உள்ளூர் செய்திகள்

நம்மிடமே இருக்கு மருந்து - ரம்புட்டான் பழம்!

மலேஷியா மற்றும் இந்தோனேஷியாவைத் தாயகமாகக் கொண்டது, ரம்புட்டான் பழம். இந்தப் பழத்தில், கலோரி, வைட்டமின் சி, இரும்புச் சத்து, நியாசின், ஆன்டி ஆக்சிடெண்ட், கார்போஹைட்ரேட், புரதம் ஆகிய சத்துக்கள் உள்ளன. 100 கிராம் ரம்புட்டான் பழத்தில், 1.3 முதல், 2 கிராம் வரை நார்ச்சத்து உள்ளது. இது, ஆப்பிள், ஆரஞ்சு அல்லது பேரிச்சம்பழங்களில் உள்ள நார்ச்சத்துக்கு சமமாகும். ரம்புட்டான் பழம், காயாக இருக்கும் போது, பச்சை நிறத்திலும், முதிர்ச்சியடையும் போது சிவப்பு அல்லது மஞ்சள் நிறமாக மாறும். இப்பழம், இனிப்பு மற்றும் புளிப்புச் சுவை கொண்டது. இதன் மேற்புறம் முள் முள்ளாக காணப்படும். உடல் பருமனால் அவதிப்படுவோர், ரம்புட்டானை அடிக்கடி சாப்பிடலாம். இதில் நீர்ச்சத்து, அதிகம் இருப்பதால், நாக்கு வறண்டு போவதையும் தடுக்கிறது. இப்பழத்தில் உள்ள கார்போஹைட்ரேட், புரதம் ஆகிய சத்துக்கள், உடல் உழைப்புக்குத் தேவையான ஆற்றலை அதிகரிக்க உதவுகிறது. உடல் சீரான வளர்ச்சி பெறவும் முக்கிய பங்காற்றுகிறது. உடலில் கெட்ட கொழுப்பை சேரவிடாமல் தடுக்கிறது. இதனால், மாரடைப்பு அபாயம் குறைகிறது. ஆஸ்துமா மற்றும் நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்துகிறது. கண் ஆரோக்கியத்துக்கும் பெரிதும் உதவுகிறது. ரம்புட்டான் பழத்தை அடிக்கடி சாப்பிடுவதால், தலைமுடி, தோல் மற்றும் கை, கால் நகங்கள் ஆகியவை பளபளப்புடன் இருக்கும். எலும்பு மண்டல வளர்ச்சிக்கு உதவக்கூடிய கால்ஷியம் மற்றும் பாஸ்பரஸ் போன்ற சத்துக்களும், இதில் உள்ளன. இரண்டு ரம்புட்டான் பழங்களை உட்கொள்வதன் மூலம், தினசரி வைட்டமின் சி தேவையை பூர்த்தி செய்ய முடியும். செல்களில் இருந்து நச்சுகளை அகற்றும் முக்கிய ஆக்சிஜனேற்றியாக, பயன்படுகிறது.பல பழங்களைப் போலவே, ரம்புட்டானும் இதய ஆரோக்கியத்திற்கு சாதகமான ஊட்டச்சத்துக்களைக் கொண்டுள்ளது. இப்பழத்திலுள்ள கொழுப்பு மற்றும் நார்ச்சத்து, ரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவும் பொட்டாசியத்தின் சிறந்த மூலமாகும். ரம்புட்டான் பழத்தில் மாவுச்சத்து மற்றும் புரதச்சத்து இரண்டும் உள்ளன. இவை இரண்டும், தேவைப்படும்போது உடலுக்கு ஆற்றலை அளிக்கிறது. இப்பழத்தில் உள்ள இயற்கை சர்க்கரைகளும், இந்த செயல்பாட்டிற்கு உதவுகின்றன. மேலும், வைட்டமின் பி5 போன்ற ஊட்டச்சத்துக்களும் நிறைந்துள்ளன. பாஸ்பரஸ் இருப்பதால், சிறுநீரகத்திலிருந்து தேவையற்ற கழிவுகளை வெளியேற்ற உதவுகிறது. மேலும், திசுக்கள் மற்றும் உடல் உயிரணுக்களின் வளர்ச்சி, புத்துணர்ச்சி மற்றும் பராமரிப்பு போன்ற செயல்களில், முக்கிய பங்கு வகிக்கிறது. ரம்புட்டான் பழம், பல ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டிருந்தாலும், சில பக்க விளைவுகளும் உள்ளன. குறிப்பாக, கர்ப்பிணிகள், நீரிழிவு நோயாளிகள் மற்றும் உயர் ரத்த அழுத்தம் உள்ளவர், இப்பழத்தை தவிர்ப்பது நல்லது. - எம். ஆதினி


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !