உள்ளூர் செய்திகள்

திண்ணை!

டிச., 1, 2005ல், வேலுாரில் பள்ளி, கல்லுாரி மாணவர்களிடம் உரையாடினார், முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம். அப்போது, 'தீவிரவாதத்தை எப்படி ஒழிப்பது?' என்று கேட்டார், மாணவர் ஒருவர்.'நம் நாட்டில், 20 கோடி இளைஞர்கள் உள்ளனர். இவர்களின் பெற்றோர் நல்ல விஷயங்களை கற்றுக் கொடுத்தால், அது வீட்டிற்கும், சமுதாயத்திற்கும் பெரிதும் உதவும், தீவிரவாதமும் அழியும்...' என்றார், கலாம். மேலும், மற்றொரு நிகழ்வில், 'ஊழல் வீட்டிலிருந்து தான் ஆரம்பிக்கிறது. நம் நாட்டில் சுமார், 20 கோடி வீடுகளில், எட்டு கோடி வீடுகள் லஞ்சத்தில் ஈடுபட்டிருக்கும் என்று வைத்துக் கொண்டால், அதை ஒழிக்க இளைஞர்களால் மட்டுமே முடியும். 'ஊழல் மூலம் கிடைக்கும் பணத்தில் எங்களுக்கு எந்தவித வசதியும் வேண்டாம் என்று குழந்தைகளும், இளைஞர்களும் முடிவெடுத்தால் பெற்றோர்களை மாற்ற முடியும்...' என்றார். நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பிறகு, அங்குள்ள ஒரு கடையில் தனக்குத் தேவையான, பொருள் ஒன்று இருப்பதைக் கண்டு வாங்கினார், கலாம். கடைக்காரர் பணம் வாங்க மறுத்தும், அதற்கான தொகைக்கு, ஒரு காசோலை எழுதி கடைக்காரரிடம் கொடுத்துவிட்டார். மக்களின் தலைவராக விளங்குபவர், தன் கடையிலுள்ள பொருளை வாங்கிய மகிழ்ச்சியில், 'இந்த காசோலையை மாற்றாமல், என் பொக்கிஷம் போல் வைத்துக் கொள்வேன்...' என்று கலாமின் உதவியாளரிடம் கூறினார், அந்த கடைக்காரர்.வீட்டிற்கு சென்றதும், கலாமிடம் இதை கூறினார், உதவியாளர். 'கடைக்காரர் நான் கொடுத்த காசோலையை வங்கியில் கொடுத்து பணம் பெறும் வரை, அவரிடம் வாங்கிய பொருளைப் பயன்படுத்தப் போவதில்லை...' என்று கூறியுள்ளார். இந்த விபரத்தை உதவியாளர் கூற, அப்துல்கலாமின் விருப்பப்படி நடந்து கொண்டார், அந்த கடைக்காரர். ****தான்சானியா நாட்டுக்கு, செப்., 2004ல், நான்கு நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டார், அப்துல் கலாம். வழக்கம்போல மாணவர்களை கேள்வி கேட்க சொன்னார். 'இந்தியா தொழில்நுட்ப வளர்ச்சி அடைந்துள்ளது. ஆனாலும், மூன்றாம் நிலை நாடு என்கின்றனரே, ஏன்?' என்று கேட்டான், ஒரு மாணவன். 'அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சி மட்டுமே வளர்ச்சி என்பது இல்லை. ஏழ்மை ஒழிப்பு, உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி இவற்றின் அடிப்படையால் தான் முதல் நிலை எய்த முடியும்...' என்று அந்த மாணவனுக்கு பதிலளித்தார், கலாம். 'நீங்கள் பெரிய விஞ்ஞானி. கடவுள் இருப்பதை நம்புகிறீர்களா?' என்றான், இன்னொரு மாணவன். இந்த கேள்வி பலரை அதிர்ச்சிக்கும், வியப்புக்கும் ஆளாக்கியது. இதன் தொடர்பாக சில கேள்விகளை மாணவர்களை நோக்கி கேட்டார், கலாம். 'பூமி தன்னைத்தானே சுற்றுகிறது. அதற்கு ஆகும் நேரம் எவ்வளவு?' என்றார், கலாம். '24 மணி நேரம்...' என பதிலளித்தனர், மாணவர்கள். 'சூரியனை, பூமி சுற்றிவர எவ்வளவு நாள் ஆகக்கூடும்?' '365 நாட்கள். அதை 24 மணியால் பெருக்கிக் கொள்ளலாம்...''இதை நீங்கள் மீண்டும் நன்றாக யோசித்துப் பாருங்கள்...' என்றவரே, தொடர்ந்து, 'சூரியன் நாம் இருக்கும் பால்வீதியைச் சுற்றிவர எவ்வளவு காலம் ஆகும்?' என்றார். யாருக்கும் தெரியவில்லை. நிசப்தம். மாணவர்களின் மவுனம் தான் பதில். உடனே, '21.5 கோடி ஆண்டுகள் ஆகும்...' என்று, கலாமே பதில் கூறினார். பின், 'ஒரு பால்வீதியைச் சுற்றி வரவே இவ்வளவு காலம் ஆகிறது. இதுபோல் கோடிக்கணக்கான பால்வீதிகள் கொண்டது, அண்டம். இவை அனைத்தும் அண்டத்தில் ஒரு குறிப்பிட்ட இலக்கில், துாரத்தில், கால அளவில் மிகத் துல்லியமாக இயங்குகின்றன.'இதை உருவாக்கியது யார். இவ்வளவு துல்லியமாக இயக்கத்தை நிர்ணயித்தது யார்? அளவற்ற ஒரு சக்தி. அதனால், அப்படி ஒரு சக்தி இருந்தால் தான் இயக்கம் சரிவர நடக்க முடியும். அது, கடவுளாகத்தான் இருக்க முடியும். நான் கடவுள் இருக்கிறார் என்பதை முழுமையாக நம்புகிறேன்...' என்றார். இதைக்கேட்டு கூட்டத்தில் எழுந்த கரவொலி அடங்க, பல மணி நேரம் ஆனது. - நடுத்தெரு நாராயணன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !