திண்ணை!
தன் கண்டுபிடிப்புகளை எல்லாம் அவ்வப்போது காகிதங்களில் எழுதி பதிவு செய்து வந்தார், ஐசக் நியூட்டன். செல்லப் பிராணிகளின் மீது அதிக அன்புடையவர். தன் வீட்டில், பூனை, நாய் போன்றவைகளை வளர்த்து வந்தார். ஒரு நாள் தன் முக்கிய ஆராய்ச்சிக் குறிப்புகளை எல்லாம் மேஜை மீது வைத்து விட்டு, வெளியே சென்றார். அவர் வளர்த்து வந்த நாய் ஒன்று, மேஜை மீது ஏறி விளையாடிய போது, அங்கு எரிந்து கொண்டிருந்த மெழுகுவர்த்தியை தட்டிவிட்டது. ஆராய்ச்சிக் குறிப்புகளெல்லாம் எரிந்து நாசமானது. நியூட்டன் அறைக்கு திரும்பியதும், அவருடைய நாய் ஆசையாக வாலாட்டிக் கொண்டே அவரை நோக்கி ஓடி வந்தது. தன் ஆராய்ச்சிக் குறிப்புகள் எரிந்து சாம்பலானதைக் கண்டும், நாயின் மீது கோபப்படாமல் அதைத் தடவிக் கொடுத்தார், நியூட்டன்.வெளியே சென்றபோது மெழுகுவர்த்தியை அணைத்துச் சென்றிருக்கலாம் அல்லது ஆராய்ச்சிக் குறிப்புகளை பத்திரப்படுத்தி வைத்து சென்றிருக்கலாம். இரண்டையும் செய்யாதது தன்னுடைய தவறுதானே தவிர, நாயின் தவறு ஏதுமில்லை என்று அவர் நினைத்ததே அதன் மீது கோபப்படாததற்கு காரணம். ****தமிழக முன்னாள் முதல்வர் அண்ணாதுரையின் கட்சியை சேர்ந்த ஒருவர், நான்கு பக்கங்கள் கொண்ட நாளிதழ் ஒன்றை நடத்திக் கொண்டிருந்தார். கட்சியிலிருந்து பிரிந்து சென்ற ஒரு அரசியல் பிரமுகருக்காக, நான்கு பக்கங்களில் ஒரு பக்கத்தை ஒதுக்கி, செய்திகளை வெளியிட ஆரம்பித்தார். இதைக் கண்டு ஆத்திரம் அடைந்த நண்பர்கள் சிலர், அண்ணாதுரையிடம் கூறி, அவர் மீது நடவடிக்கை எடுக்கும்படி வற்புறுத்தினர். நண்பர்கள் சொன்னதை உடனே செயல்படுத்தவில்லை, அண்ணாதுரை. ஒருநாள் தன் கட்சி பிரமுகர்களிடம், 'நடவடிக்கை எடுப்பதில் ஒரு சிக்கலும் இல்லை. ஆனால், ஒரு விஷயத்தை நீங்கள் யோசிக்கத் தவறிவிட்டீர்கள். நண்பர் நடத்தும் பத்திரிகையில் இப்போது நம் கட்சி செய்திகள், மூன்று பக்கம் வந்து கொண்டிருக்கிறது. நாம் அவர் மீது நடவடிக்கை எடுத்தால் நாளிதழின், நான்கு பக்கங்களிலும் நம்மிடமிருந்து பிரிந்து சென்றவரைப் பற்றிய செய்திகள் வர துவங்கிவிடும். பரவாயில்லை என்றால் சொல்லுங்கள். உடனே நடவடிக்கை எடுத்து விடலாம்...' என்றார், அண்ணாதுரை. அவரின் பேச்சில் இருந்த யதார்த்தத்தைப் புரிந்து கொண்ட கட்சி நண்பர்கள், அதைப் பற்றி பேசுவதை விட்டுவிட்டனர். ****கடந்த, 1890 காலகட்டத்திலேயே தமிழ் மொழியில் ஒரு கலைக்களஞ்சியம் உருவாக்கப்பட்டது. இதை மிகவும் சிரமப்பட்டு எழுதியவர், சிங்காரவேலு முதலியார். இப்புத்தகத்தை சிரமப்பட்டு எழுதி முடித்தாரே தவிர, அதை எவரும் வெளியிடத் தயாராக இல்லை. அக்காலத்தில் கதைகளுக்கே வரவேற்பு இருந்தது. மனம் வெறுத்து, இப்புத்தகத்தை அப்படியே வைத்துவிட்டார், சிங்காரவேலு முதலியார். ஒரு நாள் அவர் மனதில், ஓர் எண்ணம் தோன்றியது. தான் கலைக்களஞ்சியத்தை எழுதி முடித்திருப்பதாகவும், அதை நுாலாக வெளியிட விரும்புவதாகவும் பத்திரிகை ஒன்றில் விளம்பரம் செய்தார். அப்போது, இவ்விளம்பரத்தைக் கண்ட, மதுரை பாண்டித்துரை தேவர், மதுரை தமிழ் சங்கத்தின் மூலம் அந்த நுாலை வெளியிட ஏற்பாடு செய்தார். வெற்றி கிடைக்கவில்லையே என்று மனம் வாடக் கூடாது. தகுதியுள்ளது தப்பிப் பிழைக்கும் என்பர். அது போல தகுதியும், திறமையும் என்றாவது ஒருநாள் வெளியே வந்து சிறப்பு பெற்றே தீரும்.****- நடுத்தெரு நாராயணன்