உள்ளூர் செய்திகள்

மாலும் நஹி! மாலினி!

''மாலும் நஹின்னு, இன்னைக்கு எத்தனை முறை சொன்னே?'' என, மனைவி மாலினியிடம் கிண்டலாக கேட்டார், ரகு தாத்தா.''ஓ அதுவா? காலங்காத்தாலே யாரோ, அழைப்புமணி அடிக்கிறாங்களேன்னு கதவை திறந்தேன். கதவைத் திறந்ததும் நம்ம அபார்ட்மென்ட் செக்யூரிட்டி, ஹிந்தியிலே ஏதோ பொரிஞ்சு தள்ளினான். அவன் என்ன சொன்னான்னு புரியலே... நம்ப மகன் பரத்தையோ, மருமகள் ஜானாவையோ எழுப்பி கேட்க சொல்லலாம்ன்னு தோணலே... அவன்கிட்டே, 'மாலும் நஹி'ன்னு சொன்னேன். ''அப்புறம் நம் பையனும், மருமகளும் ஆபிஸ் போனப்புறம், 'மெய்ன்டெனன்ஸ்'சில் இருந்து, ஒரு எலெக்ட்ரீஷியன் வந்தான். 'கெய்ஸர் ரிப்பேர்'ன்னு பரத் சொல்லி கூப்பிட்டிருப்பான் போலிருக்கு. வந்தவன் மடமடன்னு அந்த கெய்ஸரை இறக்கி, கழட்டி போட்டு, எதையோ மாத்தணும்ன்னு சொன்னான். ஹிந்தியிலே அவன் சொன்னது எனக்கும் புரியலே. உங்களுக்கும் புரியலே. ரெண்டு பேருமா கோரஸா, 'மாலும் நஹி' சொல்லி, அவனை அனுப்பினோம். ''அப்புறம், பரத், போன் பண்ணி கேட்டுட்டு, 'எனக்கு கால் பண்ணியிருக்கலாமே...' என, தமிழ்லே ரெண்டு பேரையும் திட்டினான். அப்புறம் மாலை, 4:00 மணிக்கு, ஜானாவின் சிநேகிதி வந்தாள். வாய் நிறைய ஹிந்தி பேசி எதையோ கேட்டாள். 'மாலும் நஹி... ஜானா ஆபீஸ் மே ஜானா ஹை'ன்னு கூடுதலா நாலு ஹிந்தி வார்த்தையிலே சொன்னேன். அவள் இடி இடின்னு சிரிச்சுட்டே போயிட்டா,'' என்றாள், மாலினி பாட்டி. இருவருக்கும், ஹிந்தி தெரியாததால் தினமும் சந்திக்கும் இடர்களை நகைச்சுவையாக பகிர்ந்து சிரிப்பது, இவர்களது வழக்கமாகி போனது.தமிழ்நாட்டு எல்லையில் இருக்கும் பெங்களூருவில், எட்டுக்கு நாலு என்ற விகிதத்தில், தமிழர்கள் உள்ளனர். இருப்பினும், எங்கும் எவரும் ஹிந்தி பேசுவதால், அந்த காலத்து இரு மொழி பாட திட்டத்தில் படித்த ரகு தாத்தா, மாலினி பாட்டிக்கு ஹிந்தியில், 'மாலும் நஹி' என்ற, இரண்டு வார்த்தைகளை விட்டால் வேறு கதி, 'நஹி' என்றாகி விட்டிருந்தது.தேன் வந்து பாயும் செந்தமிழ் நாட்டிலிருந்து, தன் மகன், மருமகளுடன் பெங்களூருவிற்கு குடிபெயர்ந்து வந்த, இந்த நான்கு ஆண்டுகளாக ஹிந்தி அறியாமல், 'இங்கு வந்து மாட்டிக் கொண்டோமே...' என அழ வைத்து, சிரிப்பு மூட்டிக் கொண்டிருந்தது.காலையில் தொப்பையும், தொந்தியுமாக, 'வாக்கிங்' போகும் அனேகரது வாக்கிலிருந்தும் வரும் மொழியாக, ஹிந்தியே வலம் வரும். இவர்களின் நடுவே நடந்து வரும் ரகு தாத்தாவிற்கு சங்கடமாக இருக்கும்.அதன்பின் சந்திக்க நேரும் பால்காரன், பேப்பர்காரன், பூக்காரன், கூரியர் ஆள், வீட்டு குப்பைகளை அள்ளிச் செல்பவன் என, அத்தனை பேரிடமும், 'மாலும் நஹி' என்ற, இரண்டு வார்த்தைகளை மட்டும் வைத்து, இருவரும் குப்பைக் கொட்டிக் கொண்டிருந்தனர்.ஆனாலும், முழு நேரமாக வீட்டிலேயே இருந்து, தன் இரண்டு வயது பேரனை பராமரிக்கும் பஞ்சாபி நானியிடம் அளவளாவ, குறைந்தபட்ச அளவு ஹிந்தி அறிவாவது தேவையாய் இருந்தது. தன் பேரனின் மழலையையே ஹிந்தியாக மடை மாற்றி விடுவாளோ என்ற அச்சத்தில், அந்த பஞ்சாபி ஆயாவை நிறுத்தச் சொல்லி, பேரனின் சொந்த ஆயாவாக அந்த பணியை, மாலினி பாட்டி ஏற்க வேண்டிய நிர்பந்தமானது.அதேபோல், வடக்கத்தி சமையல்காரியிடம், தெற்கத்தி பொங்கல், வடை ரெசிபிகளை சொல்லித் தரக் கூட, ஹிந்தியே தேவைப்பட்டது.ஒருமுறை, ஆபிசிலிருந்து மாலினிக்கு போன் செய்து, சமையல்காரிக்கு அடை - அவியல் செய்முறையை கற்றுத்தர சொன்னாள், ஜானா.எப்படி கற்றுத்தரப் போகிறோம் என செய்வதறியாமல் முழித்த மனைவிக்கு, கூகுளில் அரிசி, பருப்பு, மிளகாய் என, மளிகை பொருட்களுக்கு ஹிந்தி பதங்களை தேடி கண்டுபிடித்து கொடுத்தார், ரகு தாத்தா. ஊற வைத்தல், ஊறினதை அரைத்தல், அதை அடையாக வார்த்தல் இத்யாதிகளை, ஹிந்திகாரிக்கு அபிநயம் செய்து காட்டியும் புரியாததால், மாலினி தானே அத்தனையையும் செய்து, அடை - அவியலை தயாரிக்க வேண்டியதாகி விட்டது.தானும், கணவரும் சாப்பிடும்போது சமையல்காரிக்கும் தட்டில் போட்டு கொடுத்து, 'டேஸ்ட்' பார்க்கச் சொன்னாள். அவளும் சாப்பிட்டு விட்டு, 'பகுத் அச்சா ஹை...' என, காரசாரமாக கண்ணீர் வடித்தாள்.அதன்பின், அதன் பெயர் என்ன என கேட்டாள், சமையல்காரி. மாலினி பெருமையாக, அடை - அவியல் என்று சொல்ல அவளோ, 'ஹிந்தி மே க்யா ஹை...' என்றாள். அடை - அவியலுக்கு மொழி பெயர்ப்பு செய்யும் அத்தனை ஹிந்தி அறிவு இல்லாதவளாய், 'மாலும் நஹி' என, எப்போதும் போல் தெரியாதென்று கூறிவிட்டாள். அடையை அடக்கிக் கொண்ட வாயால் அவள் சொன்ன, 'மாலும் நஹி' சமையல்காரியின் காதில், 'ஆலு தஹி' என்று விழுந்து தொலைத்து விட்டது. 'ஆலு தஹி சூப்பர் ஹை...' என, சமையல்காரி பாராட்டிய அந்த சம்பவத்தால், அடை - அவியல், 'ஆலு தஹி' என்ற மொழி மாற்றம் பெற்று, குடும்பத்தினரை சிரிக்க வைத்தது.இப்படி ஹிந்தி அறியாமை சிரிப்பாய் சிரிக்க, ''பாட்டி... நீ, எம்.எஸ்சி., படிச்சேன்னு சொல்றே உனக்கு ஹிந்தி கத்து தரலையா,'' என, சரளமாக ஹிந்தி பேசும், ஏழாம் வகுப்பு படிக்கும் பேத்தி ரக்ஷணா கேட்டாள்.''அதையேன் கேக்கறே?'' என, அலுத்துக் கொண்ட, மாலினி பாட்டிக்கு அந்த சோகக் கதை நினைவுக்கு வந்தது.அந்த கால எஸ்.எஸ்.எல்.சி.,யில், ஹிந்தி ஒப்புக்கு சப்பாணியான, ஒரு பாடமாகத் தான் இருந்தது. ஹிந்தியில், ஐம்பதுக்கு ஒரு மார்க் வாங்கியதை எல்லாரிடமும் பெருமையாக சொல்லி, அதன் மூலம், ஹிந்தியை ஏளனம் செய்து மகிழ்வதுண்டு, ரகு தாத்தா.மாலினி, பி.யூ.சி., என்ற அந்த கால பிளஸ் 2வை, கல்லுாரியில் பயின்ற போது தான், ஹிந்தி திணிப்பு, ஹிந்தி எதிர்ப்பு என்றெல்லாம் பேசப்பட்டு, ஹிந்தி எழுத்துக்களின் மீது தார் பூசப்பட்டு போராட்டங்கள் துவங்கியிருந்தன.ஹிந்தி எதிர்ப்பு போராட்டங்களில் மாணவர்கள் ஈடுபட்டு சேவை செய்ய, ஒத்தாசையாக அடிக்கடி பள்ளி, கல்லுாரிகளுக்கு விடுமுறைகள் அறிவிக்கப்பட்டன.இப்படி கல்லுாரிகள் மூடப்பட்ட காலங்களில், காஷ்மீர் கி கலி, மேரா நாம் ஜோக்கர் மற்றும் ஜிகிரி தோஸ்த் என, இத்யாதி ஹிந்தி திரைப்படங்களுக்கு வீட்டுக்கு தெரியாமல் போக, மாலினிக்கு இணைபிரியா தோழியாக கிடைத்தாள், பூமாலை.பூமாலையின் தந்தை இளந்தமிழன், தீவிர ஹிந்தி எதிர்ப்பு அணியில் இருந்தவர். தந்தையின் உபதேசங்களை பூமாலை, மாலினியிடமும் ஓதி, அவள் மனதில், ஹிந்தியை, இரண்டு கோரப்பல் நீட்டிய அரக்கியாக சித்தரிக்க விட்டிருந்தாள்.ஆனாலும், வீட்டுக்குத் தெரியாமல் போக, அந்த இருவருக்கும் ஹிந்தி திரைப்படங்களே உசத்தியாக அமைந்தது. இப்படி, பூமாலை திருட்டுத்தனமாக ஹிந்தி படம் பார்ப்பதை பார்த்துவிட்டார், அவளது தந்தை. கையும் களவுமாக அவளை பிடித்து வீட்டுக்கு இழுத்து போய், பழுக்கக் காய்ச்சிய கம்பியால் அவள் கன்னத்தில் சூடு இழுத்து விட்டார்.'ஹிந்தியை எதிர்க்க இளந்தமிழன், தன் மகளுக்கு இட்ட சூடு...' என, அந்த காலத்து தினசரியில் தலைப்பு செய்தியாகவும், அது வந்தது. அப்படியிருந்தும், சூட்டோடு சூடாக, மாலினியுடன் தர்மேந்திரா, ஹேமமாலினி படங்களுக்கு சென்றாள், பூமாலை. இது தர்மமில்லை என்றாலும், பூமாலையின் முகத்தில் அந்த தழும்பை பார்க்கும் போதெல்லாம், மாலினிக்கு ஹிந்தியின் மேல் இனம் புரியாத வெறுப்பு, தழும்பாக பதிந்துவிடும்.அதன் விளைவாக மாலினியை, பக்கத்து வீட்டு, ஹிந்தி டீச்சரிடம் ஹிந்தி கற்றுக் கொள்ள வற்புறுத்தினாள், அம்மா. பூமாலைக்கு தெரிந்தால் அவளது பூமனம் புண்ணாகி போய்விடுமோ என கரிசனப்பட்டு, ஹிந்தி கற்பதை முற்றிலுமாக மறுத்தே விட்டாள், மாலினி.கல்லுாரி நாட்களுக்கு பின், பூமாலை குடும்பத்தார் எங்கோ குடி பெயர்ந்து சென்றுவிட்டனர். அவளது தொடர்பு துண்டிக்கப்பட்டாலும், மாலினியின் மனத்திரையில் பூமாலையின் முகவடு, அவள் மயிலாப்பூரில் மாவடு வாங்கும் போதெல்லாம் வந்து வேதனை தரும்.இந்த இடைப்பட்ட காலங்களில், மாலினிக்கு ஹிந்தி கற்கவில்லையே என்ற ஏக்கம் எழாமல் தான் இருந்தது. இருமொழியே அறிந்திருந்த மாலினி எனும் மாமியாருக்கு, மும்மொழி அறிந்த மும்பை நங்கையை மருமகளாக்கி, விதி சதி செய்துவிட்டிருந்தது.தன் தாயாருடன் மருமகள் ஜானா, போனில் பேசும் போதெல்லாம், தாய்மொழியாம் தமிழில் பேசாமல், ஹிந்தியில் பேசுவது மாலினிக்கு இம்சையாக இருக்கும். தன்னைப் பற்றி ஏதாவது தாறுமாறாக பேசுகிறாளோ என, அறிய முடியாத நிலைக்கு பழி வாங்கிக் கொண்டிருந்தது.அடடா! ஹிந்தி கற்காமல் போனோமே என, அப்போது எழுந்த ஒரு துளி ஏக்கம், இப்போது இந்த பெங்களூரு வாசத்தில் எக்கச்சக்கமாக பெருகியது. ஹிந்தி சம்பந்தமான தன் கடந்த கால நிகழ்வுகளை, பேத்தி ரக்ஷணாவிடம் சொல்லி முடித்தாள், மாலினி.''பாட்டி உனக்கொரு குட் நியூஸ்,'' என்றாள்.''என்ன, தமிழ் தெரிஞ்ச சமையல்காரியா வைக்கச் சொன்னேன். அம்மா வைக்கப் போறாளா?'' என, ஆவலாக கேட்டாள், மாலினி.''இல்லே, ஹிந்திகாரிக்கே நீ, ஹிந்தியிலே இட்லி செய்ய இனிமே கத்துக் கொடுக்கலாம். அதுக்காக நீ, சுலபமா ஹிந்தி கத்துக்கிற வாய்ப்பு வந்திருக்கு. எங்க ஸ்கூல் ஹிந்தி மேடம், நம்ப அபார்ட்மென்டுக்கே போன வாரம் குடி வந்திருக்காங்க,'' என்றாள், ரக்ஷணா.''அடி போடி பைத்தியமே. இந்த, 70 வயசுலே என்னை ஹிந்தி கத்துக்க சொல்றயாக்கும்,'' என, முதலில் ஏற்க மறுத்தாள், மாலினி. ''அம்மா போய் தான் முயற்சி பண்ணி பாரேன். 30 நாட்களில், ஹிந்தி கற்றுத்தர புத்தகம் மாதிரி, ஒரு மாசம் டியூஷன்லே, 'மாலும் நஹி'யோடு, முப்பது, நாற்பது ஹிந்தி வார்த்தைகள் கத்துக்க முடிஞ்சா, லாபம் தானே,'' என, மகன் பரத்தும் ஊக்கமளிக்க, அந்த முதியோர் கல்விக்கு ஒப்புக் கொண்டாள், மாலினி.பேத்தியிடம், புஷ்பா குப்தா என்ற, ஹிந்தி மேடத்தின் விலாச விபரங்களை கேட்டறிந்து, டியூஷன் பற்றி விசாரித்து வர, தன் கணவருடன் சென்றாள். 'தமிழ் தெரிஞ்ச டீச்சரா இருக்கக் கூடாதா? என்னமோ புஷ்பா குப்தாவாம் இவளுக்கும் இங்கிலீஷ் தெரியாம ஹிந்தி மட்டுமே தெரியற மாதிரி இருந்தா, எப்படி ஹிந்தி கத்து தருவாளோ...' என, அலுத்தபடி சென்று, பிளாட்டை தேடி அழைப்பு மணியை அடித்தாள். கதவை திறந்த அந்த முகமும், வடுவும் இன்ப அதிர்ச்சியாய் தாக்கியது.''நீங்க பூமாலை தானே?'' என, இவளும், ''நீ மாலினி தானே?'' என, அவளும் பரஸ்பரம் ஆச்சர்யப்பட்டு சந்தேகத்தை தீர்த்துக் கொண்டனர்.''எப்படி, இப்படி?'' என, வியப்பு மேலிட கேட்டாள், மாலினி; நிதானமாக விளக்கினாள், பூமாலை. பூமாலையின் தந்தை இளந்தமிழன், தேசிய கட்சி ஒன்றில் இணைந்ததில், டில்லிக்கு குடும்பம் இடம் பெயர்ந்தது. அதோடு, ஹிந்தி எதிர்ப்பும் மாற்றமடைந்து, மாற்றான் மொழிக்கும் மணம் உண்டு என, இளந்தமிழனின் மனமாற்றம், பூமாலையை ஹிந்தி பிரசார சபை மூலம் ஹிந்தி புலமை அடைய வைத்துவிட்டது.அதற்கும் மேலாக, குப்தா என்ற ஹிந்திகாரரை காதலித்து மணப்பதற்கும், குப்தாவின் விருப்பத்திற்கிணங்க, பூமாலை என்ற தமிழை, புஷ்பாவாக மாறிய கதைகளை சொன்னாள். டில்லியில், சி.பி.எஸ்.சி., பள்ளியில் பணிபுரிந்து, கணவர் குப்தா இறந்தபின், பெண்ணுடன் பெங்களூரு வந்து, இந்த, 70 வயதிலும் ஹிந்தி கற்றுக் கொடுக்கும் பணியை செய்வதாக கூறி முடித்தாள், பூமாலை.ஹிந்தி கற்காமல் விட்டுவிட்ட அசடுகளான ரகு தாத்தாவும், மாலினி பாட்டியும் கெட்டிக்காரியான புஷ்பா குப்தா சொன்னவைகளை, அசடு வழிய கேட்டுக் கொண்டிருந்தனர்.பின் அவளிடம் ஹிந்தி கற்றுக்கொண்டனரா என்ற வாசகர்களின் கேள்விக்கு பதில், 'மாலும் நஹி' என்பதே! அகிலா கார்த்திகேயன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !