உள்ளூர் செய்திகள்

தீபாராதனா! (11)

முன்கதைச் சுருக்கம்: ஆ ராதனாவின் அம்மாவை சந்தித்து, அவருக்கும், தன் அப்பாவுக்கும் என்ன சம்பந்தம் என்று அறிந்து கொள்வதற்காக, ஆராதனா வீட்டுக்கு சென்றாள், தீபா. ஆராதனாவின் அம்மா, 'ஆசிட்' வீச்சில், முகம் சிதைந்து போய், அறைக்குள் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டிருந்தார். அவரை பார்த்ததும், திடுக்கிட்டு, இந்த விபரீதம் எப்படி நடந்தது என்று, ஆராதனாவிடம் கேட்டாள், தீபா. உங்க 'தீபா ஷிப்பிங் கம்பெனி'யில் வேலை செய்த ஒருவன் தான் இதற்கு காரணம் என்றும், அதற்கு பரிகாரம் செய்யவே, எங்கள் குடும்பத்தை காப்பாற்றினார், உங்கள் அப்பா, ஞானசேகரன் என்ற உண்மையை உடைத்தாள், ஆராதனா. ஆனால், அதை நம்ப முடியாமல் ஆராதனாவையும், அவள் தம்பி வருணையும் மிரட்டிவிட்டு சென்றாள், தீபா.தீபா வெளியேறிய பிறகு, அந்த வீட்டில் வெகு நேரம் நிசப்தம் நிலவியது. சிவந்த முகத்துடன் அன்றைய தினசரியை கவனமில்லாமல் மேய்ந்து கொண்டிருந்தாள், ஆராதனா. தீபாவுக்குத் தந்த பழச்சாற்றை கீழே கொட்டிவிட்டு, ஆராதனாவின் எதிரில் வந்து அமர்ந்தான், வருண். ''அக்கா, நான் ஒண்ணு கேக்கலாமா?'' என்றான். என்ன என்பது போல் நிமிர்ந்து பார்த்தாள், ஆராதனா. ''தீபாக்காகிட்ட ஏன் உண்மையை முழுசா சொல்லலை, நீ?'' ''இப்ப நாம சொன்னதையே அவ முழுசா நம்பல. உண்மையைச் சொன்னாலும், அவ நம்பப் போறதில்ல. விட்டுத் தள்ளு.'' ''அதுக்காக? நம்ம அம்மாவைப் பத்தி எவ்வளவு கேவலமாப் பேசினா, அவ? எனக்கு நாக்கு துடிச்சது. நான் எதுவும் பேசக்கூடாதுன்னு என்னைக், 'கன்ட்ரோல்' பண்ணிட்டியே. இல்லன்னா நிச்சயம் அவ அசிங்கப்பட்டுப்போற மாதிரி நாலு கேள்வி கேட்டிருப்பேன்.'' என்றான், வருண். ஆராதனா முகத்தில் உலர்ந்த புன்னகை மலர்ந்தது. ''எனக்கும், உனக்கும் தான் அம்மா. அவளுக்கு அவங்க யாரோ. அவ கேவலமாப் பேசினதால, அம்மா கேவலமாயிடுவாங்களா, வருண்?'' ''நீ எப்பவும், தீபா சார்பாவே பேசறக்கா!'' ''தீபா ஷிப்பிங் கம்பெனியே கைய விட்டுப் போச்சுன்னு அவ சொன்னது நமக்கே அதிர்ச்சியாத்தான இருக்கு. அவ இடத்துல நம்மளை வெச்சுப் பாரு. திடீர்ன்னு எல்லாம் இழந்து நிக்கறது அவளுக்கு எப்பேர்ப்பட்ட ஒரு, 'ஷாக்!' நாமதான் காரணம்ன்னு பழியைப் போட்டு சமாதானம் தேடிக்க அவ மனசு தவிக்குது.'' வருணுக்கு விளக்கம் கொடுத்ததிலேயே அவளுக்கும் தெளிவு கிடைத்து விட்டது போல் அவள் முகத்தில் ஒரு வெளிச்சம் வந்தது. குழப்பத்துடன், ஆராதனாவைப் பார்த்தான், வருண். ''பிசினஸே மூழ்கிப் போற அளவுக்கு அப்பா அப்படி எங்க தப்பு பண்ணியிருப்பாரு?'' ''வெளிப்படையா காரணம் தெரியல, வருண். ஆனா, கண்டுபிடிக்க முடியும்ன்னு நெனைக்கறேன்,'' என்று கூறி எழுந்தவள், ''வாரக் கடைசிலயாவது அம்மாகூட இருக்கணும்ன்னு தான நீ வந்தே, போ. அம்மா, 'வெயிட்' பண்ணிட்டிருக்காங்க , '' என்று சொல்லிவிட்டு, முகம் கழுவி கிச்சனுக்குள் நுழைந்தாள், ஆராதனா. ''பச்சைப் பொய் அவ சொன்னது எல்லாமே பச்சைப் பொய்ன்னு உனக்குத் தெரியலையா, தீபு? உங்க கம்பெனி ஆளு, 'ஆசிட்' அடிச்சானாம். அதுக்காக, உங்கப்பா அவங்க குடும்பத்தைப் பாத்துக்கறாராம். நீ நம்பிட்டியா?'' என்ற, திலகன் குரலில் ஆவேசம் இருந்தது. ''நானும் நம்பல, திலக். ஆனா, குழப்பமா இருக்கு!'' அவன் வழக்கமாகக் கூட்டிச் செல்லும் அதே கோவில். அதே மர நிழல். ''அவங்கம்மாவை பார்த்தா நீயும், 'ஷாக்'காயிருவ, திலக். ஐயோ, பேய் படத்துல வரவங்க மாதிரி இருந்தாங்க,'' என்று சொல்கையில், தீபாவின் உடல் தன்னிச்சையாக உதறிற்று. ''அந்தப் பொண்ணு, ஆராதனா நல்ல, 'சைக்காலஜி' தெரிஞ்ச பொண்ணாயிருக்கும். எடுத்தவுடனே, இருட்டு ரூம்ல அவங்க அம்மாவைக் காட்டி, உன்னைக் கலங்கடிச்சிருக்கா. அப்புறம் எது சொன்னாலும், உனக்கு பெரிய பாதிப்பு இருக்காதுன்னு அவளுக்கு தெரிஞ்சிருக்கு. அந்த கிலியிலே இருந்து நீ வெளிய வரதுக்குள்ள, என்னென்னவோ சொல்லி உன்னை குழம்ப வெச்சிருச்சு.'' என்றான், திலகன். தீபா முகத்தில் இன்னும் குழப்பம் கூடிற்று. ''அந்தக் குடும்பத்துல, ஏதோ திருட்டுத்தனம் இருக்குன்னு தெரியுது, திலக். என்னன்னு என்னால கண்டுபிடிக்க முடியல.'' ''முத்துராமன் சார் தான் உனக்கு நெருக்கமாச்சே! கம்பெனில, எந்த ஆளு அப்படி, 'ஆசிட்'அடிச்சான்னு அவர்கிட்ட கேளேன்.'' ''கேட்டு...'' ''அவ சொல்றது பொய்யா, உண்மையான்னு கண்டுபிடிக்கலாம் இல்ல?'' யோசனையுடன் தலையாட்டினாள், தீபா. ''இல்ல, நானே ஆள் வெச்சு கண்டுபிடிக்கவா, தீபு?'' ''அதை விட முக்கியம் உன் படிப்பு. நாளைக்கு 'பைனல் எக்ஸாம்ஸ்' இருக்கு இல்ல? டிகிரில வாங்குன மாதிரி, நீ எம்.பி.ஏ.,லேயும், 'கோல்டு மெடல்' வாங்கணும். கம்பெனில நீ பெரிய பதவியில உக்காரணும். முத்துராமன் அங்கிள்கிட்ட நான் சொன்னா தட்ட மாட்டாரு.'' ''செஞ்சிருவோம்,'' என்று உற்சாகமாக சொன்ன திலகன், ''ஒரு, 'பெஸ்ட் ஆப் லக்' கிடையாதா, தீபு?'' என்று தன் உதடுகளைத் தொட்டுக் கேட்டான். ''இந்த மரத்தடில உக்காந்தாலே, உன் மூடு கண்டபடி தறிகெட்டு ஓடுது. இப்ப இருக்கற மூடுல அதெல்லாம் கெடையாது. நீ, 'கோல்டு மெடல்'லோட வா, பாக்கலாம்,'' என்று செல்லமாக உறுமினாள், தீபா. 'கீர்த்திலால் பிரதர்ஸ்' மாபெரும் ஏற்றுமதி நிறுவனம். திருப்பூரிலிருந்து ஆடைகள், ஆம்பூரிலிருந்து தோல் காலணிகள், சென்னப்பட்டணத்திலிருந்து மர பொம்மைகள், சென்னையிலிருந்து செயற்கை ஆபரணங்கள் என்று பல்வேறு பொருட்களுக்கு ஏற்றுமதி ஏஜன்சியாக விளங்கும் நிறுவனம். சென்னை, கொச்சி, கொல்கத்தா என்று தென் பாரதத்தில் இயங்கி கொண்டிருந்த நிறுவனம். இப்போது மும்பையையும் தன் வணிக வரைபடத்தில் சேர்த்துக் கொள்ளவிருந்தது. நிறுவனத்தின் தலைமையகம் பரபரப்பான பாரிமுனையில் இருந்தது. ஐந்துமாடிக் கட்டடம். குளிரூட்டப்பட்ட ஒவ்வொரு தளத்திலும் வெவ்வேறு துறைகளுக்கான ஊழியர்கள். ஆராதனா தன் சுழல் நாற்காலியிலிருந்து எழுந்து விரல்களை கோர்த்து நெட்டி முறித்தாள். காலையிலிருந்து கம்ப்யூட்டரில் புதிதாக இணையும் கம்பெனியின் பணியாளர் விபரங்களைப் பார்த்துப் பார்த்துக் குறிப்பெடுத்ததில், கண்களும் களைத்திருந்தன. இன்டர்காம் ஒலித்தது. ''மேடம், உங்களைப் பார்க்க, ராகேஷ்ன்னு ஒருத்தர் வந்திருக்காரு.'' பரபரப்பானாள், ஆராதனா. ''கேன்டீன்ல உக்கார வையுங்க. அங்க, 'மீட்' பண்றேன்.'' மொட்டை மாடியில் துணிப்பந்தலிட்டு, ஊழியர்களுக்கான சிற்றுண்டி விடுதி. கடற்காற்று பிய்த்துக்கொண்டு போகும்போதெல்லாம் துணிக்கூரை அவிழ்ந்து விடுமோ என்று அச்சம் வரும். இணையான தெருவில் வரிசையாக நெருக்கி நிற்கும், பர்மா சந்தைக் கடைகளையும், அவற்றுக்கும் பின்னால், விரையும் மின் ரயில்களையும் அங்கிருந்து பார்க்க முடியும். ஆனால், அவற்றில் எல்லாம், ஆராதனாவின் கவனம் இல்லை. கையில் பிடித்திருந்த, ராகேஷ், முதன்மை துப்பறிவாளர், தி பைனாக்குலர்ஸ் என்ற முகவரி அட்டையின் மீதுதான் இருந்தது. கவனம் இப்போது, ராகேஷ் மீது திரும்பியது. முப்பதைத் தாண்டிய வயது. ஐந்தரை அடி உயரம். தலையில் தமிழ்வாணன் தொப்பி. நெற்றியில் ஏற்றிக்கொண்ட குளிர் கண்ணாடி. உருண்ட முகம். கூர்மையான கண்கள். சற்று அகன்ற மூக்கு. தடிமனான உதடுகள். தொளதொளவென்று கட்டம்போட்ட ஒரு சட்டை. சற்று கனமான குரல். ''நீங்க இன்னும் ஸ்மார்ட்டான ஆளா எதிர்பார்த்திருப்பீங்க,'' என்றான், புன்னகையுடன், ராகேஷ். ''ஆனா, இந்தத் தோற்றத்துலதான் என்னை எல்லாரும் பார்க்கணும்ன்னு நான் திட்டமிட்டுதான் இப்படி இருக்கேன். களத்துல இறங்கும்போது, இந்தத் தொப்பி, கண்ணாடி, லுாசான சட்டை எதுவும் இருக்காது. அப்போ நான் வேற, ராகேஷா இருப்பேன். சட்டுன்னு யாராலயும் அடையாளம் கண்டுபிடிக்க முடியாது,'' என்றான். புன்னகைத்தாள், ஆராதனா. ''தோற்றத்தை கவனிக்காம திறமையை எடை போடற வேலைலதான் நான் இருக்கேன். திறமையான ஒருத்தரை அனுப்பறதாத்தான் உங்க பாஸ் எங்கிட்ட சொல்லியிருந்தாரு.'' ''உங்களுக்கு நான் எப்படி உதவ முடியும்? ஆபீஸ்ல யாரையாவது கண்காணிக்கணுமா? போட்டிக் கம்பெனியிலிருந்து ஏதாவது, 'கொட்டேஷன்' எடுத்திட்டு வரணுமா?'' என்றார், ராகேஷ். ''நோ, நோ இது, 'பர்சனல்!' 'தீபா ஷிப்பிங் ஏஜன்சி'னு ஒரு கம்பெனி இருக்கு, தெரியுமா?'' ''பீச் ஸ்டேஷனுக்கு எதிர்சாரில இருக்கு. சமீபத்துலதான் அதோட ஓனர் இறந்துட்டாரு. இப்ப கம்பெனி, கல்யாண் மேத்தா கைக்கு மாறிடிச்சு.'' சட்சட்டென்று தகவல்கள் தந்து, அவளை அசத்தும் அவசரம், ராகேஷிடம் இருந்தது. ''அந்தக் கம்பெனி பத்தி எனக்கு என்னென்ன விபரங்கள் வேணும்ன்னு ஒரு பட்டியலே போட்டிருக்கேன்,'' என்று அச்சடித்த ஒரு தாளை அவனிடம் நீட்டி, ''ரொம்ப ரொம்ப முக்கியம், நாம விசாரிக்கறது, யாருக்கும் சந்தேகம் வரக்கூடாது. ''இனிமே என்னை இங்க, 'மீட்' பண்ணவும் வராதீங்க. தகவல் எது கெடைச்சாலும், மொதல்ல ஒரு போன் பண்ணுங்க. எங்க சந்திக்கறதுன்னு நான் சொல்றேன். இது என், 'பர்சனல் ஒர்க்.' கம்பெனி பேர்ல பில்லு போடாதீங்க. என் பேர்ல போடுங்க.'' என்றாள், ஆராதனா. ''பாஸ்கிட்ட பேசிக்குங்க'' என்று எழுந்தான், ராகேஷ். ஒரு காலைச் சற்றுச் சாய்த்து சாய்த்து அவன் நடந்து போவதும், தோற்ற மாயைக்காகவா என்று யோசித்தாள், ஆராதனா. 'தீபா ஷிப்பிங் ஏஜன்சீஸ்' என்ற பெயர் பலகையைப் பார்த்தபோது, கண்ணில் நீர் திரண்டது. விரலோரத்தால் அதைச் சுண்டி விட்டாள், தீபா. இந்தப் பெயரையும் எப்போது மாற்றுவார்களோ, தெரியாது. 'லிப்ட்'டில் இரண்டாவது மாடியை அடைந்தாள். ஞானசேகரன் உயிரோடு இருந்த போது, இரண்டு முறைதான் அந்த அலுவலகத்திற்கு வந்திருக்கிறாள். இரண்டு தடவையும் தன் அப்பாவோடு பெருமை பொங்க, சற்றே அண்ணாந்த முகத்தோடு நுழைந்த அதே அலுவலகத்தில், இப்போது அந்நியர்போல் நுழைவது சற்று சங்கடமாகத்தான் இருந்தது. அங்கங்கே பரிச்சயமான சில முகங்கள் தென்பட்டன. சிலர் புன்னகைத்தனர். அவள் முதுகுக்குப் பின், கிசுகிசுப்பாகப் பேசிக்கொள்வர் என்று நினைத்தே, யாரையும் பார்த்து பதிலுக்கு ஒரு புன்னகை கூட சிந்தவில்லை, தீபா. ''மேடம் நீங்க?'' என்று எதிர்ப்பட்ட பணியாளரிடம், ''முத்துராமன் அங்கிள் எங்கே இருக்கார்...'' என்று கேட்டாள். ''அப்பாயின்ட்மென்ட் இருக்கா, மேடம்?'' என்றான், பணியாள். ''அவருக்கு கம்பெனில, 'அப்பாயின்ட்மென்ட்' கொடுத்தவரோட மக நான். என்கிட்டயே கேக்கறியா?'' என்று, அவனிடம் தேவையில்லாமல் சிடுசிடுத்தாள், தீபா. அதற்குள் பழகிய நபர் ஒருவர் குறுக்கிட்டு, ''கடைசி ரூம், மேடம்,'' என்றார். 'ஜெனரல் மேனேஜர்' என்று அறிவித்த அறைக்குள், கதவைத் தட்டிவிட்டு, புயலாக நுழைந்தாள், தீபா. கம்ப்யூட்டரில் ஏதோ படித்துக்கொண்டிருந்த, முத்துராமன் திகைத்து, சற்றே கோபத்தோடு நிமிர்ந்தார். தீபாவைப் பார்த்ததும், முகம் மாறியது. ''அடடா, போன் பண்ணியிருந்தா, நானே வந்திருப்பேனேம்மா,'' என்று சைகையாலேயே எதிர் நாற்காலியைக் காட்டினார். ''என்ன சாப்பிடறே? காபி? டீ? அல்லது ஹாட் சாக்லேட்?'' ''இந்தத் தண்ணி போறும்,'' என்று மேஜையிலிருந்த தண்ணீரை எடுத்து 'மடக் மடக்'கென்று குடித்தாள், தீபா. ''அங்கிள், நான் ஒரு கேள்வி கேட்டா, உண்மையான பதில் சொல்வீங்களா?'' 'ஐயோ, இவள் என்ன கேள்வி கேட்டு தர்மசங்கடப்படுத்த போகிறாளோ...' என்பதுபோல், எச்சரிக்கையாக, ''சொல்லும்மா,'' என்றார், முத்துராமன். ''நம்ம வீட்டுக்கு, ஆராதனா, வருண்னு ரெண்டு பேர் வந்தாங்களே, ஞாபகம் இருக்கா?'' ''சொன்னேனேம்மா அவங்களை முன் பின் நான் பார்த்தது இல்ல.'' ''அதைக் கேக்கல. அவங்க வீட்டுக்கு நான் போயிருந்தேன். நம்ம கம்பெனில வேலை பார்த்த யாரோ அவங்கம்மா மூஞ்சில 'ஆசிட்' அடிச்சதா அவ சொன்னா அது யாருன்னு எனக்குத் தெரியணும்.'' - தொடரும்சுபா


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !