உள்ளூர் செய்திகள்

பாசத்தின் வேர்கள்!

''அம்மா...'' பள்ளி விட்டு காரில் வீடு திரும்பிய, வாணி, உள்ளே நுழைந்ததுடன், அம்மாவைக் கட்டி அணைத்தாள். மகளின் பாசத்தில் மனதுக்குள் மகிழ்ந்தாலும், ''வாணி எத்தனை தடவை சொல்றது. நீ, என்ன இன்னும் சின்னக் குழந்தையா? போய் முதலில், கை கால்களை கழுவிட்டு வா,'' என விரட்டினாள், கவுரி. வாணி, 'ரெப்ரஷ்' செய்து வந்ததும், ஸ்நாக்ஸ் எடுத்துக் கொடுத்து, ''வாணி, இன்னைக்கு நைட் 9:00 மணிக்கு டிரெயின். உன் டூருக்குத் தேவையானதை, 'பேக்' பண்ணி வச்சுட்டேன்.''''தேங்க்ஸ் மா!''''அதெல்லாம் இருக்கட்டும், மூணு நாள் டூர். ஸ்கூல் டூரில் வெளியூரில் தங்குவது இதுதான் முதல் முறை. கவனமாகப் போய் வா!'' ''என்னம்மா, நான் என்ன சின்ன குழந்தையா. பிளஸ் 2 படிக்கிறேன். அடுத்த ஆண்டு காலேஜுக்கே போகப் போறேன். நான் பார்த்துக்குவேன்மா,'' என்றாள், வாணி.''இல்லடா, உன்னைப் பிரிஞ்சு, மூன்று நாள் எப்படித்தான் இருக்கப் போறேனோ,'' என கலங்கினாள், கவுரி. ''பெத்தவங்களுக்கு பிள்ளைகள்தாம்பா சொத்து. பிள்ளைகள், கூட இருந்தாலே போதும்,'' என்று சொல்லி, மகளின் கன்னத்தை தட்டி, சமையலறைக்கு நகர்ந்தாள், கவுரி. கவுரியின் கணவன் பாஸ்கர், வங்கி அதிகாரியாக, மதுரையில் பணிபுரிகிறார். தனி பங்களா. மனைவி, மகள் மற்றும் மகன் வருண் என, சந்தோஷமான வாழ்க்கை. வாணி, பிளஸ் 2வும்; வருண், 7ம் வகுப்பும் படிக்கின்றனர். வாணியின் பள்ளியிலிருந்து, மூன்று நாள் சுற்றுலாவாக சென்னை செல்கின்றனர். வாணியின், 'லன்ச் பாக்ஸ்'சை, சமையலறை ஸிங்கில் போடத் திறந்த போது, உள்ளே ஒரு பெரிய சாக்லேட் இருந்தது. ''வாணி, இதென்ன சாக்லேட் வாங்கினியா?'' ''இல்லம்மா, கிருத்திகாவோட பாட்டிக்கு இன்னைக்கு பிறந்தநாள்; அதுக்காக கொடுத்தா. அம்மா என் நண்பர்கள் நிறைய பேருக்கு, பாட்டி - தாத்தான்னு இருக்காங்க. எனக்கு மட்டும் யாருமே இல்லையே. லட்சுமி பாட்டி இருந்தாங்க, அவங்களும் எங்கேயோ போயிட்டாங்க. ரொம்ப, 'லோன்லி'யா இருக்கும்மா,'' என்றாள், வாணி. கவுரிக்கு சங்கடமாக இருந்தாலும், ''அதனால என்னம்மா, நாங்க, அப்பா - அம்மா இருக்கோம்ல,'' என்று, தேற்றினாள். வாணியின் மனதுக்குள் பழைய நினைவுகள் எழுந்தன. அப்பாவின் அம்மா லட்சுமி பாட்டி, இவர்களுடன் தான் இருந்தார். வாணிக்கு நெருங்கிய தோழி போல அவர். பாட்டியுடன் விளையாடுவது, அவரது மடியில் படுத்துக் கொள்வது என்று, பாட்டி செல்லம். தினம் பள்ளியிலிருந்து வாணி வீடு திரும்பும்போது, வெளியில் அமர்ந்திருப்பாள், பாட்டி. ஓடி வந்து பாட்டியை அணைத்துக் கொள்வாள், வாணி. பள்ளியில் யாராவது திட்டினாலோ, சண்டை போட்டாலோ, எல்லாம் பாட்டியிடம் தான் பகிர்ந்து கொள்வாள். சில ஆண்டுகளுக்கு முன், ஒருநாள் ஊருக்குப் போய் விட்டாள் பாட்டி.'அங்க கிராமத்துல அப்பாவோட சொந்தக்காரர் இருக்காரு. அவரு வீட்டுல பாட்டி இருக்காங்க. கிராமத்தில் தெரிஞ்சவங்க, சொந்தக்காரங்க நிறைய பேர் இருப்பாங்கல்ல, அங்க இருந்தா பாட்டிக்கும் பொழுது போகும். இங்க போரடிக்குதாம்...' என்றாள், அம்மா. கொஞ்சம் கொஞ்சமாக பாட்டியை மறந்தே போனாள், வாணி. இன்று போல தோழிகள் யாரும் பாட்டி - தாத்தா பிறந்த நாள், அது இது என்று சொல்லும்போது, பாட்டியின் நினைவுகள் எழும். சென்னையில் நல்ல வசதியான தங்கும் விடுதியில் தான் தங்கியிருந்தனர். சுற்றுலா திட்டமிட்டபடி நடந்தது. சுற்றுலாவில் முதல் இரு நாட்களில், சென்னையில் பார்க்க வேண்டிய எல்லா இடங்களையும் பார்த்தாகி விட்டது. மூன்றாம் நாள் காலை, அனைவரையும் அழைத்தார், ஆசிரியை. ''டியர் ஸ்டூடண்ட்ஸ், இன்றைய புரோகிராம் என்ன தெரியுமா? காலையில், தி.நகரில் ஷாப்பிங். மதியம், சாப்பிட்ட பிறகு, மாலை, முதியோர் இல்லம் செல்கிறோம். சமூகத்தின் இன்னொரு பக்கத்தை நீங்கள் பார்ப்பதற்காக இந்த, 'விசிட்!' அங்கு இருக்கும் முதியோருக்கு உங்கள் கைகளால் பழங்கள், ஸ்வீட் எல்லாம் வழங்கலாம். இப்ப ஷாப்பிங் போறோம்,'' என்றார். உற்சாகமாக புறப்பட்டனர், மாணவியர். சிறிது ஓய்வுக்குப் பின், மாலை, அடையாறில் உள்ள முதியோர் இல்லம் சென்றனர். வாங்கிச் சென்ற பழம், இனிப்பை பாட்டி, தாத்தாக்களுக்கு வழங்கினர். அப்போது, ஒரு பாட்டியை பார்த்ததும், வாணிக்கு, 'திக்'கென்றது. 'நம்ம லட்சுமி பாட்டி மாதிரி இருக்கே...' என, அருகில் சென்று பார்த்தாள். 'ஆம், பாட்டி தான்...' வாணிக்கு நெஞ்சே வெடித்து விடும்போல இருந்தது. ''பாட்டி, பாட்டி...'' என்று அழைத்து, கட்டிக் கொண்டாள். மெலிந்து, கண்கள் பஞ்சடைத்துப் போயிருந்தாள், பாட்டி. ''குழந்தை, நல்லாருக்கியா. நீ யாருப்பா?'' என்றாள். ''பாட்டி, நான் தான் உங்க பேத்தி, வாணி...'' என்று சொல்லும்போதே, கண்களில் நீர் முட்டியது. பாட்டி கண்களைச் சுருக்கி பார்த்து அடையாளம் கண்டதும், அவள் கண்கள், மடை திறந்ததுபோல, கண்ணீரைக் கொட்டின. ''வாணி, என் செல்லம்...'' என கட்டிப்பிடித்து, அழுதாள். பாட்டியும், பேத்தியும் அழுவதை மற்ற மாணவியர் வியப்போடு நோக்கினர். ''பாட்டி, நீங்க கிராமத்துல சொந்தக்காரங்க வீட்டுல இருக்கறதா சொன்னாங்க அம்மா,'' கேவலுடன் கேட்டாள், வாணி. ''இல்லடா செல்லம், மதுரையிலிருந்து நேரா இங்குத்தான் கூட்டி வந்து விட்டான், உங்க அப்பன். நான் உங்களுக்கெல்லாம் பாரமா இருந்தேனாம். பார்க்க முடியலைன்னு இங்க சேர்த்துட்டான்.'' ''அப்பா, அப்பப்ப வருவாரா பாட்டி?'' ''இத்தனை ஆண்டுல ஒருநாள் கூட வந்து பார்க்கல. மாசா மாசம் பணம் மட்டும் அனுப்புறானாம். என் பேத்தி, பேரனைப் பார்க்காம மனசே ஏங்கிப் போச்சுடா,'' என, அழுதாள். இரவு புறப்பட்டு மறுநாள் காலை, மாணவியர், மதுரை வந்தடைந்தனர். ஸ்டேஷனுக்கு வந்திருந்தார், அப்பா. வந்து இறங்கியதில் இருந்து, வாணி யாரிடமும் பேசவில்லை. கட்டி அணைத்தாள், அம்மா; கைகளை விலக்கி நடந்தாள், வாணி. பெற்றோருக்கு ஒன்றும் புரியவில்லை.காலை ரெடியாகி பள்ளி சென்றாள், வாணி. மாலை திரும்பி வந்த பிறகும் எதுவும் பேசவில்லை. கவுரி வற்புறுத்திக் கேட்ட பின், பாட்டியை சென்னையில் சந்தித்ததை, கண்ணீர் வழிய சொன்னாள். ''ஏம்மா, பொய் சொன்னீங்க. ஏன் பாட்டியை அங்க சேர்த்தீங்க?'' என்று கேள்விகளால் குடைந்தாள், வாணி. ''இல்லம்மா, உங்க ரெண்டு பேரையும் வச்சுக்கிட்டு, பாட்டிய கவனிக்க முடியல, அதான். அது நல்ல இடம்பா. சாப்பாடு மற்ற வசதியெல்லாம் நல்லாருக்கும். அப்பா, மாசா மாசம் கரெக்டா பணம் அனுப்பிடுவாரு,'' என்று சமாதானம் சொன்னாள், கவுரி. ஆனால், வாணியின் மனம் ஆறவில்லை. ''என்னை, ஒரு மூன்று நாள் பார்க்காம துடிச்சுப் போயிட்டியே... பாட்டி பாவம், இத்தனை நாட்களாக யாரையும் பார்க்காம எப்படி துடிச்சு போயிருப்பாங்க,'' என்று சொல்லி, அழுதாள். கவுரியால் பேச முடியவில்லை. ஒரு மாதமாகியது. இன்னும் யாரோடும் பேசாமல், 'உம்'மென்று இருந்தாள், வாணி. அந்த மாதத் தேர்வுகளில் மிகக் குறைந்த மதிப்பெண் பெற்றதால், பள்ளியிலிருந்து பெற்றோரை அழைத்து வர சொன்னார், ஆசிரியை. தன் முன் அமர்ந்த, வாணியின் பெற்றோரிடம், ''என்ன ஆச்சு வாணிக்கு, நல்லா படிக்கக் கூடிய பொண்ணு. இந்த ஒரு மாசமா சரியில்லையே... சென்னைக்கு போய் பாட்டியை பார்த்ததிலிருந்து ரொம்ப உடைஞ்சு போயிருக்கா. சரி பண்ண வேண்டியது உங்க பொறுப்பு. ''உங்க பர்சனல் விஷயத்தில் தலையிட விரும்பல. இருந்தாலும், வாணியோட படிப்பு, 'ஸ்பாயில்' ஆயிடக் கூடாதுங்கிறதுக்காக சொல்றேன். வீட்டுல, பாட்டி - தாத்தான்னு பெரியவங்க இருக்கிறது, பெரிய வரம். நமக்கு நல்லது கெட்டது எடுத்துச் சொல்வாங்க.''பிரச்னைகளின் அழுத்தத்தில் நாம உடைஞ்சு போயிடாம, நல்ல ஆலோசனை சொல்லி நம்மைத் தாங்குவாங்க. நம் பிள்ளைகளுக்கு பெத்தவங்களை விட, தாத்தா - பாட்டி தான், நம் பண்பாடு, பாரம்பரியத்தை சொல்லி, மனசுல பதிய வைப்பாங்க.''குடும்பங்கிறது பாசச் செடின்னா, அதன் வேர்கள் நிச்சயமா, தாத்தா - பாட்டி தான். அவங்களை முதியோர் இல்லத்தில் சேர்க்கிறது, உயிரோடு முதுமக்கள் தாழியில் வைப்பது போலத்தான். மற்றபடி வாணிக்காக வருத்தப்படறேன்,'' என்றார், ஆசிரியை. அமைதியாக வீடு திரும்பினர், வாணியின் பெற்றோர். இரண்டு நாட்கள் ஓடியது. அடுத்த நாள் மாலை பள்ளிவிட்டு தொங்கிய முகத்தோடு வீட்டுக்குள் நுழைந்தாள், வாணி. வெளியில் யாரோ அமர்ந்திருப்பதை பார்த்தாள். ''பாட்டி, பாட்டி...'' என்று கத்தியபடி ஓடி வந்து, பாட்டியை கட்டிப் பிடித்துக் கொண்டாள். பாட்டி, பேத்தி இருவரின் கண்களிலும் கண்ணீர். பழைய உற்சாக வாணியாக மாறியதை பார்த்து, பாஸ்கர் - கவுரி கண்களிலும் கண்ணீர். இது, ஆனந்த கண்ணீர்!முத்துவேல் பாண்டியன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !