உள்ளூர் செய்திகள்

திண்ணை!

மின்சார பல்பை கண்டுபிடித்தவர், தாமஸ் ஆல்வா எடிசன் என்பது நம் அனைவருக்கும் தெரியும். ஆனால், அதற்காக அவர் எவ்வளவு உழைத்தார் என்பது ஒரு சிலருக்கு மட்டுமே தெரியும்.பல்பு எரிய முக்கியமான ஒரு பொருள், டங்ஸ்டன். பல்பில், டங்ஸ்டனை பயன்படுத்தினால் வெற்றி பெற முடியும் என்பதை அவர் சுமார் ஆயிரம் முயற்சிகளுக்கு பின்னரே கண்டுபிடித்தார். அதற்கு முன், மூங்கில் இழை, சிறு கம்பி முதலிய பல பொருட்களை இணைத்துப் பார்த்தார். ஆனால், அவை அனைத்தும் தோல்வியிலேயே முடிந்தன. ஆயிரம் தோல்விகளுக்குப் பின்னரே, டங்ஸ்டன் இழையை பல்பிற்குள் வைத்து சோதித்து வெற்றி கண்டார்.இதுபற்றி, 'ஆயிரம் முறை தோல்வியை சந்தித்தீர்களே, உங்களுக்கு கஷ்டமாக இல்லையா?' என்று கேட்டார், எடிசனின் நண்பர் ஒருவர்.'நிச்சயமாக இல்லை. ஒவ்வொரு முறையும் ஒரு சோதனையை எவ்வாறு செய்யக் கூடாது என்பதை தெரிந்து கொண்டேன். இறுதியில் வெற்றியும் பெற்றேன்...' என்றார், எடிசன். ஒவ்வொரு முறையும் தங்களுடைய தோல்விகளை எப்படி எடுத்துக் கொள்கின்றனர் என்பதையே இது காட்டுகிறது. தோல்விகளை தோல்விகளாக கருதாத காரணம் தான், சிலர் மட்டும் வாழ்க்கையில் வெற்றியை சந்திக்கின்றனர். கோரிகேன் என்ற இடத்தில் பணியில் இருந்த தன் தந்தையை காண, அம்பேத்கரும், அவருடைய சகோதரரும் ரயிலில் பயணித்தனர். ரயில் நிலையத்தில் இறங்கி, மாட்டு வண்டியில், வீட்டிற்கு சென்றனர். வழியில் இருவரிடமும் பேசிக்கொண்டே வந்த அந்த மாட்டு வண்டிக்காரன், இருவருடைய ஜாதியைப் பற்றி விசாரித்தான். இருவரும் மறைக்காமல் தங்கள் தாழ்த்தப்பட்ட ஜாதியை சேர்ந்தவர்கள் என்ற உண்மையை கூறினர். தாழ்த்தப்பட்ட ஜாதியை சேர்ந்தவர்கள் தன்னுடைய வண்டியில் பயணிப்பதை அறிந்து பெரும் அதிர்ச்சி அடைந்தான், வண்டிக்காரன். உடனே, மாட்டு வண்டியை நிறுத்தி இருவரையும் கீழே இறக்கிவிட்டான்.இந்த நிகழ்ச்சி அம்பேத்கரின் மனதில் ஆழமான ஒரு வடுவை உருவாக்கிவிட்டது. தாழ்த்தப்பட்ட சமுதாயத்தின் உயர்விற்காக தன்னை அர்ப்பணித்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் அவர் மனதில் தோன்றி, அவரை மாபெரும் தலைவராக உருவாக்கியது. அவமானங்களை கண்டு, சோர்ந்து போகாமல், அதை ஒரு துாண்டுகோலாக மனதில் பதித்துப் போராட வேண்டும். உண்மையான போராட்டம், என்றும் தோற்றதாய் சரித்திரமில்லை. - நடுத்தெரு நாராயணன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !