உள்ளூர் செய்திகள்

புதிய அம்மா!

மதுமிதாவின் மொபைல்போன் ஒலித்த போது, இரவு, 11:00 மணி இருக்கும். கண்விழித்தவள் ஒருவித பதட்டத்துடன் போனை எடுத்து பார்த்தாள். அக்கா, சொர்ணாவிடமிருந்து அழைப்பு.இந்நேரத்தில் அக்காவா? மனம் இன்னும் பதட்டமடைந்தது. அவசரமாக, 'அட்டெண்ட்' செய்து, ''ஹலோ, என்னக்கா?'' என்றாள்.''ஸாரிடி துாங்கிட்டியா. தொந்தரவு பண்ணிட்டேனா?'' என்றாள், சொர்ணா. ''பரவாயில்லைக்கா. எழுந்திருச்சுட்டேன்,'' என, ஹாலுக்கு வந்து, சோபாவில் அமர்ந்தபடி, ''எதுவும் முக்கியமான விஷயமா?'' என்றாள், மதுமிதா.''ம். நாளைக்கு காலையில என்ன டிபன் பண்ணலாம்ன்னு யோசனை பண்ணிட்டிருந்தேன்டி. அவர் தான் சொன்னாரு, அவல் உப்புமா செய், ரொம்ப நாளாச்சுன்னு.'' ''சரி.''''திடீர்ன்னு அம்மா ஞாபகம் வந்துருச்சு. அம்மாவுக்கு, அவல் உப்புமான்னா ரொம்பப் பிடிக்கும்ல்ல!''மதுமிதாவுக்கு அக்காவின் அழைப்பும், சொல்ல வந்த விஷயமும், 'டக்'கென புரிந்தது. மனதுக்குள் லேசான எரிச்சல் உண்டானாலும், சமாளித்து அமைதியாக இருந்தாள். அக்கா தனக்கு போன் செய்ததற்கு பதிலாக, அம்மாவுக்கே பண்ணியிருக்கலாம் எனத் தோன்றியது. ''என்னடி லைன்ல இருக்கியா? பார்த்தியா உனக்கும், அம்மா ஞாபகம் வந்துடுச்சுல்ல. எனக்கு தெரியும்டி.''''ம்.''''பாவம்டி அவங்க. தனியா ஒத்தையில அவ்வளவு பெரிய வீட்டுல எப்படித் தான் இருக்காங்களோ. நினைச்சாலே வயித்தைக் கலக்குதுடி,'' என, அங்கலாய்த்தாள், சொர்ணா.''ம்...''''என்னடி எல்லாத்துக்கும் ம்... ம்... இன்னும் துாக்கம் போகலையா. உனக்கு. எந்திரிச்சுப் போய் முகத்தைக் கழுவிட்டு வா. எத்தனை உணர்ச்சிகரமா பேசிட்டிருக்கேன், அதைப் புரிஞ்சுக்காம. என்ன வீட்டுக்காரர் இன்னும் துாங்கலையா, வருணும் முழிச்சிட்டிருக்கானா?'' ''போனை நோண்டிக்கிட்டு இருந்தவங்களை இப்பத்தான் கண்டிச்சு துாங்க வெச்சேன். கண்ணை மூடி சொர்க்கத்துல நுழைய இருந்தேன். நீ போன் பண்ணி எழுப்பிட்டே. இதெல்லாம் காலையில பேசக் கூடாதாக்கா. எங்கே போயிடப் போறேன்?''''ஏய் உனக்குத் தான் என்னைப் பத்தி தெரியும்ல்ல... மனசுல ஒண்ணு தோணுச்சுன்னா, உடனே கொட்டியாகணும். இல்லைன்னா துாக்கம் வராது. அந்த மாதிரி வியாதி.'' 'அதுசரி, நீ கொட்டிட்டு நிம்மதியா துாங்கப் போயிடுவே. எனக்கு இங்கே துாக்கம் வரணும்ல்ல...' என, நினைத்துக் கொண்டாள், மதுமிதா.அக்காவிடம் நினைப்பதெல்லாம்    பேச முடியாது. அவள், 'சென்டிமென்ட்' பைத்தியம். அத்தனை, 'டிவி' சீரியல்களும் ஒன்றுவிடாமல் பார்க்கிறவள். அதில் வரும் அத்தனை குடும்பத்துடனும் தானும் ஒரு அங்கத்தினராக வாழ்கிறவள். அவளிடம் போய் கோபித்துக் கொண்டால், அவ்வளவு தான். ''ஏய் நாளைக்கு வர்றியா. அம்மாவைப் போய் ஒரு நடை பார்த்துட்டு வரலாம்.'' ''என்னது நாளைக்கா. விளையாடறியா, நீ. வருணுக்கு எக்சாம் நடந்துக்கிட்டு இருக்கு. அவரு, 'பிசினஸ் ட்ரிப்'ன்னு, அடிக்கடி காணாமப் போயிடறாரு. அதோட, வயசான அத்தையையும், மாமாவையும் கவனிச்சிக்கிறது எத்தனை சிரமமா இருக்கு தெரியுமா? அப்படியெல்லாம் என்னால நினைச்ச நேரத்துல கிளம்ப முடியாது.'' ''ப்ச். உனக்கு நம்ம அம்மா மேல பாசமே இல்லைடி. எப்பவுமே நீ இப்படித் தான். ஆனா, இந்த லுாசு அம்மாவுக்கு, நீயின்னா தான் இஷ்டம். என்ன பண்றது? எல்லாத்துக்கும் ஒரு கொடுப்பினை வேணும்,'' புசுபுசுவென்று பெருமூச்சு விட்டாள், சொர்ணா.மதுமிதாவுக்கு தலையின் மையப் புள்ளியில் வலியெடுக்க ஆரம்பித்தது. அக்காவின் மேல் வண்டி வண்டியாக கோபம் வந்தது. ஆனாலும், மனதின் ஓரத்தில் அவளை நினைத்து, பாவமாக இருந்தது. வருண் பிறக்க இருந்த நேரத்தில், பிரசவத்தில் கோளாறு ஏற்பட்டு போக, கூட இருந்து தாங்கிப் பிடித்தவள், அக்கா தான். சுகப் பிரசவம் ஆன போது, பழனியில் மொட்டை அடித்துக் கொண்டவள். சொந்த வீடு வாங்க சிரமமான நேரத்தில், போட்டிருந்த வளையலை விற்று காசு தந்தவள். ''என்னடி,'' சொர்ணாவின் குரல் கேட்டது. ''துாக்கம் வருதா, தொந்தரவு பண்றேனா, வெச்சிடவா?''''பேசு, கேட்டுட்டுத் தான் இருக்கேன். ஒரு, 10 நாள் என்னை விட்டுடுக்கா. அதுக்குப் பிறகு நான், 'ப்ளான்' பண்றேன். சேர்ந்து போகலாம்.''''அம்மாவை இந்த தடவை கண்டிப்பா, கூட கூட்டிட்டு வந்துடப் போறேன் பாரு. ஒரு மாசமாவது என் கூட அவளை தங்க வெச்சுக்கப் போறேன். 'அவர் வாழ்ந்த இந்த இடத்தை விட்டு வர முடியாது'ன்னு அம்மா மறுத்தா, என் சார்பா நீயும் பேசணும், சரியா.''அவங்களுக்கு ஒரு விடுதலை வேணும்ல்ல. அங்கே இருந்தா, செத்துப் போன அப்பா நினைப்பே அவங்களை சோர்வடைய வெச்சுடும். கவலையில அழுதுக்கிட்டே இருப்பாங்க. ஏற்கனவே அம்மா உடம்புல பலமில்லை.''''சரி, புரிஞ்சது. நானும் உனக்காகப் பேசறேன்.'' ''இங்கே ஒரு மாசம் இருந்துட்டு வேணும்ன்னா நீ கூட்டிட்டுப் போய் வெச்சுக்கோ. எத்தனை நாள் வேணும்ன்னா உன்கூட அம்மா இருக்கட்டும்.'' ''சரி, இருக்கட்டும்.'' ''என்னடி சந்தோஷமாவே சொல்ல மாட்டேன்றே. கடமைக்குப் பேசறே?''''அக்கா ப்ளீஸ்க்கா. கெஞ்சிக் கேட்டுக்கறேன். மணி, 12:00 ஆகப் போகுது. காலையில 5:30 மணிக்கு எனக்கு, 'ட்யூட்டி' ஆரம்பிச்சுடுது. சரியானபடி துாக்கமும் இல்லை. கொஞ்சம் தயவு பண்ணி விட்டுடேன்.''காலையில ரேஷன் கடைக்கு வேற போகணும். அவனோட ஸ்கூல்ல மிஸ் வரச் சொல்லியிருக்காங்க. அங்கே போய் விசாரிக்கணும். என்ன பண்ணி வெச்சிருக்கான்னு வேற தெரியலை...'' ''ஓ, எல்லா இடத்துக்கும் போவே. அம்மாவைப் பார்க்க மட்டும் வர மாட்டே அப்படித் தானே...''மதுமிதா அமைதியாக இருக்க விரும்பினாள். ''மறந்துட்டே தானே எல்லாத்தையும். அம்மா நம்மளை எத்தனை சிரமப்பட்டு வளர்த்தாங்க. என்னென்ன தியாகம் பண்ணினாங்க. அப்பா பெரிசா சம்பாதிக்கலை. ரெண்டும் பொண்ணா பொறந்திடுச்சுன்னு கவலையிலேயும், கோபத்திலேயும் இருப்பாரு.''அம்மா தான் கட்டுசெட்டா குடும்பம் நடத்தி, ஏதேதோ கைத் தொழில் செய்து, நம்ம படிப்பை கவனிச்சு, உடல்நலன் பேணிப் பாதுகாத்து, எனக்கு பிசினஸ் பண்ற மாப்பிள்ளையையும், உனக்கு என்ஜினியரிங் மாப்பிள்ளையையும் தேர்ந்தெடுத்துக் கொடுத்து, ஒரே மேடையில சிறப்பா கல்யாணம் பண்ணி வெச்சாங்க.''மதுமிதாவுக்கு நிஜமாகவே துாக்கம் வந்துவிட்டது. அடுத்த புதன்கிழமை மதியம், அம்மாவே மதுமிதாவுக்கு போன் செய்தாள். கிரைண்டரில் மாவு அரைத்துக் கொண்டிருந்தவள், உடனே அதை அணைத்துவிட்டு சந்தோசமாக, 'ஆன்' செய்தாள்.''ஹலோ அம்மா...''''என்ன, மதுமிதா, 'பிசி'யா? வேலையா இருக்கேன்னா ராத்திரி பேசறேன்.''''இல்லம்மா நீ பேசு. நேத்தே கூப்பிடனும்ன்னு நினைச்சேன். முடியலை. நல்லா இருக்கியா? சாப்பிட்டியா? 'சுகர் டெஸ்ட்' எடுத்தியா. 'கண்ட்ரோல்'ல இருக்கா?''''ம். ஒண்ணும் பிரச்னை இல்லை. இங்கே உன் ப்ரெண்டு சங்கரி வந்திருந்தா. அவளோட தம்பிக்கு கல்யாணமாம். பத்திரிகை வெச்சுட்டு உன் போன் நம்பர் கேட்டு வாங்கிட்டுப் போனா. உன் கூட பேசுவா.'' ''அப்படியா, சரிம்மா. வேளா வேளைக்கு ஒழுங்கா சாப்பிடறியா? உன்னை நினைச்சா கவலையா இருக்கு. தனியா வேற இருக்கே.'' அம்மா சிரித்தாள்...''அக்கம்பக்கம் சுத்தி அத்தனை ஆளுக இருக்காங்க. எனக்கென்னடி பயம். இத்தனை வருஷம் வாழ்ந்துக்கிட்டிருக்கிற இடம் தானே...''''என்ன இருந்தாலும் அப்பா கூட இல்லாம. சரி அடுத்த வாரம் இங்கே வர்றியா? என்கூட கொஞ்ச நாள் இருந்துட்டுப் போம்மா. ப்ளீஸ்.''''ஏன் மாப்பிள்ளை எதுவும் ஊருக்குப் போறாரா?''''அவரு போவாரு, வருவாரு. மாசத்துல பாதி நாள் எங்கே இருக்கோம்ன்னு அவருக்கே தெரியாது. நீ சொல்லும்மா. நீ இங்கே வர்றியா, நான் அங்கே வரட்டுமா?''''நான் இங்கே கொஞ்சம் வேலையா இருக்கேன், கண்ணு. சட்டுன்னு விட்டுட்டு வர முடியுமான்னு தெரியலை.'' ''வேலையா என்ன வேலை?''''காலை, ௭:00 மணிக்கு, 'பேரமைதி' அமைப்பு நடத்தற, யோகா வகுப்பு போயிட்டிருக்கேன்டா. 8:30 வரை, அங்கே தான். அப்புறம், நம்ம வீட்டுக்கு எதிர்லயே கிளை நுாலகம் மாற்றலாகி வந்துடுச்சு.''உனக்குத் தெரியும்ல, அம்மா அந்த காலத்து தமிழ் இலக்கிய பட்டதாரின்னு. கல்யாணத்துக்கு அப்புறம் படிக்கிறது சுத்தமா நின்னு போச்சு. இப்ப வாய்ப்பு இருக்கிறதுனால, லா.ச.ரா, கல்கி, புதுமைப்பித்தன், தேவன்னு பிடிச்ச எழுத்தாளர்கள் புத்தகங்களை தேடிப் பிடிச்சு படிச்சிட்டிருக்கேன். ''சாயங்காலம் நம்ம வீதிக்காரப் பெண்கள் எல்லாரும் சேர்ந்து தையல், புதுசா ஒரு மொழியைக் கத்துக்கறது, தெரியாத சின்ன சின்ன தொழில்நுட்ப விஷயங்கள்ல, 'அப்டேட்' ஆகறதுன்னு, பக்கத்து பார்க்ல வெச்சு ஒரு பயனுள்ள, 'மீட்டிங்!' புதுபுது ரெசிப்பி, உடல் நல ஆலோசனைகள்ன்னு ஒவ்வொரு, 'டாபிக்'கா போகும்.'' அம்மா சொல்ல சொல்ல பிரமித்தாள், மதுமிதா. ''இத்தனையையும் விட்டுட்டு திடீர்ன்னு கிளம்பி வான்னு சொன்னா எப்படிடா கண்ணு. அப்பா இருக்கிறவரை என்னை வீட்டை விட்டே வெளியே அனுப்பினதில்லை. வீதி தாண்டினாலே உலக அதிசயம்.''இப்பத்தான் நாலு ஜனங்களைப் பார்த்து, புதுசா விஷயங்களைக் கத்துக்கிட்டு, நான் விரும்புகிற வாழ்க்கையை வாழ்ந்துக்கிட்டிருக்கேன்டா. தெளிவா சொன்னா இது, என்னோட புதுப் பிறவி!''காலையில எழுந்திருக்கிறதிலே இருந்து, ராத்திரி படுக்கப் போகிற வரை எல்லாமே என் முடிவு. நான் நினைக்கிறதை செய்யறேன். ''சொன்னா நீ சிரிப்பே. பரவாயில்லை. நேத்து நான் ஒரு ஐஸ்க்ரீம் சாப்பிட்டேன் தெரியுமா? போன வாரம் நாங்கள்லாம் பொருட்காட்சிக்கு போயிருந்தோம். என் ரொம்ப நாள் ஆசையான ஜெயன்ட்வீல்ல ரவுண்டு போனேனே!''அடுத்த வாரம், ஜெயஸ்ரீ டெக்ஸ்டைல்ஸ் போய் பிடிச்ச கலர்ல புடவை எடுக்கப் போறேன். இதுபோல விருப்பப்பட்ட மாதிரி மனநிறைவா வாழறேன். என் மேல பரிதாபத்தை திணிச்சு, கலங்க வேணாம். புரியுதா... இது, உன் பழைய பரிதாப அம்மா கிடையாது. புதுசா மாறின, 2கே மதர்,'' என, சொல்லிவிட்டு அம்மா பெருங்குரலில் சிரிக்க, இடைவெளி விட்டு தானும் அதில் இணைந்து கொண்டாள், மதுமிதா. நித்யா


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !