்த்தினாய்... 'அர்த்தமுள்ள இந்துமதம்' என அறிவுக்கு விருந்தளித்தாய்! நீ எழுதிய வரிகள் எல்லாம் நெஞ்சுக்குள் குடிகொண்டன... நீ மறைந்த பின்னும் அவை உனக்கு பூமாலை சூட்டுகின்றன! கவிதை வாழும் காலமெல்லாம் அழியாது நீயும் வாழ்வாய்... தமிழ் கூறும் நல்லுலகில் தனித்த மாண்போடு திகழ்வாய்! - டி.எல்.குமார், விழுப்புரம்.தொடர்புக்கு : 9843421971