மாதா கோவில் மணியோசை!
அதிகாலையில் ஆரம்பித்த கனமழை சற்று குறைந்து துாறலாய் மாறியிருக்க, வீட்டுக்குள் ஒரு கனத்த அமைதி. முந்தின இரவு, சென்னைக்கு சென்ற வேலவன், இன்னமும் வீடு திரும்பாதது, மனைவி சங்கரியை மன உளைச்சலுக்கு ஆளாக்கியிருந்தது.பத்தாவது முறையாக, தன் மொபைல் போனை எடுத்து, கணவனை அழைத்தாள். எதிர்முனையில் எடுக்காததால், முக வாட்டத்தோடு எடுத்த இடத்திலேயே திரும்பவும் போனை வைத்தாள், சங்கரி. இரண்டு நாட்களுக்கு முன், கணவன் பேசியதையும், இவள் அதற்கு பதில் சொன்னதையும் நினைத்து பார்த்தாள்.'வர வர யாரை நம்புறது? யாரை நம்பக் கூடாதுன்னே தெரியல, சங்கரி...' என்று திடீரென்று ஞானோதயம் வந்தவன் போல் கூறினான், வேலவன்.போன வாரம் வந்த, தன் பெரிய அக்கா, சுமதி சொன்ன விஷயத்தின் பாதிப்பில் தான், கணவன் அப்படி பேசுகிறான் என்பதை புரிந்துகொண்டாள், சங்கரி. விரக்தியாய் சிரித்து, 'எங்க பெரியக்கா இப்படி இருப்பாள்ன்னு நான் கொஞ்சங்கூட எதிர்பார்க்கலைங்க...' என்றாள்.'ரெண்டு வருஷத்துக்கு முன், இதே பெரிய அக்காவிடம் வாய்விட்டே கேட்டேன்... 'அக்கா இந்த வருஷம் கோடை லீவுக்காவது பிள்ளைகளை எங்க வீட்டுக்கு அனுப்பு. ஒரு மாசம் எங்க கூட இருந்திட்டு வரட்டும்'ன்னு.'அதுக்கு எங்க அக்கா என்ன சொல்லிச்சு தெரியுமா? 'அதுக எல்லாம் டவுன்லேயே பொறந்து, வளர்ந்த குழந்தைங்க. அதுங்க கேக்கற, 'பீட்சா, பர்கர்' அங்க கிடைக்காது. நினைத்த நேரத்துக்கு ஐஸ்கிரீம் கேக்குங்க. 10 கி.மீ., துாரம் போய் வாங்கிட்டு வர்றதுக்குள்ள உருகிடும். உங்க கலாசாரம், ஊர் மற்றும் உங்க வீடு எதுவும் அதுகளுக்கு செட்டாகாது'ன்னு, என்னமோ நாமெல்லாம் ஏதோ குக்கிராமத்துல குடியிருக்காப்பல பேசினா...' அதைக் கேட்டு, வாய்விட்டு சிரித்தான், வேலவன்.'சங்கரி... உங்க அக்காவாவது பரவாயில்ல. என் சித்தப்பா பையன், அதான் நம்ம கோபி என்ன சொன்னான் தெரியுமா? நம்ம தெரு பிள்ளைங்களோடு அவன் பிள்ளைகள் விளையாடி உடம்பெல்லாம் புண்ணு வந்துடிச்சாம். இனிமே இங்க பிள்ளைங்களை கூட்டிட்டு வரவே மாட்டேன்னு, மூஞ்சியில அடிச்சாப்ல சொன்னான். எனக்கு வந்த கோபத்துக்கு, அவனை ஓங்கி ஒரு அறை அறையலாம்ன்னு தோணிச்சு தெரியுமா?''ம்ம்... நமக்குன்னு ஒரு பிள்ளை இருந்திருந்தா, இப்படியெல்லாம் நடக்குமா? அதுக்கு தான் நமக்கு கொடுப்பினை இல்லையே?' கசிந்த கண்ணீரை முந்தானையால் ஒற்றியெடுத்தாள், சங்கரி. 'கவலைப்படாதே, சங்கரி. இவங்களை பற்றி தெரிஞ்சிக்க நமக்கு கிடைத்த வாய்ப்புன்னு நினைச்சுக்கோ. நாளைக்கு நம்ம சொத்து விஷயமா சென்னைக்கு போறேன். இறுதி தீர்ப்பு வரப் போவுது. போயிட்டு வந்து ஒரு நல்ல செய்தியை சொல்றேன்...' என, சொல்லிவிட்டு போனான்.அதனால் தான், கணவரிடமிருந்து எந்த தகவலும் வராமல், போனும், 'சுவிட்ச் ஆப்' செய்யப்பட்டுள்ளதால் தவித்தாள், சங்கரி.வாசலில் ஆட்டோ சத்தம் கேட்டது. அதிலிருந்து, இறங்கிய வேலவனை பார்த்த பின் தான், சங்கரியின், சுவாசம் சீரானது. முக மலர்ச்சியோடு வாசலை நோக்கி ஓடினாள்.வேலவனின் முகமும் தெளிந்திருந்தது. இத்தனை வருஷ வாழ்க்கையில் இப்படி ஒரு செழித்த முகத்தை கண்டதில்லை, சங்கரி. கையிலிருந்த பையை வாங்கினாள்.''சங்கரி பயந்திட்டியா? பஸ் கிடைக்கலை. லாட்ஜில தங்கிட்டு, வெள்ளன கிளம்பி வரேன். மொபைல்ல, 'சார்ஜ்' இல்லாம, 'ஆப்' ஆயிடிச்சு.''''ம்ம்... சரி உள்ள வாங்க,'' என்று சமையலறை பக்கம் திரும்பியவளை தடுத்து நிறுத்தி, தன் கையிலிருந்த அந்த பைலை அவளிடம் கொடுத்தான். ''இந்தா, இதை சாமி அறையில எடுத்து போய் வை,'' என்றவனை, யோசனையோடு பார்த்தாள், சங்கரி.''என்ன அப்படி பார்க்குற? இப்ப நாம நல்ல நெலைமைக்கு வந்திட்டோம். வருஷக் கணக்குல இழுத்துக்கிட்டு கிடந்த, எங்க பூர்வீக சொத்து சம்பந்தப்பட்ட கேஸ் முடிஞ்சு, அந்த சொத்து மொத்தத்துக்கும் நானே உரிமைக்காரன்னு தீர்ப்பாயிடுச்சு. ஒண்ணு, ரெண்டல்ல மொத்தம், பத்து கோடி ரூபாய் தேறுமாக்கும் அந்த சொத்து,'' என்றான். ''என்னங்க சொல்றீங்க. என்னால நம்பவே முடியலை,'' என்றவள், முகத்தில் ஆச்சரியம் பூத்தது.''இந்தச் சூழ்நிலையில நாம ஒரு குழந்தையை தத்தெடுத்துக்கலாம்ன்னு, முடிவு பண்ணியிருக்கேன். நீ என்ன சொல்றே?'' ''நீங்க எது செஞ்சாலும் சரியா தாங்க இருக்கும். அப்படியே செய்வோம்ங்க. இந்த விஷயம் கேள்விப்பட்டா, நம்ம சொந்த பந்தங்கள் எல்லாம் என்ன சொல்ல போறாங்களோ தெரியலை?''''எந்த விஷயத்தை சொல்ற? சொத்து வந்ததையா... குழந்தையை தத்து எடுக்க போறதையா?'' ''ரெண்டுமே தாங்க.'' ''நம்ம சொந்தக்காரங்ககிட்ட இந்த ரெண்டு விஷயத்தை பற்றி பேசணும்...'' என, வேலவன் சொன்னானே தவிர, அவன் முகத்தில் குழப்பம் சூழ்ந்து கொண்டது. அன்றிரவு அனைவருக்கும் போன் போட்டு பேசினர். முடிந்தால் நேரில் வருமாறு சொல்லி, போனை வைத்தனர். விடியற்காலையில், கதவு தட்டும் சத்தம் கேட்டு எழுந்து வந்து பார்த்த, சங்கரிக்கு ஆச்சரியம். தன் பிள்ளை குட்டிகளோடு வந்து இறங்கியிருந்தான், வேலவனின் சித்தப்பா மகன், கோபி.அடுத்த பத்தாவது நிமிடம் சங்கரியின், அக்கா சுமதி, தன் இரண்டு பெண் பிள்ளைகளோடு வந்து இறங்கினாள். ''அக்கா நைட் பேசும்போது கூட, நீ வர போறதா சொல்லலியே?'' என்றாள், சங்கரி.''அதுவா உனக்கு, 'சர்ப்ரைஸ்' கொடுக்கலாம்ன்னு தான் கிளம்பி வந்துட்டேன். இவங்களும் சித்தியை பார்க்கணும்ன்னு ஒரே தொண தொணப்பு.''''இருக்கட்டும், இருக்கட்டும். பிள்ளைங்களுக்கு சித்தி மேல பாசம் ஜாஸ்தி,'' என்று சிரித்தபடி சொன்னான், வேலவன். இவர்களாவது, வேலவன் அழைத்து வந்திருந்தனர். ஆனால், சங்கரியின் சித்தி பெண் தேவி, அழைக்காமலே தன் மகனோடு வந்திருந்தாள். காலை உணவுக்கு பின் அனைவரும் ஒன்று கூடி அமர்ந்திருந்தனர்.''அண்ணே, உங்களுக்கு சொத்து கிடைச்சதுல, எனக்கு ரொம்ப சந்தோஷம். ஆனா, குழந்தையை தத்து எடுக்க போறதா சொன்னீங்களே. அதுல தான் கொஞ்சம் வருத்தம். ஏன் தெரியாமத்தான் கேக்குறேன், நாங்களெல்லாம் உங்க கண்ணுல தெரியலையா?''புள்ளையை எதுக்கு வெளியில தேடணும். எங்க வீட்டுக் குழந்தைகள்ல ஒண்ணைத் தத்தெடுத்து வளர்த்துக்கலாமே,'' என்று, கோபி சொல்லி வாய் மூடவில்லை, அதற்குள் சுமதி வாய் திறந்தாள்.''இதோ பாருங்க, அவர் வீட்டுல ரெண்டும் ஆண் பிள்ளைங்க. அவனுங்க குறிப்பிட்ட வயசு வரைக்கும் தான், தாய் - தகப்பன் மேல பாசமா இருப்பானுங்க. அப்புறம் பொண்டாட்டின்னு ஒருத்தி வந்துட்டான்னா, தாயாவது, தகப்பனாவதுன்னு கிளம்பி போயிடுவானுங்க.''ஆனால், பொம்பளை பிள்ளைங்க அப்படியில்லை. நமக்கு ஒரு தலைவலின்னா ஓடிவந்து உதவி செய்யுங்க. முடியாத காலத்துல பாசமா கவனிச்சுக்குங்க. ஏன், நாளைக்கு செத்துட்டாலும் தலைமாட்டுல உட்கார்ந்து அழுவுறது, பொம்பளை பிள்ளைங்க தான். அதை, முதல்ல புரிஞ்சிக் கோங்க. ''எம் பொண்ணுங்களில் ஒன்றை தத்து எடுத்துக்கோ. உங்க ரெண்டு பேரையும் அது கவனிச்சுக்கும்,'' என்று, சுமதி சொல்லி முடித்த கையோடு, தேவி ஆரம்பித்தாள்... ''மாமா எனக்கிருக்கிறது ஒத்தப் புள்ள. எனக்கு புருஷன்காரன் சரியில்லை. என் புள்ளையை விட்டுட்டு போறேன். நீங்க வளர்த்துக்கோங்க,'' என, கண் கலங்கியபடி சொன்னாள், தேவி.என்ன பதில் சொல்வது என்று புரியாமல் கையை பிசைந்தான், வேலவன். சில நிமிட அமைதிக்கு பின், ''அண்ணே, ஆம்பிள பிள்ளைங்கன்னா எங்கேயாவது ஒரு மூலையில கிடந்துப்பானுங்க. ஆனா, பொம்பளை பிள்ளை அப்படி இல்லை. எப்பவுமே நம்ம கவனத்துக்குள்ளேயே வச்சிருக்கணும்.''கல்யாணம் பண்ணி கொடுக்கிற வரைக்கும் அதுங்களை பாதுகாக்கணும். அதுங்களை கரை ஏத்துறதுக்குள்ள, உங்க நிம்மதியே போயிடும். நல்ல வாழ்க்கை அமையிலேன்னா கண்ணை கசக்கிக்கிட்டு வந்து நிக்குங்க. அதனால, எந்த முடிவா இருந்தாலும் பொறுமையா யோசிச்சு எடுங்க,'' என்றான், கோபி. ''அதென்ன ஆண்பிள்ளை, பெண் பிள்ளை, எல்லாம் ஒண்ணு தான். எந்த பிள்ளை வேணும்ன்னு அவங்க ரெண்டு பேரும் முடிவு பண்ணட்டும்,'' என்று கோபப்பட்டு பேசினாள், சுமதி. சாயந்திரம் குடும்பத்தினர் ஒன்று கூடியிருக்க, வேலவன் வீட்டில் வேலை செய்யும், ஜோதி, சம்பளம் வாங்குவதற்காக வந்திருந்தாள். கூடவே வந்திருந்த, அவளின் மூன்று குழந்தைகளும், எலும்பும் தோலுமாய் நின்றிருந்தனர். ''ஜோதி... நாங்க உன்கிட்ட ஒரு உதவி கேட்கலாம்ன்னு இருக்கிறோம்,'' என்று சுற்றி வளைத்துப் பேச விரும்பாத வேலவன், பட்டென போட்டு உடைத்தான். ''நீ, எங்க வீட்டுல ரொம்ப வருஷமா வேலை பார்த்துக்கிட்டு இருக்கே. உனக்கு, எங்க குடும்ப விஷயம் நல்லாவே தெரியும். என் மனைவி, மூணு தடவை கரு உண்டாகி, மூணு தடவையும் கரு கலைஞ்சி, உடல் நலம் மொத்தமாய் பாதிக்கப்பட்டு, படுத்த படுக்கையாய் கிடந்தாள்.''ஒரு சகோதரி மாதிரி கூட இருந்து, கொஞ்சமும் அருவருப்பு படாமல், அவளுக்கு பணிவிடைகள் செய்ததை நானே, என் கண்ணால் பார்த்து நெகிழ்ந்து போயிருக்கேன்.''''அண்ணே அதையெல்லாம் பெருசா பேசணுமாங்கண்ணே?'' என்று சங்கோஜப்பட்டாள், ஜோதி.''கண்டிப்பா பேசணும். மூணு வருஷத்துக்கு முன், பைக்ல போன உன் புருஷன் விபத்தில், குத்துயிரும் குல உயிருமாய் கிடந்தான். ஆஸ்பிட்டல்ல சேர்த்து, எவ்வளவோ சிகிச்சை கொடுத்தும், அவனை பிழைக்க வைக்க முடியல. நீயும் பணம் செலவு பண்ணி பார்த்தே... ஆனாலும், அவன் உயிரை மீட்க முடியல.''''அண்ணே, எங்க வீட்டுக்காரர் குடிச்சிட்டு நிதானமில்லாம வண்டி ஓட்டினதுமில்லாம, 'ஹெல்மெட்'டும் போடாம போனதால விபத்துல இறந்து போயிட்டார். தப்பு அவர் மேல தான்...' என்றாள், ஜோதி. ''நான் நேரடியாகவே விஷயத்துக்கு வரேன். உன்னோட குழந்தைகளில் ஒன்றை, நாங்க தத்து எடுத்து வளர்க்கலாம்ன்னு இருக்கோம். உனக்கு சம்மதமா?'' என, வேலவன் கேட்டதும், சுற்றியிருந்த உறவினர்களின் முகங்களில் அதிர்ச்சி பரவியது.''அண்ணே, என்ன சொல்றீங்க? நீங்க எங்க, நாங்க எங்க? இது சரிப்பட்டு வருமா?'' என்று தயக்கத்தோடு கேட்டாள், ஜோதி.''ஏன் வராது. தத்து எடுக்கற எங்க மனசும், தத்துக் கொடுக்கற உன் மனசும் சரியா இருந்தா, எல்லாம் சரிப்பட்டு வரும். வேற யாராவது உங்க குடும்பத்தை சேர்ந்த பெரியவங்ககிட்டே பேசணும்ன்னா சொல்லுமா. நாங்களே பேசறோம்,'' என்றான், வேலவன்.''தேவையில்லண்ணே... என் வீட்டுக்காரர் இறந்த அடுத்த நாளே, சொந்த பந்தங்கள் எல்லாம் எங்களை விட்டு விலகிப் போயிட்டாங்க. ''இந்த மூணு குழந்தைகளையும் வெச்சுக்கிட்டு தனியா எப்படிப் பொழைக்கப் போறோம்ன்னு நெனச்சு தினம் அழுதிட்டிருக்கேன். என் அழுகையை பார்த்து அந்த கடவுள் தான், உங்கள் உருவத்துல வந்திருக்காரோன்னு தோணுதுங்கண்ணா,'' என்றாள், ஜோதி. ''பெரிய வார்த்தைகளெல்லாம் வேண்டாம். நாங்க உன் கஷ்டத்துல பங்கெடுத்துக்கறோம். அதாவது, உன் சுமையில கொஞ்சம் நாங்க சுமக்கறோம். என்ன சொல்றே?'' என்றான், வேலவன்.சில நிமிடங்கள் தீர்க்கமாய் யோசித்த ஜோதி, ''அண்ணே... இதோ என்னோட குழந்தைகள். அதுல எந்தக் குழந்தைய நீங்க எடுத்துக்க விரும்புறீங்களோ எடுத்துக்கங்க,'' என, தன் குழந்தைகளை நோக்கி கை காட்டினாள்.ஓடி சென்று, கடைசி பெண் குழந்தையை துாக்கி, ''இவள் பெயர் என்ன ஜோதி?'' என்று கேட்டாள், சங்கரி.''தங்கம்,'' என்றாள், ஜோதி.''தங்கம்...'' என, ஆனந்த கண்ணீரோடு, குழந்தையை அணைத்துக் கொண்டாள், சங்கரி. அப்போது, துாரத்திலிருந்த மாதா கோவில் மணியோசை கேட்டது.டெய்சி மாறன்