உள்ளூர் செய்திகள்

பந்தய புறா!

பள்ளி வளாகத்தில் காக்கி சட்டை அணிந்து வந்த, அறிவழகனை பார்த்ததும், டிரைவர் ராமுவுக்கு ஆச்சரியமாக இருந்தது. அவர்களின் நெடு நாளைய பழக்கம், அறிவழகனின் சிரிப்பிலும் தெரிந்தது. ''ராமு, நீ இந்த ஸ்கூல்ல தான் வேலை பாக்குறீயா?''''என்ன அறிவு, நான், ஸ்கூல் பஸ் ஓட்டுறது உனக்குத் தெரியாதா, மறந்துட்டீயா?''''இல்லப்பா, நீ ஸ்கூல் பஸ் ஓட்டுறது தெரியும். ஆனா, அது இந்த ஸ்கூலுன்னு தெரியாது.''''நீ, எங்கே இந்தப் பக்கம். அதுவும் காலையிலேயே, 6:00 மணிக்கெல்லாம் வந்திருக்கே!'' ''நானும், இந்த ஸ்கூல்ல வேலைக்கு சேர்ந்து இருக்கேன்பா,'' என்ற, அறிவழகன் பளிச்சென்று குளித்து, விபூதி இட்டு இருந்ததை கவனித்தான், ராமு.''என்ன அறிவு, நெசமாவா? நான் என்னவோ சவாரி ஏத்திக்கிட்டு வந்திருக்கியோன்னு நினைச்சேன்.'' ராமுவும், அறிவழகனும் சின்மயா நகர் ஆட்டோ ஸ்டாண்டு நண்பர்கள். ஆறு மாதம் முன், மெட்ரோ பணி துவங்கியதும், தொழிலில் சுணக்கம் ஏற்பட்டது.சவாரிக்கு சிரமப்பட்ட, ராமு, வாடகை ஆட்டோவை ஒப்படைத்துவிட்டு சாமர்த்தியமாக அருகாமையில் இருக்கும், ராணியம்மை மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் டிரைவராக வேலைக்கு சேர்ந்து விட்டான்.காலை 6:00 மணிக்கு பஸ்சை எடுத்து, மாணவ - மாணவிகளை, 'பிக்-அப்' செய்து, மாலை 4:00 மணிக்கு அழைத்து சென்று, 'டிராப்' செய்வது, எளிதான வேலையாக ராமுவுக்கு இருந்தது. வேலையில் ஒரு மரியாதையும், ஆசிரியருக்கு இணையாக மாணவ - மாணவியர் மதிப்பதும், ராமுவுக்கு நெகிழ்ச்சியாக இருந்தது. அவனிடம் இருந்த முரட்டுத் தனமும், தீய குணங்களும் அவனையும் அறியாமல் காணாமல் போயிருந்தன.''புதுசா ஒரு டிரைவர் வரப் போறாருன்னு கேள்விப்பட்டேன். அது நீ தானா!'' என்றான் ராமு.பள்ளியின் தாளாளர் சீனுவாசன், பள்ளியினுள் நுழைந்தார். அவருக்காக காத்திருந்த, அறிவழகன், சிரித்தபடி வணக்கம் வைத்தான். ''என்ன, ரெண்டு பேரும் நண்பர்களா?'' ''ஆமாம் சார்,'' என்ற ராமுவுக்கு, பார்வையால் நன்றியை தெரிவித்தான், அறிவழகன். ''நல்ல விஷயம். தினமும் நேரத்துக்கு வந்து வண்டிய எடுத்துடுங்க. உங்கக் கூட ஆயாம்மா வருவாங்க. அவங்க பசங்களை பாதுகாப்பா ஏத்துற, இறக்குற வேலையை பார்த்துப்பாங்க. சுருக்கமா சொல்லணும்ன்னா, கண்டக்டர் மாதிரி.''''புரியுது சார்,'' என்றான், அறிவு. ''வேற ஒண்ணும் புதுசா சொல்றதுக்கு இல்ல, அறிவழகன். உங்க குழந்தைங்க மாதிரி பார்த்துக்கங்க. எந்தவித அசம்பாவிதமும் நடந்துடக் கூடாது. தவறு தெரிஞ்சா உடனே வேலையை விட்டு அனுப்பிடுவேன்,'' என்று கண்டிப்பான குரலில் எச்சரித்து விட்டு போனார். உண்மையில், தன்னை விட முரட்டு சுபாவமும், இரக்கமும் காட்டத் தெரியாத, அறிவழகன் பவ்யமாய் கைக்கட்டி, மரியாதையாக நிற்கும் காட்சியை நம்ப முடியாமல் பார்த்து நின்றான், ராமு. வாழ்க்கையில் அடிப்பட்டு மிதிப்பட்டு ஆட்டோ ஓட்டி காலத்தை தள்ளலாம் என நினைத்தால், 'கால் டாக்சி, ஓலா, ரேபிடோ' என, எளிய டிரைவர்களின் வாழ்வாதாரத்துக்கு, 'ஆப்பு' வைத்தது. கோயம்பேடு மார்க்கெட்டில் மூட்டை துாக்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டனர், நிறைய ஆட்டோ டிரைவர் நண்பர்கள். இந்த டிரைவர் தொழில், தன் குடும்பத்தை கவுரவமாக வைத்து பாதுகாப்பதாக, அடிக்கடி நினைத்துக் கொள்வான், ராமு. ''என்ன ராமு, கொஞ்ச நாளா நீ, பைபாஸ் ரேசுக்கு கூட வர்றது இல்லை...'' என்றான், அறிவழகன். ராமுவுக்கு பெரும்பாலான கெட்ட பழக்கவழக்கங்களை கற்றுக் கொடுத்ததே, அறிவழகன் தான்.''கையில் காசு புழக்கம் இல்லைப்பா. சுத்தமா எனக்கு அந்த ஞாபகம் வர்றதே இல்லை. வயசாகிக்கிட்டே போகுது. பசங்க வேற வளந்துட்டு வர்றாங்க.''''ம்... குடும்பத்து மேல ரொம்ப கரிசனம் வந்துடுச்சு போல இருக்கே.'' ''உண்மை தான்பா. இந்த ஸ்கூல்ல வேலைக்கு வந்ததுல இருந்து நிறையவே மாறிட்டேன். பசங்களை படிக்க வைக்க, ஒவ்வொரு பெற்றோரும் படுற வேதனை, கடமையை உணர்ந்தும், பசங்க நடந்துக்குற விதமும் என்னை அடியோட மாத்திடுச்சுப்பா. சரி, நான் வண்டியை எடுக்கட்டுமா?'' ''ராமு, உனக்கு எந்த ஏரியா?''''பாடி, அம்பத்துார், அயப்பாக்கம். உனக்கு?''''அண்ணாநகர், அமைந்தகரை, சூளைமேடு,'' என்றபோது, அறிவழகன் பஸ்சுக்கான ஆயம்மாள் சரோஜா வந்து சேர்ந்தாள்.''டிரைவர் அண்ணா போகலாமா,'' என்றாள், சரோஜா.''நீங்க தான் ஆயாம்மாவா... நம்பவே முடியலை?'' ''சின்ன வயசா இருந்தாலும், பசங்களுக்கு பணிவிடை செய்யற வேலை பார்க்குறதால அப்படித்தான் கூப்பிடுவாங்க. அதுபோல, 'ரிடையர்' ஆகற வயசுல இருக்கிற வாத்தியாரை அவங்களே, 'மாஸ்டர்'ன்னு சொல்லிப்பாங்க,'' என சிரித்தாள். டயரை சோதித்தபடியே பஸ்சை சுத்தி வந்த அறிவழகன், டிரைவர் சீட்டில் தாவி ஏறி அமர்ந்தான். நல்ல, 'கண்டிஷனில்' இருந்தது, பஸ். மேலும், நான்கைந்து, 'ரூட்'டுக்கான வாகனங்கள், ஏதோ ரேசுக்கு போவது போல, ஒவ்வொன்றாக நுழைவு வாயிலை விட்டு வெளியே போய்க் கொண்டு இருந்தன. அறிவழகன் பஸ்சுக்கு இணையாக, ராமுவும் வாகனத்தை எடுத்து வந்து, ''என்ன அறிவு, ரேஸ் வச்சுப்போமா?'' என, கண் அடித்தான்.''என்னப்பா சொல்றே?''''நீதான் ஞாபகப்படுத்தினே!''''ஆட்டோ ரேஸ் வேற, இது ஸ்கூல் பஸ்சுப்பா,'' என்றான், அறிவழகன்.''பயந்து, ரிவர்ஸ் கியர் போடாதேப்பா. சும்மா இருந்த சங்கை ஊதிவிட்டுட்டே. ஒரு, 'த்ரில்' வேண்டாமா? ஏறக்குறைய, ரெண்டு பேருக்கும் ஒரே துார பயணம் தான். யாரு ஜெயிக்கிறாங்கன்னு பார்த்துடுவோமா?'' என்ன பதில் சொல்வது என தெரியாமல் முழித்தான், அறிவழகன். அப்போது, அவனுக்குள் இருந்த மிருகம் மெல்ல விழித்து கொண்டது. தோற்பதையும், பயந்து ஒளிவதையும் இழுக்கான விஷயமாக கருதினான். தீர்க்கமான பார்வை பார்த்து, தன் கட்டை விரலை நீட்டி, ''பந்தயத்துக்கு தயார்,'' என்றான்.''சபாஷ் சரியான போட்டி,'' என, வண்டியை இடது பக்கமாக, ராமு திருப்ப, வலது பக்கமாக திருப்பினான், அறிவழகன்.சரோஜாம்மாள், 'ஸ்டாப்' என்ற இடத்தில் பஸ்சை நிறுத்துவதும், 'ரைட்' எனும் போது போவதுமாக கட்டுப்பாட்டுடன், 'ஸ்டீயரிங்கை' இயக்கினான், அறிவழகன்.சரோஜா முதலில் கீழே இறங்கி, ஒவ்வொரு மாணவ - மாணவியரையும் கைப்பிடித்து பத்திரமாக மேலே ஏற்றிவிடும் பாங்கில், தாய்மை உணர்வும், பாதுகாப்பும் இருந்தது. பெற்றோர்கள் சிநேகமாக சிரித்து நலம் விசாரிப்பதை பார்க்கும் போது, எல்லாருக்கும் பிடித்தமானவராக, சரோஜா இருப்பதை அறிந்து கொண்டான், அறிவழகன். 'டாடா' காட்டும் பிள்ளைகளுடன் சேர்ந்து, அவளும் பெற்றோருக்கு, 'டாடா' காட்டினாள். அழும், பிரீகேஜி குழந்தை ஒன்றை, தோளில் போட்டு தாலாட்டியபடியே சமாதானப்படுத்தினாள். அந்தக் குழந்தையும் அழுகையை நிறுத்தி ஆச்சரியப்படுத்தியது.''டிரைவர் அங்கிள் உங்க பெயரென்ன?'' என, கேட்டான், ஒரு மாணவன். ''அறிவழகன்,'' என்றான், உற்சாகமாய்.''ஓ... நீங்க தான் அறிவா? இனிமே அறிவு இல்லாம வராதீங்கடான்னு எந்த டீச்சரும் எங்களை சொல்ல முடியாதே?'' என்றான், துடுக்கு மாணவன் ஒருவன்.சக மாணவ - மாணவியர் கைதட்டி சிரித்தனர். பள்ளம் மேடு பார்த்து, அறிவழகன் சாமர்த்தியமாய் வாகனம் இயக்கியது, சரோஜாவை பிரமிக்க வைத்தது. அவள் இருக்கையில் இருந்து எழும்போது, தள்ளாடாமல் இருப்பது அவளுக்கே ஆச்சரியமாக இருந்தது.''என்ன, சரோஜா ஆன்ட்டி. இன்னைக்கு உங்க டான்ஸ் எதுவும் இல்லையா?'' என்றாள், ஒரு மாணவி.எப்படியும் நான்கைந்து முறையாவது கீழே விழும் நிலைக்கு போய், சாமர்த்தியமாய் சமாளித்து எழுவதே, சரோஜாவின் வேலையாக இருக்கும். சாதுர்யமாக டிரைவர் இயக்கினால், சாதாரண பஸ்சில் ஒரு சொகுசு பயணம் போக முடியும் என்பதை நிரூபித்துக் கொண்டிருந்தான், அறிவழகன். சிகப்பு விளக்குக்கு நிறுத்தி, பச்சை விளக்கு பளிச்சிட்டதும் தான் பஸ்சை எடுத்தான், அறிவழகன். இதை அனைத்து மாணவ - மாணவியரும் கண்ணாடி ஜன்னல் வழியே பார்த்துக்கொண்டு இருந்தனர். ''அங்கிள், மஞ்சள் விளக்கு எரியும் போது என்ன செய்யணும்?'' ஆர்வமாய் கேட்டான், ஒரு மாணவன்.''தம்பி, மஞ்சள் விளக்கு எச்சரிக்கை கொடுக்குதுன்னு, அர்த்தம். வாகன வேகத்தை குறைச்சு நிற்க தயார் ஆகவும்ன்னு, 'ஆர்டர்' போடுவதாக, வாகன ஓட்டிகள் எடுத்துக்கணும்,'' என்றான்.''அறிவு அண்ணா, தப்பா நினைச்சுக்காதீங்க. பசங்க இப்படி ஏராளமான கேள்வி கேட்பாங்க,'' என, இடை புகுந்தாள், சரோஜா.''புரியுதும்மா, பசங்கன்னா இப்படி ஆயிரம் கேள்வி கேட்கணும்.''''ஆன்ட்டி, போன வாரம் இப்படித்தான் எங்க அப்பா, 'டூ-வீலர்' ஓட்டுறப்ப, 'எல்லோ லைட்'டுக்கு நிக்காம போனாரு. ஜஸ்ட் நாங்க கார்ல மோதாம தப்பிச்சோம்,'' என்றான், பீதி பார்வையை பார்த்தவாறே, ஒரு பையன்.''நீ, அப்பாக்கிட்ட சண்டைப் போட்டீயா?''''அம்மா சண்டை போட்டாங்க. அப்பா நிறைய முறை, 'சாரி' கேட்டாரு,'' என்று நடந்த நிகழ்வை கதை சொல்வது போல, அந்த மாணவன் சொன்னது, அறிவு காதுக்கும் எட்டியது.''ஓ.கே., ஸ்டூடண்ட்ஸ் நீங்க வண்டி ஓட்டுறப்ப, எப்படி ஓட்டுவீங்க?'' என்றாள், சரோஜா.''ஆன்ட்டி, மேக்ஸ்சுக்கு பார்முலா இருக்கிற மாதிரி, டிரைவிங்குக்கும் சில பார்முலா இருக்கும். அதன்படி வண்டி ஓட்டுனா, நமக்கு பிரச்னை இல்லை. அடுத்தவங்களுக்கும் பிரச்னை இல்லை,'' என்ற போது, அந்த மாணவனுக்காக மற்றவர்கள் கைத்தட்டினர். அனைத்து மாணவ - மாணவியரையும் ஏற்றிக் கொண்ட அந்த வாகனம், சரியான நேரத்தில் பள்ளி வளாகத்துக்குள் நுழைந்தது.''டிரைவர் அங்கிள், சூப்பரா வண்டி ஓட்டினீங்க. ரொம்ப தேங்க்ஸ்,'' என்றபடி, இறங்கினான், மாணவன் ஒருவன்.நெகிழ்ந்துப் போனான், அறிவழகன். டிரைவராக எத்தனையோ வருஷம், எவ்வளவோ வாகனங்களை இயக்கி இருக்கிறான். இன்றைக்கு கிடைத்த அங்கீகாரம், என்றுமே அவனுக்கு கிடைத்தது இல்லை. ராமுவின் வண்டியில் இருந்து இறங்கிய, சரோஜாவின் தோழி, ராதிகா, புடவையை சரி செய்து கொண்டே, மிகுந்த களைப்போடு வந்தாள்.''என்ன, சரோஜா, 'பிரஷ்'ஷா இருக்கே.''''புது டிரைவர் அறிவழகன் சாரோட வண்டியில போனேன், ராதிகா. மனுஷன் செமையா வண்டி ஓட்டினாரு. ஆரம்பத்துல ஏதோ ரேசுன்னு உன் வண்டி டிரைவரும், அறிவழகனும் பேசிக்கிட்டாங்க. நான் பயந்தே போயிருந்தேன். அப்படி எல்லாம் இல்லை.''''எங்க பஸ், 'ரிட்டர்ன்' ஆகி, அரை மணி நேரமாகுது. நம்ம, ராமு ஏதோ வெறி புடிச்சவன் மாதிரி ஓட்டினான், சரோஜா. கேட்டா, 'ஜெயிச்சுட்டேன்'றான்.''''சரி சத்தமா பேசாதே. ராமுவோட காதுல விழுந்துட போகுது,'' என்றபடியே இருவரும் நடந்து போயினர். பெரிதாக சிரித்தபடி, அறிவழகனிடம் ஓடி வந்தான், ராமு. ''எப்படி, நான் வந்து அரை மணி நேரம் ஆகுது. நீ இப்பத்தான் வர்றே. படுதோல்வி அடைஞ்சுட்டே. மொத மாசம் சம்பளம் வாங்கின உடனே, என்னோட பந்தய பைசாவை கொடுத்துடணும். ஆமா கறாரா சொல்லிட்டேன்,'' என்றான், ராமு.''டேய், ராமு, நீ தோத்துட்டே. நான் தான் ஜெயிச்சுட்டேன்,'' என்றான், அறிவழகன். ''எப்படிடா?'' ''டேய், சைக்கிள் ரேஸ்ல வேகமா போறதும் இருக்கு, மெதுவா போறதும் இருக்கு. நீ மெதுவா போற ரேஸ்ல, வேகமா போனா என்ன அர்த்தம். பாக்குறவங்க பைத்தியக்காரனா நினைக்க மாட்டாங்க. அதனால தான் சொன்னேன். நான் தான் ஜெயிச்சேன்.''''புரியலை. என்னடா பேச்சு மாறிப் பேசுற?'' என, சண்டை இழுப்பவன் போல கத்தினான், ராமு. சக டிரைவர்கள் திரும்பி பார்க்க, அமைதியானான், ராமு.''மாணவ - மாணவியருக்கு பாடம் கற்பிக்கிற ஆசிரியர்கள், பள்ளிக்கூடத்துல மட்டும் இருக்காங்கன்னு நினைச்சுக்காதே, ராமு. ஒரு வகையில் நாமும் ஆசிரியர்கள் தான்.''சமூகத்துல வாழுற நாம நெறிமுறை கடைப்பிடித்து நடக்குறப்ப, நம்மளை பாக்குறவங்க, அவர்களாகவே கத்துப்பாங்க. நாம எதுவும் சொல்லித்தரவும் வேணாம்,'' என, அறிவு புகட்டுபவன் போல பேசிக் கொண்டு போனான், அறிவழகன்.அவசரமாய் ஓடிவந்து, ''ராமு சார், உங்களை, 'கரஸ்பாண்டன்ட்' ஐயா கூப்பிடுறாங்க,'' என்றான், பள்ளிக்கூட பியூன். முகம் கறுத்து, பதட்டமாய் போனான், ராமு.''அறிவழகன் சார், நீங்க அருமையா பஸ் ஓட்டினதா, ஆபீஸ்ல பேசிக்கிட்டாங்க, வாழ்த்துக்கள்,'' என்ற பியூனின் பாராட்டு பத்திரம், அவனது செவியில் தேன் மழை பொழிந்தது.இள.அழகிரி


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !