திண்ணை!
கடந்த, 1977ல் நடந்த சட்டசபை தேர்தல் பிரசாரத்தில், எல்லா கட்சிகளுடன், அப்போது துவங்கப்பட்ட புது கட்சியான, அ.தி.மு.க.,வும் பங்கேற்று, அனைத்து தொகுதிகளிலும் போட்டியிட்டது. அனைத்து தொகுதிகளுக்கும் சென்று பிரசாரம் செய்தார், எம்.ஜி.ஆர்., எதிர்க்கட்சியினர் அவரை எதிர்த்து பிரசாரத்தில் ஈடுபட்டனர். 'எம்.ஜி.ஆருக்கு பொருளாதாரம் தெரியுமா? பொருளாதாரம் தெரியாதவர்கள் எப்படி ஆட்சி நடத்த முடியும். நடிகரால் நாடு ஆள முடியுமா? வேஷம் போட்டு நடிக்கலாம்; ஆனால், அரசியலில் வேஷம் போட முடியாது. அது கனவான விஷயம். இது நனவான விஷயம்...' என, பிரசாரம் செய்தனர், எதிர்க்கட்சியினர்.இதற்கு, 'எனக்கு பொருளாதாரம் தெரியுமா என்று பலர் கேட்கின்றனர். அவர்கள் கேட்பதை தவறு என, சொல்ல மாட்டேன். அவர்களெல்லாம் என்னை விட, அதிகம் படித்தவர்கள். அவர்களுக்கு பொருளாதாரம் தெரிந்திருக்கும். இப்படி பேசியவர்கள் சில மத்திய - மாநில அமைச்சர்கள்.'மக்கள் மத்தியில் அவர்கள், என்னை பற்றி பரப்பிய கருத்துகளுக்கு நான் பதில் சொல்ல கடமைப்பட்டுள்ளேன்.'ஒரு மனிதன் கடுமையாக உழைக்க வேண்டும். அந்த உழைப்பின் மூலம் கிடைக்கும் வருமானத்தில் இருந்து திருப்தியாக சாப்பிட்டு, கொஞ்சம் சேமிக்க வேண்டும். ஒருவர் இதை கடைப்பிடித்தால், அவரால் மகிழ்ச்சியாக வாழ முடியும்.'அவர் சேமிப்புத் தொகை, நாளுக்கு நாள் கூடி வரும். அந்த சேமிப்பை, அவருக்கு நலம் சேர்க்கும் வகையில் முதலீடு செய்ய வேண்டும். அப்படி செய்யும் போது, அந்த முதலீடு வளரும். அப்போது, அவருடைய பொருளாதார நிலை உயரும்; பலம் அடையும். குடும்பத்தில் உள்ள அனைவரும் அவரைப் போல் செயல்பட்டால், குடும்பம் மகிழ்ச்சியாக இருக்கும். 'இப்படி பல குடும்பங்கள் செயல்பட்டால், ஊர் மகிழ்ச்சியாக இருக்கும். பல ஊர்கள் மகிழ்ச்சி அடைந்தால், மாவட்டம் மகிழும். இந்த வளர்ச்சி மாநில அளவிலும், இந்திய துணைக்கண்ட அளவிலும் விரியும்.'இதுதான், எனக்கு தெரிந்த பொருளாதாரம். இந்த பொருளாதாரக் கொள்கை தான், ஒரு நாட்டுக்கு பொருந்தும்...' என, எதிர்க்கட்சியினர் கேள்விக்கு பதில் கூறினார், எம்.ஜி.ஆர்., ****எம்.ஜி.ஆர்., நடித்து பிரபலமானதில் இருந்து, தன் வீட்டுக்கு வருவோர் அனைவருக்கும் சாப்பாடு போட்டார். தினசரி சமையலுக்கு, அப்போதே, ஆயிரக்கணக்கில் செலவு செய்தார், எம்.ஜி.ஆர்., அவர் முதல்வரான பின், முன்பு போல் வீட்டில் அதிகமானவர்களுக்கு சாப்பாடு போட முடியவில்லை. அதற்கு அவர் கூறிய காரணம்:நான் திரைப்படத் துறையில் இருந்தபோது, அதிக வருமானம் வந்தது; அதில், ஒரு பகுதியை தினசரி பலரின் சாப்பாட்டு செலவுக்காக ஒதுக்கினேன்.இப்போது, திரைத்துறை வருமானம் நின்று விட்டது. முதல்வராக இருக்கிறேன்; முதல்வருக்கான சம்பளம், எனக்கு திரைத்துறையில் இருந்து கிடைத்ததை விட குறைவு. இப்போது, என் வருமானம் குறைந்து விட்டதால், முன்பு போல், தினசரி ஆயிரக்கணக்கில் செலவு செய்து, உணவு கொடுக்க முடியவில்லை.இப்போதும், முன்பு போல் உணவு கொடுக்கலாம்; அதற்காக, நான், என் பதவியை துஷ்பிரயோகம் செய்து, பணம் சம்பாதித்து, அதிலிருந்து செலவு செய்து சாப்பாடு போடலாம்.ஆனால், ஒரு நல்ல காரியம் செய்யும் போது, தவறான வழியில் பணம் ஈட்டி அதைச் செய்யக் கூடாது. இதுநாள் வரை என்னை நம்பி இருந்தவர்கள், சுய முயற்சியால் சிறப்பாக வாழ வேண்டும்.- இவ்வாறு கூறினார், எம்.ஜி.ஆர்., - நடுத்தெரு நாராயணன்