உள்ளூர் செய்திகள்

நம்மிடமே இருக்கு மருந்து - பிஸ்தா!

ஆரோக்கியத்தை வழங்குவதில் பிஸ்தா பருப்பை, ராஜதந்திரி என்று சொல்லலாம்.இதற்கு, புன்னகைப் பருப்பு, மகிழ்ச்சிப் பருப்பு என, பல பெயர்கள் உண்டு. பழங்காலத்திலேயே ஆப்கானிஸ்தானிலிருந்து நம் நாட்டுக்கு, பிஸ்தா இறக்குமதி செய்யப்பட்டது. பழுத்ததும் கிடைக்கும் பிஸ்தா பருப்பில் உப்பு சேர்த்து, இந்தியாவுக்கு இறக்குமதி செய்தனர்.மத்திய கிழக்கு மற்றும் மத்திய ஆசிய நாடுகளே பிஸ்தாவின் தாயகமாகக் கருதப் படுகின்றன. புகழ்பெற்ற பாபிலோனின் தொங்கும் தோட்டத்தில், பிஸ்தா மரங்கள் வளர்ந்த செய்தியை, உணவு வரலாற்று நுால் மூலம் அறியலாம். மத்திய கிழக்கு நாடுகளில் பிஸ்தாவின் புழக்கத்தைப் பற்றிய பல்வேறு நுால் ஆதாரங்கள் இருக்கின்றன. உயர் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும் தன்மை இதற்கு உள்ளதாக, ஆய்வுகள் தெரிவிக்கின்றன. எடையை அதிகரிக்க நினைப்பவர்கள், பிஸ்தாவைத் எடுத்து கொள்ளலாம். சோர்வாக இருப்பவர்களுக்கு உடனடி ஆற்றல் வழங்க பிஸ்தா உதவும். இதிலுள்ள ஆர்ஜினைன் எனும் அமினோ அமிலம், ரத்தக் குழாயை சிறப்பாகச் செயல்பட வைக்கிறது. மாதவிடாய் கோளாறுகளை நீக்குவதிலும் முக்கியப் பங்காற்றுகிறது. குடல் புற்றுநோய்க்கான தடுப்பு மருந்தாகவும் பிஸ்தா செயல்படுவதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.உடலுக்குள் ஏற்படும் நுண்ணிய காயங்களை ஆற்றும் வல்லமை பிஸ்தாவுக்கு இருக்கிறது. இதிலுள்ள நார்ச்சத்து, மலத்தை முழுமையாக வெளியே தள்ள உதவுவதுடன், குடலுக்கு வலிமை அளிக்கிறது. நலம் பயக்கும் நுண்ணுயிரிகளைக் குடல் பகுதியில் அதிகரிக்கும் தன்மை, பிஸ்தாவுக்கு இருக்கிறது.மூட்டு வலியால் அவதிப்படுவோர், பிஸ்தா பருப்பின் ஆதரவை நாடலாம். கண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் பிஸ்தா பருப்பு அதிமுக்கிய பங்கு வகிக்கிறது. நினைவுத் திறன், ஒருங்கிணைப்பு போன்ற மூளையின் செயல்பாடுகளுக்கு பிஸ்தா துணை நிற்கும். இதிலுள்ள வைட்டமின் -ஈ, வயது மூப்பு காரணமாக ஏற்படும் பிரச்னைகளை தள்ளிப்போட உதவும்.புரதம், கொழுப்புச் சத்து, குறைந்த அளவு மாவுச் சத்து, இரும்புச் சத்து, சுண்ணாம்புச்சத்து, துத்தநாகச்சத்து, பொட்டாஷியம், டோகோபெரால், கரோட்டின்கள், தாவர ஸ்டீரால்கள் மற்றும் வைட்டமின் -பி என, நமக்குத் தேவையான மருத்துவ கூறுகளை கொண்டது, பிஸ்தா. ஆன்டிஆக்ஸிடன்ட் நிறைந்த பருப்பு வகைகளில், பிஸ்தா தனித்துவம் வாய்ந்தது.கூந்தல் அடர்த்தியாக வளரவும், மிருதுவான சருமத்துக்கும், ரத்த சர்க்கரையின் அளவைக் கட்டுக்குள் வைக்கவும், எலும்புகளுக்கு வலுவூட்டவும், நோய் எதிர்ப்பாற்றலை கூட்டவும் பிஸ்தா நல்லது. வீரியம் அதிகரிக்கும் மருந்துகளில் பிஸ்தாவின் சேர்மானம் இருப்பது குறிப்பிடத்தக்கது. சத்து மாவுக் கலவைகளில் பிஸ்தாவை அரைத்துச் சேர்த்து மதிப்பூட்டலாம். கெட்ட கொழுப்பை தடுக்கும் ஆற்றல் இருப்பதோடு, நிறைவுறாத கொழுப்பு அமிலங்களையும் அதிகம் கொண்டது, பிஸ்தா.பிஸ்தாவில் பல்வேறு காட்டு ரகங்கள் இருக்கின்றன. பிஸ்தா பருப்பின் மேல் ஓடு கடினமாக இருக்கும். மற்ற காட்டு பிஸ்தா ரகங்களின் ஓடு மெல்லியதாக இருக்கும். பிஸ்தா அரிதாக சிலருக்கு ஒவ்வாமையை உண்டாக்கலாம். முறையாகப் பதப்படுத்தப்படாத பிஸ்தா பருப்புகளில் கிருமி தொற்று ஏற்படலாம். வாங்கும்போதும், பயன்படுத்தும் போதும், பிஸ்தாவின் தன்மையைச் சோதித்து பார்ப்பது நல்லது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !