நம்மிடமே இருக்கு மருந்து: குங்குமப்பூ!
உலகின் மிக விலையுயர்ந்த மசாலாப் பொருட்களில் ஒன்று, குங்குமப்பூ. இது, அதன் மருத்துவ மற்றும் ஆரோக்கிய பலன்களால் உலகப் புகழ்பெற்றது. குரோகஸ் சாடிவஸ் தாவரத்தின் மகரந்தக் குழாய்களிலிருந்து பெறப்படுகிறது. குங்குமப்பூவில் உள்ள, 'ஆன்டி டிப்ரசன்ட்' மன அழுத்தம் மற்றும் பதற்றத்தை குறைக்க உதவுகிறது. இது, செரோடோனின் அளவை அதிகரித்து, மனநிலையை மேம்படுத்துவதாக, ஆய்வுகள் கூறுகின்றன. குங்குமப்பூவில் உள்ள, 'க்ரோசின்' மற்றும் 'க்ரோசெடின்' ஆகியவை, சக்தி வாய்ந்த ஆன்டி ஆக்ஸிடன்ட்களாக செயல்படுகின்றன. உடலில் உள்ள 'ப்ரீ ரேடிக்கல்'களை எதிர்த்து, செல்களைப் பாதுகாப்பதோடு, வயதான தோற்றத்தையும் தாமதப்படுத்துகின்றன. குங்குமப்பூ, ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தவும், கொலஸ்ட்ரால் அளவை குறைக்கவும் உதவுகிறது. இதன் அழற்சி எதிர்ப்பு பண்புகள், ரத்த நாளங்களை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகின்றன. இதனால், இதய நோய் அபாயம் குறைகிறது. இது, கண்களில் உள்ள ரெட்டினாவைப் பாதுகாத்து, பார்வைத் திறனை மேம்படுத்துகிறது. குங்குமப்பூவில் உள்ள வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள், நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துகின்றன. சளி, இருமல் போன்றவற்றை எதிர்க்கவும் உதவுகிறது. குங்குமப்பூவின், 'ஆன்டி ஆக்ஸிடன்ட்' மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள், சருமத்தை பளபளப்பாக்கவும், முகப்பரு மற்றும் கரும்புள்ளிகளை குறைக்கவும் உதவுகின்றன. இதை முகமூடியாக பயன்படுத்துவது, சருமத்திற்கு இயற்கையான ஒளியை அளிக்கிறது. குங்குமப்பூ, மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வலி மற்றும் மனநிலை மாற்றங்களை குறைக்க உதவுகிறது. குங்குமப்பூவை உணவில் சிறிதளவு சேர்ப்பது அல்லது பாலில் கலந்து பருகுவது, அதன் நன்மைகளை முழுவதுமாக பெறும் எளிய வழியாகும். இருப்பினும், அதிக அளவு உட்கொள்வது தவிர்க்கப்பட வேண்டும். மேலும், கர்ப்பிணிகள், மருத்துவரின் ஆலோசனை பெற்று உட்கொள்வது நல்லது. வி. பரணிதா