உள்ளூர் செய்திகள்

ஆருயிராய் நின்றவனே!

காரிலிருந்து இறங்கி பங்களாவினுள் நுழைந்தாள், மோகனாஸ்ரீ. மாடியிலிருந்த தன் அறைக்குள் புகுந்து, கதவை படாரென மூடி கொண்டாள். உடையை மாற்றாமல், 'மேக்- அப்'பை கலைக்காமல் படுக்கையில் விழுந்தாள். விழிகள் நீரை பெருக்கின.'நான் ஏன் இப்படி இருக்கேன். எதுக்கு இப்படி ஒரு வாழ்க்கையை தேர்ந்தெடுத்தேன். பேசாம வைஷ்ணவியா, ஸ்ரீரங்கத்தில் இருந்திருக்கலாமே. என்னை ஏன் இப்படி மாத்தினே, என்னை படுகுழியில் தள்ளிட்டு, நீ ஏன் என்னை விட்டுப் போனாய். என் உயிரில் கலந்த உறவே நீதான்டா ரங்கா ரங்கா...' என்று கூறி, ஆற்றுவாரும், தேற்றுவாரும் இல்லாமல் விம்மி அழுதாள், வைஷ்ணவி என்ற மோகனாஸ்ரீ. 'ரங்கனையும், தாயாரையும் சேவிச்சுட்டு பிரசாத பொங்கலும், புளியோதரையும் சாப்பிட்டாலே ஜென்மம் கடைத்தேறிடுமே. எதுக்கு இப்படி பைத்தியமாட்டம் அலையறே...' பாட்டி கோதையின் குரல் ஒலித்தது. 'ஆமாம் நான் பைத்தியம் தான், பாட்டி. அதான் இப்படி ஒரு தறி கெட்ட நிலையில் இருக்கேன். ஐயோ நரகலில் கால் வைச்ச மாதிரி இருக்கே பகவானே...' என, அரற்றினாள்.'இந்த சீனுக்கு இந்த டிரஸ் தான் நல்லாயிருக்கும் மேடம். இது ஒரு சின்ன, 'அட்ஜஸ்மென்ட்' தானே... சீன் ஒன் டேக் டூ ரெடி. ரெடி ஸ்டார்ட் கேமரா ரோலிங் ஆக்ஷன். கட் கட்...' மனதில் ஓடிய ஒலிகள், வார்த்தைகளாக இல்லை, கனலாக எரிந்தது. 'எனக்கு எப்போ இங்கிருந்து விடுதலை கிடைக்கும். விஜி, என்னை வந்து கூட்டிண்டு போயேன்டா கடங்காரா...' மனம் ஆங்காரப்பட்டது. பூலோக வைகுண்டம் என போற்றப்படும், ஸ்ரீரங்கம், வைஷ்ணவியின் நினைவுகளில் அலை அலையாய் சுழன்றாடியது.'இன்னைக்கு சாயந்தரம் கோவிலுக்கு போறச்ச எனக்கு, தேன் மிட்டாய் வாங்கித் தரயா விஜி...' என்ற வைஷ்ணவியிடம், 'சரி வைஷு வேகமா நட, ஸ்கூலுக்கு, 'லேட்'டாயிடும்...' என்றான், விஜயரங்கன். இருவரும், ஸ்ரீரங்கம் கோவில் வீதியில், அடுத்தடுத்த வீடுகளில் வசிப்பவர்கள். இருவரின் பெற்றோரும் நண்பர்களாக இருந்ததால், இவர்களும் தோழமையுடன் இருந்தனர். சிறு வயதிலிருந்தே இரு வீடுகளிலும், 'வைஷுவை நம்ம ரங்கனுக்கே கொடுத்துடலாம். வயசு வித்தியாசமும் சரியாயிருக்கு...' என்பர்.விஜயரங்கன், வைஷ்ணவியின் வீட்டுக்கு வந்தால், 'வாடா மாப்பிள்ளை...' என்று அழைப்பதும், வைஷ்ணவியை ரங்கன் வீட்டில், 'வாம்மா நாட்டுப் பொண்ணே...' என அழைத்ததால் இருவரும், தாங்கள் வருங்காலத்தில் கணவன் - மனைவியாக வாழப் போகிறோம் என்ற நினைவுடனேயே பழகினர்.பேசி சிரித்து, சேர்ந்து விளையாடியவர்கள் ஒரு வயதுக்கு மேல், வெட்கம் மேலிட்டதால் கண்களால் ஜாடை பேசி, ஒரு முறுவலுடன் நகர்ந்து விடுவர். கல்லுாரிக்கோ, கோவிலுக்கோ, கடை வீதிக்கோ, வைஷ்ணவி எங்கு சென்றாலும், ரங்கன் அவளுக்கு அரணாக இருந்தான்.'நீ என்ன வைஷுக்கு பாடி கார்டா?' என, நண்பர்கள் கேலி செய்வதை பொருட்படுத்த மாட்டான், ரங்கன். வைஷ்ணவியும், தோழிகள் கேலி செய்தாலும், ரங்கன் வரவை விரும்புவாள். முக்கொம்பு, அம்மா மண்டபம் மற்றும் கல்லணை என்று, ஜோடியாக சுற்றியவர்களின் வாழ்க்கை, தமிழ் சினிமாவின் மிக பிரபலமான டைரக்டர், ஜெயமணியால் மாறியது. கல்லுாரிகளுக்கு இடையே மாணவர்களின் திறமைக்கான போட்டிகள், வைஷ்ணவி படித்த கல்லுாரியில் நடைபெற்றது. அதற்கு சிறப்பு விருந்தினராக வந்திருந்தார், இயக்குனர் ஜெயமணி.நடனப் போட்டியில் முதல் இடத்தை பிடித்த, வைஷ்ணவிக்கு பரிசை வழங்கியவர், 'மாணவி சம்மதித்தால் என்னுடைய அடுத்த படத்தில் இவரே கதாநாயகி...' என அறிவித்தார், ஜெயமணி. மாணவர்களின் கரகோஷமும், விசிலும் பறந்தன. திகைப்பின் உச்சியில் இருந்தாள், வைஷ்ணவி. இது தெரிந்ததும் வீட்டில், 'இதுக்குத்தான் நாட்டியமெல்லாம் ஆடாதேன்னு சொன்னது. பெண்கள் அடக்க ஒடுக்கமா இருக்கணும். கேட்டாத் தானே, எவனோ போக்கத்தவன் எதையோ உளறினான்னு அந்த சாக்கடைக்குள்ள காலை வைப்பாளா?' அனைவரின் வசவும், அறிவுரையும் பெற்றாள், வைஷ்ணவி. சென்னையில் ஐ.டி., கம்பெனியில் வேலைக்கு சேர்ந்திருந்த, ரங்கனுக்கு போனில் விஷயத்தை கூறினாள், வைஷ்ணவி. 'சும்மா சொல்லி இருப்பார், டைரக்டர். நீ அதையெல்லாம் கண்டுக்காதே...' என்று கூறி சிரித்தான், ரங்கன். ஆனால், இரண்டு நாட்களில் வீட்டுக்கு வந்த, ஜெயமணியின் வார்த்தைகளில் அனைவரும் மயங்கினர்.'நானும் உங்களவா தான். நாய் விற்ற காசு குரைக்குமா. ஒரே வருஷத்தில உங்க பொண்ணு கோடீஸ்வரி ஆயிடுவா. அதை வேண்டாம்பேளா...' இது போல் நிறைய பேசினார். 'ஒண்டுக்குடித்தனத்தில் எத்தனை நாள், லோல் படறது. வீட்டுக்கு வர்ற மகாலட்சுமியை தடுக்கலாமா. நடிக்க போனா என்ன குடியா முழுகிடும்...' என்று, சமரசத்திற்கு வந்தனர், அவள் பெற்றோரும், அண்ணனும்.ஆனால், 'குடி தாண்டா முழுகிடும். உங்க ஆசைக்கு அந்த குழந்தையை சீரழிச்சுடாதீங்கோ...' என்று பரிதவித்தாள், பாட்டி கோதை.'எனக்கு எதுவும் பிடிக்கலை. வேண்டாம்...' என்றாள், வைஷ்ணவி.விஜயரங்கனுக்கு போன் செய்து, 'நீதான் அவளுக்கு புத்தி சொல்லணும். எவ்வளவு பெரிய வாய்ப்பு. லுாசு மாதிரி வேண்டாம்ன்னு சொல்றா...' என்றான் கோபத்துடன், வைஷ்ணவியின் அண்ணன். ரங்கன் கொடுத்த தைரியத்திலும், அவனும் படப்பிடிப்புக்கு கூடவே வருவதாக உறுதி அளித்த பின்பே நடிக்க சம்மதித்தாள், வைஷ்ணவி. 'உனக்கு, 'கேமரா டெஸ்ட்' டே தேவையில்லை. நீ எந்த கோணத்தில் பார்த்தாலும் அழகாயிருக்கே. நான் சொல்லித் தருவதை சரியாக செய்தாலே போதும்...' என்று, ஜெயமணி கூறியதும், வைஷ்ணவியின் பயம் சற்று விலகியது. ஆனால், அவ்வப்போது அவர், 'நீ, என் மக மாதிரி...' என்று கூறி தோளை தடவுவதும், முதுகில் தட்டுவதும் தான் வைஷ்ணவிக்கு எரிச்சலைக் கொடுத்தது. 'விஜி இங்க பாரு. இந்த ஒரு படத்தோட போதும். நானும் படிப்பை முடிச்சுட்டா, நாம இரண்டு பேரும் கல்யாணம் செய்து சவுக்கியமா இருக்கலாம்டா. நடிப்பு தான் என்றாலும், ஆம்பளைகள் என்னை தொட்டு தொட்டு நடிக்கறது, கூசறது. எனக்கு பிடிக்கலடா...' என்று கெஞ்சினாள், வைஷ்ணவி.'சரி வைஷு. உனக்கு வேண்டாம்ன்னா நிறுத்திக்கலாம்...' என்று, ஆதரவாக கூறினான், ரங்கன். ஆனால், வைஷ்ணவி நடித்த முதல் படமே, 'ப்ளாக் பஸ்டர் மூவி' ஆனது. தயாரிப்பாளர்கள் வீட்டின் முன் வரிசை கட்டி நின்றனர். வைஷ்ணவி மற்றும் ரங்கனால், அதை தடுக்க இயலவில்லை. அடுத்தடுத்து படங்களும், 'சூப்பர் டூப்பர் ஹிட்' ஆனது.ஸ்ரீதேவியின் மறுபிறவி என கொண்டாடினர், ரசிகர்கள். ராசியான நடிகையாக, 'இண்டஸ்ட்ரி'யில் பெயர் எடுத்தாள், வைஷ்ணவி. பணத்தால் வந்த வசதி வாய்ப்பு, அவள் குடும்பத்தாரை மாற்றியது. பொன் முட்டையிடும் வாத்து ஆனாள், வைஷ்ணவி. புலி வால் பிடித்த கதையானது, அவள் வாழ்க்கை. வைஷ்ணவியின் பாதுகாவலனாக, ரங்கன் அங்கிருந்தால், தான் விரும்பும் வண்ணம், அவளை ஆட்டுவிக்க முடியாது என தெரிந்து கொண்டான், வைஷ்ணவியின் அண்ணன். ரங்கனை மிக மோசமாக நடத்தத் துவங்கினான். வைஷ்ணவியுடன் ரங்கன், படப்பிடிப்புக்கு போக தடை விதித்தான்.இரண்டு ஆண்டுகளில், 10 படங்களுக்கு, வைஷ்ணவியை, 'கால்ஷீட்' கொடுக்க வைத்து, ஓய்வில்லாமல் நடிக்க வைத்தான், அவளது அண்ணன். ரங்கனால் அவள் படும் துன்பத்தை கண் கொண்டு பார்க்க முடியவில்லை. ஒரு கட்டத்தில் வெறுத்துப் போய், வைஷ்ணவியின் வீட்டை விட்டு வெளியேறினான், ரங்கன். 'நான் படப்பிடிப்புக்கு வெளிநாட்டுக்கு போயிருக்கும் போது, சொல்லாம கொள்ளாம என்னை தவிக்க விட்டுட்டு போயிட்டயே. அந்த, 'ஹீரோ' தடியன் குடிச்சுட்டு வந்து, 'இந்த குளிருக்கு என்னை, 'அட்ஜஸ்ட்' செய்துக்கோ. என் அடுத்த படத்திலும் நீதான் ஹீரோயின்'னு சொல்றான். இப்படி ஒரு அவமானம் எனக்கு தேவையா.'விஜி, நான் உனக்கு தான்டா பெண்டாட்டியா இருக்க விரும்பினேன். ஆனா, இவங்க அப்படி என்னை வாழ விட மாட்டாங்க போலடா. நான் ஏன் இன்னும் உயிர் வாழணும்...' மனம் பேதலித்து புலம்பினாள், வைஷ்ணவி. அறைக்கதவை பட பட என தட்டி, ''வைஷு, தயாரிப்பாளர் வந்து இருக்காரு வெளிய வாம்மா...'' என்று அழைத்தான், அவள் அண்ணன். ஹாலில் அமர்ந்திருந்த இளைஞனைப் பார்த்து திகைத்தாள், வைஷ்ணவி.''இவர், 'இண்டஸ்ட்ரீ'க்கு புதுசு. யு.எஸ்.,லிருந்து வந்து இருக்கார். உனக்கு ஒரு படத்துக்கு, ஐந்து கோடி ரூபாய் தரேன்னு சொல்றாரு. ஆனா, வேற படத்துக்கு மூணு மாசத்துக்கு, நீ, 'கால்ஷீட்' கொடுக்க கூடாதுன்னு சொல்றாரு. ''இப்ப நீ நடிக்கிற, பொன் விலங்கு படம் கூட, நாலு நாளில் முடிஞ்சுடுது. அதனால நான் ஓ.கே., சொல்லிட்டேன். 20 லட்சம் ரூபாய் அட்வான்சும் வாங்கிட்டேன்,'' என்று அமர்த்தலாகக் கூறினான், அவள் அண்ணன். 'என்னிடம் அனுமதி கேட்கிற மாதிரி ஒரு நாடகம். ம்... பணம் பணம்ன்னு பேயா பறக்கிறானே...' நினைத்து கொண்டாள், வைஷ்ணவி.ஒப்பந்த பேப்பரில் கையெழுத்துப் போட்டு விட்டு, அறைக்குள் போக எழுந்தவளை நிறுத்தி, ''வைஷு, தயாரிப்பாளர் உன் கூட தனியா வெளியே போய் பேசணுங்கறாரு. போய் பேசிட்டு வாம்மா...'' என்றான், அவள் அண்ணன்.'அடப்பாவி, நீ இந்த வேலையும் செய்வியா...' என நினைத்த வைஷ்ணவி, ''ஹேண்ட் பேக் எடுத்துட்டு வரேன் அண்ணா...'' என்று, தன் அறைக்குள் வந்து, அங்கு இருந்த பழம் வெட்டும் கத்தியை எடுத்து, தன் பையில் போட்டு வந்தாள். 'இந்த ராஸ்கல் அத்துமீறினா அவனையும் கொன்னுட்டு, நானும் செத்துடுவேன்...' என்ற தீர்மானத்துடன் காரில் ஏறினாள், வைஷ்ணவி.பங்களாவை விட்டு, 2 கி.மீ., துாரம் தள்ளி வந்ததும், ஓரமாக காரை நிறுத்தினான், அந்த இளைஞன். வைஷ்ணவி தயாராக கத்தியை எடுத்துக் கொண்டாள்.தன் தலையில் இருந்த, 'விக்'கையும், ஒட்டு தாடி மற்றும் மீசை என, எல்லாவற்றையும் களைந்து விட்டு அவளை நெருங்கினான். அதைப் பார்த்து, ''விஜி, நீயா?'' எனக் கூவி, அவனை இறுகப் பற்றி கொண்டாள், வைஷ்ணவி. ''முள்ளை முள்ளால தானே எடுக்கணும். உங்க அண்ணனை ஏமாற்றத்தான், இந்த வேஷம். பொன் விலங்கு படத்தை முடிச்சுட்டு சினிமா உலகுக்கு ஒரு கும்பிடு போட்டுட்டு வந்துடு. நாம உடனே கல்யாணம் செய்துக்கலாம்,'' என்ற விஜயரங்கனை ஆசையுடன் அணைத்துக் கொண்டாள், வைஷ்ணவி என்ற மோகனாஸ்ரீ. பவானி உமாசங்கர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !