ஜானகி ஒரு மாதிரி!
''மிஸ்டர் பிரபு... சொல்றத தப்பா எடுத்துக்க கூடாது. இந்த அலுவலகத்தில் நீங்க தெரிந்து கொள்ள வேண்டியது உங்க வேலையை மட்டுமல்ல, அதை தாண்டியும் நிறைய இருக்கு,''என்றார், சீனிவாசராவ். அரசு பணியின் முதல் நாள்; முதல் அலுவலகமும் கூட. சீனிவாசராவ் - நான் வேலையில் சேர்ந்திருக்கும் இந்த அலுவலகத்தின் மூத்த அதிகாரி; எனக்கும் மேலதிகாரி. நிமிர்ந்து அவரை நோக்கினேன். ''நான் சொல்றத கேட்கும் மன நிலையில் இல்லையோ?'' என்ற, சீனிவாசராவின் கேள்வியில் ஒரு வித எரிச்சலும், எள்ளலும் நிரம்பியிருந்தது. மேலதிகாரி என்ற முறையில், அவரது நேரடியான கேள்வியில் ஒரு முறை தடுமாறி, அவசர அவசரமாக மறுத்தேன். ''என் அரசுப் பணியின் முதல் குரு நீங்க தான்,'' என்றேன். என் பணிவான வார்த்தைகள், அவரை சாந்தப்படுத்தி இருக்க வேண்டும். ''அரசுப் பணி மட்டுமல்ல, அலுவலக நடைமுறைகளும் உங்களுக்கு புதுசு. வேலை சொல்லித் தர நாங்க இருக்கோம். ஆனா, இங்கே வேலை செய்யுறவங்க ஒவ்வொருத்தரும் ஒரு விதம்.'' ''குட் மார்னிங் சார்.'' எங்கள் பேச்சின் கவனத்தை கலைத்தது, அந்த தேனினும் இனிய மென்மையான குரல். ''ஜானகியா? வா, வா. ரெண்டு நாளா ஆளைக் காணோம்?'' வரவேற்புடன் கேள்வியையும் விதைத்தார், சீனிவாசராவ். ''பக்கத்து வீட்டுல ஒரு விசேஷம். உறவினர்கள் அதிகமில்லை. அதுதான் கூடமாட ஒத்தாசைக்கு போனேன்,'' என்றாள், ஜானகி. ''ஒத்தாசை பண்றது உனக்கு புதுசா என்ன?'' என, அவர் சொல்லியதில், ஏதோவொரு விகல்பம் இருப்பதாகவே எனக்கு பட்டது. எதுவும் பதில் கூறாமல், தன் இருக்கைக்கு சென்றாள், ஜானகி. என் இருக்கைக்கு பக்கத்தில் தான், அவளது இருக்கையும். தன்னை கடந்து, தங்கள் இருக்கைக்கு சென்று கொண்டிருக்கும் சக அலுவலர்களுக்கும், புன் சிரிப்போடு காலை வணக்கத்தை, சொன்னாள், ஜானகி. சுண்டினால் சிவக்கும் பசுந்தளிர் மேனி என்றெல்லாம் சொல்ல முடியாது. ரவிவர்மாவின் ஓவியம் என, சொல்ல முடியாவிட்டாலும், டிஜிட்டலின் செதுக்கல் அவளிடம் இருந்ததை மறுக்க முடியாது. அணிந்திருக்கும் உடையின் நேர்த்தி, சிகை அலங்காரம், எந்த நிலையிலிருந்து பார்த்தாலும் அவளை முதல் தடவை பார்ப்பவர்களை, மீண்டும் பார்க்க வைக்கும் ஈர்ப்பு விசை இருந்தது. கல்வியும், பாரதி சொன்ன புதுமைப் பெண்ணின் தோற்றமும், சிந்தனையும் அவளிடம் இருந்தது. என் சிந்தனை வேறு பக்கம் தாவியிருப்பதை, தன் அனுபவத்தால் உணர்ந்திருக்க வேண்டும், சீனிவாசராவ். ''லுக் மிஸ்டர், பிரபு,'' அவரது சொற்களில் கடுமை விரவியிருந்தது. ''எஸ் சார்.'' ''நீங்க இந்த அலுவலகத்தில் யாரைப் பற்றி தெரிஞ்சுக்குவீங்களோ இல்லையோ... நிச்சயமா, ஜானகியைப் பற்றி தெரிஞ்சுக்கணும். ஏன்னா, இந்த அலுவலகத்தில் பணியில் இருப்பவர்களில், ஜானகி ஒரு மாதிரி. தன்கிட்ட அழகு இருக்குன்னு நினைத்து ஆணவத்தில் ஆட்டம் போடுவாள். போகப் போக அவளைப் பத்தி நிறைய தெரிஞ்சுக்குவீங்க,'' என்றார். அவரது முகக்குறிப்பிலிருந்து அவர் என்ன நினைக்கிறார் என்பதை என்னால் ஓரளவுக்கு அவதானிக்க முடிந்ததால், ''சொல்லுங்க ஐயா. அனுபவம் வாய்ந்தவர் நீங்கள். உங்கள் சொல்லில் எந்தவித பிசகும் இருக்காது,'' என்றேன், பணிவான குரலில். ''நீ புத்திசாலி தான்,'' சீனிவாசராவின் குரலில் மகிழ்ச்சி மட்டுமல்ல, என்னை விளிப்பதில் ஒருமையும் கலந்தே இருந்தது. எங்கள் அலுவலகத்தில் பணியிலிருக்கும் தட்டச்சர், மாலதி. கழிவறையில் சந்தித்த போது, அலுவலக உதவியாளர் அழகேசன் மற்றும் பக்கத்து இருக்கை முருகேசன் எல்லாரும் ஒட்டுமொத்தமாய் சொன்ன ஒற்றை சொல், 'ஜானகி ஒரு மாதிரி' என்பது தான். ப ள்ளி படிப்பை முடித்து, கல்லுாரியில் காலடி எடுத்து வைக்கும் பாக்கியம் கிடைக்கவில்லை எனக்கு. சைக்கிள் கடை, துணிக்கடையில் கணக்கெழுதும் வேலை பார்த்து... சொந்தமாய் முட்டை வியாபாரம் நடத்த ஆசைப்பட்டு வாங்கி வரும் வழியில் மொத்தமாய் போட்டு உடைத்து, வாழ்க்கை போராட்டம் நடத்தி கொண்டிருந்த எனக்கு, யாரோ செய்த புண்ணியத்தால், அரசு வேலை கிடைத்துள்ளது. யார் யாரோடு இருந்தால் என்ன? எப்படி வாழ்ந்தால் என்ன? கிடைத்த வேலையில் காலுான்றி, பிழைத்துக் கொள்வது தான் புத்திசாலித்தனம். நான் எந்த வம்பு தும்புக்கும் போகாமல் இருக்க உறுதி எடுத்தேன். இ ரண்டு வாரங்கள் ஓடி விட்டது. மேலதிகாரி சீனிவாசராவ், அன்று விடுமுறை போலிருக்கு. இருக்கையில் ஆள் இல்லை. மேலாளர் அழைப்பதாக வந்து நின்றார், அழகேசன். ஒரு பைலை என் கையில் தந்து, ''படித்துப் பாருங்கள். இதன் மீது எந்தவிதமான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என, அலுவலகக் குறிப்புடன் மீண்டும் என்னிடம் கொண்டு வாருங்கள்,'' என்றார், மேலாளர். பைலை பலமுறை படித்துப் பார்த்தேன். என் மர மண்டைக்கு புரியவில்லை. மாலதியிடம் கேட்டேன். ''இங்குள்ள சீனியர்கள் சொல்றதை அல்லது எழுதி தந்ததை, தட்டச்சு செய்ய மட்டும் தான் எனக்கு தெரியும். மேல் நடவடிக்கை எடுப்பது குறித்தெல்லாம் ஆலோசனை, எனக்கு சொல்லத் தெரியாது,'' என்றாள். எனக்கு மண்டை காய்ந்தது. ஜானகி அங்கிருந்தாலும், மற்றவர்கள் சொல்லி வைத்திருக்கும் எச்சரிக்கை, கேட்க தயக்கம் காட்டியது. என் நிலையை, ஜானகி உணர்ந்திருக்க வேண்டும். ''கேன் ஐ ஹெல்ப் யூ?'' நுனி நாக்கு ஆங்கிலத்தில் கேட்டவள், ''பைலை கொடுங்க. என்னால் முடியுதான்னு பார்க்கிறேன்,'' என்றவாறு, என் கையிலிருந்த பைலை உரிமையுடன் வாங்கி கொண்டாள். கூர்ந்து வாசித்த பின், ஒரு துண்டு தாளில், எதையோ எழுதி, தாளையும், பைலையும் என்னிடம் தந்தவள், ''படித்துப் பாருங்கள். உங்கள் மனதுக்கு சரியென்று பட்டால், நீங்கள் எழுதும் அலுவலகக் குறிப்புடன் இதையும் சேர்த்து கொள்ளுங்கள்,'' எனச் சொல்லி, தன் இருக்கையை நோக்கி நகர்ந்தாள், ஜானகி. ஜானகி, துண்டுத்தாளில் எழுதி தந்ததை, அப்படியே அலுவலக குறிப்பாக்கி, மேலாளர் கைகளில் தந்தபோது, ''ஒண்டர்புல்,'' என, வியந்து பாராட்டினார். ''எனக்கு உதவி செய்ததில், ஜானகிக்கும் பங்கு உண்டு,'' என்றேன், உண்மையை மறைக்காமல். ''ஓ! ஜானகி மேடம் உதவி செய்தார்களா?'' மேலாளாரின் சொற்களில் ஒருவித குறும்புத்தனம் இழையோடியது. ''கு றைந்த வாடகைக்கு வீடு அமைந்தால், ஊரிலிருக்கும் அம்மாவையும் அழைத்து வந்து விடலாம். வயது மூப்பு. தனித்திருப்பது அவர்களுக்கு சிரமம்,'' என, ஜானகியிடம் சொல்லி வைத்திருந்தேன். மறுநாள் காலையில் அலுவலகம் வந்த ஜானகி, தங்கள் தெருவில் அவளது வீட்டிலிருந்து, நாலு வீடு தள்ளி சிறிய வீடு இருக்கிறது என்றும், வாடகையும் அதிகமில்லை என்ற தகவலை சொன்னாள். ஜானகி ஒரு மாதிரி மற்றவர்களுக்கு; என்னளவில் அவள் சரியாக இருப்பதாகவே பட்டது. ஜானகி பார்த்து தந்த வீடு தற்சமயம் எனக்கும், அம்மாவுக்கும் போதுமானதாக இருந்தது. ஊரிலிருந்து தேவைக்கேற்ப பொருட்களை எடுத்து வந்து, எதை எந்த இடத்தில் வைத்தால் சரியாக இருக்கும் என, மனதுக்குள் கணக்கிட்டு, ஒழுங்குபடுத்தி கொண்டிருந்தேன். ''மே ஐ கம் இன் சார்,'' என்ற, ஜானகியின் குரல் கேட்டு திரும்பி பார்த்தேன். ''வாம்மா,'' என்றேன். ''ஆங்கிலத்தில் தடுமாற்றமா?'' ''இல்லை. இளம் வயதிலிருந்தே இப்படி பழகி விட்டேன்.'' ''உண்மையில் நல்ல பழக்கம், அண்ணா! நான் உங்களை அண்ணா என்று சொல்லலாம் தானே?'' ''நிச்சயமாக. களங்கம் இல்லாத சொல் தான், ஜானகி,'' என்றேன், நான். ''எதிர்பாரா விருந்தாளியாய் நான் இப்போது வந்துவிட்டேனா?'' ''யார் சொன்னது?'' என் குடும்பம் மற்றும் அவளது குடும்பம், படிப்பு, உடன் பிறப்புகள் என, பேச்சு பல திசைகளில் சென்று கொண்டிருந்தது. திடீரென்று என் வாயிலிருந்து அந்த வார்த்தை வந்து விட்டது. ''ஏன் ஜானகி, நம் அலுவலகத்தில் எல்லாரும், நீ ஒரு மாதிரி என்று சொல்கின்றனர்?'' என, கேட்டு விட்டேன். ஜானகியின் முகத்தில் திடீர் மாற்றம் மின்னலிட்டு மறைந்தது. பின் இயல்பான கலகலப்புக்கு திரும்பியவள் பேச ஆரம்பித்தாள்... ''உண்மை கசக்கும் தானே, அண்ணா? முற்படுத்தப்பட்ட சமூகம். வீட்டில் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு பெரியவர்கள் யாருமில்லை. என் குடும்ப நிலையை தெரிந்து, வேலியில்லா தோட்டம் என்ற நினைப்பில் என்னிடம், நம் அலுவலக நண்பர்கள் சிலர் நடக்க முயற்சித்தனர். ''நம் அலுவலக அழகேசனுக்கு, 15 ஆயிரம் ரூபாய் சம்பளம். சம்பளப் பட்டியல் அப்படித்தான் சொல்லுது. அரசு தரும் எந்த கடனுதவியையும் விட்டு வைக்கல. மிச்சம் சொச்சமா வீட்டுக்கு கொண்டுப் போறதே மிகமிகக் குறைவு. ''சம்பளம் கிடைத்த மறுநாளே அஞ்சும், பத்துன்னு ஒவ்வொருத்தரிடமும் கடன் கேட்கும் குடும்ப நிலை. அழகேசன் ஒருநாள், 'வா, ஜாலியா இருப்போம்'ன்னு, கூப்பிட்டாரு. ''இது மாதிரி ஆளுங்கிட்ட அறிவுரை சொன்னா எடுபடாது. எனவே, 'தொகை அதிகமாக இருக்கும். வெச்சிருக்கியா'ன்னு கேட்டேன். அன்னைக்கு போனவர் தான். ''நம்ம சீனிவாசராவ், வயசு ஐம்பதை தாண்டியாச்சு. கட்டிக் கொடுக்க வேண்டிய வயசில பொண்ணு இருக்கு, அவரு ஒருநாள் பல்லைக் காட்டிட்டு வந்து நின்னார். 'சார் உங்களுக்கு வயசாயிடுச்சு. எனக்கு வயசு 25. என்னை, உங்களால திருப்திப்படுத்த முடியாது. உங்களுக்கு பையன் இருந்தா அனுப்பி வையுங்கள். செலவை நீங்க பார்த்துக்கங்க'ன்னு சொன்னேன்.'' ''அருமையான நெத்தியடி தான்...'' ''இப்படித்தான், அண்ணன் இடத்தில் இருக்க வேண்டியவர்களும், அப்பாவாக நிற்க வேண்டியவர்களும், வரம்பு மீறி நடக்க ஆசைப்படும் போது, அறிவுரைகள் எடுபடாது. ஆணும் - பொண்ணும் சமம்ன்னு சட்டம் சொல்லுது. கல்வியிலேயும், வேலைவாய்ப்பிலேயும் அந்த உரிமை கிடைக்குது. ''ஆனால், பாலியல் சுரண்டல். வீடு, பள்ளி, கல்லுாரி வேலை செய்யும் அலுவலகம்... எங்கே பெண்களுக்கு பாதுகாப்பு இருக்கு. தீ எரிஞ்சு முடிச்சதுக்கப்புறம் வருமே தீயணைப்புத்துறை. அவங்கள குத்தம் சொல்லல. ''இங்கே, இப்போ தீ எரியப் போவுதுன்னு அவங்களுக்கு ஜோதிடம் தெரியாது. தகவல் கிடைச்சதும் ஓடி வந்து எரியுற தீயை அணைப்பதும், மேலும், பரவாமல் தடுக்கவும் தான் முடியும். அதுதான் உண்மை. ''இதுமாதிரி தான் காவல் துறையும், மற்ற துறைகளும். ஒவ்வொரு தனி மனிதருக்கும் பாதுகாப்பு தர இயலாது. ஆனா, வாழும் வாழ்க்கையில, எந்த பெண்ணும் எல்லா இடங்களிலும் ஏதோ ஒரு வகையான இடைஞ்சல்களை ஒவ்வொரு நொடியும் சந்தித்து கொண்டு தான் இருக்கின்றனர். ''என்னை சீண்ட நினைக்கும் மிருகங்களை, ஒவ்வொரு இடத்திலும் நான் அப்படி இல்லைன்னு சொல்லிக்கிட்டு நிக்க முடியாது. அப்படி சொன்னாலும், அதற்காக வேறு கதைகளை கட்ட ஆரம்பிப்பர். ''நம் அலுவலகத்தில் பாருங்கள், என்னிடம் நெருங்க நினைத்தவர்களுக்கு, என் பதில் ஒருவகையான அவமானம் தான். அதை மறைக்க அவர்கள், தங்கள் கையில் எடுத்த ஆயுதம் தான் இது. 'இந்த ஜானகி ஒரு மாதிரி'ன்னு சொல்லியே என்னை அவமானப்படுத்துகின்றனர். ''ஒரே அலுவலகத்தில் கூடி வேலை பார்க்கிறவங்ககிட்டேயே இப்படிப்பட்ட குதர்க்கமான எண்ணங்கள் இருந்தாலும், என்கிட்ட அதுபோல எதுவும் கிடையாது. ''அலுவலக ரீதியாகவோ, தனிப்பட்ட வாழ்க்கையிலோ துன்பம் நேர்ந்தால், ஒருத்தருக்கு ஒருத்தர் ஓடி வந்து உதவணும். அப்பத்தான் நாம மனுஷங்கன்னு அர்த்தம். அதை விட்டு பாலியல் சீண்டலும், சுரண்டலுக்கும் இடம் கேட்டா எப்படி அண்ணா விட்டு கொடுக்க முடியும். ''நெருங்கி பார்த்தவங்க கிட்ட, கூச்சல் போட்டு கூட்டத்தை கூட்டாம, அவங்க பாதையிலே அவங்களை நெருங்க விடாம செஞ்சிருக்கேன். ''என் அப்பா இருக்கும் வரை, அடிக்கடி ஒன்றை சொல்லிட்டே இருப்பார். 'ஜானகி, வீசுகிற வாசனையும், பேசுகிற சொற்களும் தான் பெருமை சொல்லும்'ன்னு. என்னைப் போன்றோர், சாதுர்யமாக தப்பிக்க சில வழிமுறைகளை கையாளும்போது, 'அவள் அப்படி; இவள் இப்படி' என்ற பெயரை சம்பாதிக்கிறோம். ''என்னை நெருங்க விடாம, இந்த மிருகங்களிடமிருந்து என்னை நான் காப்பாத்திக்கணும். அவர்களை எதிர்த்து நிக்க, எனக்கு தெரிஞ்ச ஒரு வழியா இதை கையில எடுத்துள்ளேன். தன்னை பலவான்னு நினைச்சுக்கிட்டு பல்லைக் காட்டிட்டு வர்றவங்ககிட்ட, அவங்க பலகீனத்தையே சொல்லி, எனக்கான பாதுகாப்பு ஆயுதமாக்கி கொள்கிறேன். இது, தப்பா அண்ணா?'' ''நிச்சயம் தப்பு இல்லை. 'வஞ்சகம் செய்வாரைக் கண்டால் முட்டி மோதி விடு'ன்னு, பாரதியாரே சொல்லியுள்ளாரே!'' எந்த கருப்பு மேகங்களும், இவள் மீது கறை படிய வைக்க முடியாது என்பது தெளிவாக தெரிந்தது. ஊருக்காகவும், உறவுகளின் பழிச் சொல்லுக்கும் அஞ்சி, வாயில்லா பூச்சிகளாய் வாழும் பெண்கள் மத்தியில், ஜானகி, 'ஒரு மாதிரி' தான் தெரிந்தாள். பாரதி தேடிய புதுமை பெண்கள் வரிசையில் தான், ஜானகியும் இருப்பதாக, என் மனம் சொல்ல ஆரம்பித்தது. ந. ஜெயபாலன்