திண்ணை!
ஒருசமயம், அண்ணாதுரையும், தமிழறிஞர் கி.ஆ.பெ.விசுவநாதனும் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது, ஒருவர் வந்து, '9ம் தேதி கூட்டம். தாங்கள் வந்துவிட வேண்டும்...' என்று கி.ஆ.பெ.,விடம் கூறினார். 'வருகிறேன்...' என்றார், கி.ஆ.பெ.,அண்ணாதுரையையும் அழைத்தார், அந்த அன்பர்; அவரும் சம்மதிக்க, மகிழ்ச்சியோடு சென்றார். அதன் பின், அண்ணாதுரையிடம், '9ம் தேதி, வேறு வேலை இருப்பதாக என்னிடம் கூறினீர்களே... பின் எப்படி அந்தக் கூட்டத்துக்கு உங்களால் போக முடியும்?' என கேட்டார், கி.ஆ.பெ., 'நான் கூட்டத்துக்கு போகப் போவதில்லை. அவரிடம் சும்மா சொன்னேன்...' என்றார், அண்ணாதுரை. 'அதை அவரிடமே சொல்லி இருக்கலாமே...' என்றார், கி.ஆ.பெ., 'சொல்லியிருந்தால், அவர் நம்மை விட்டு போயிருக்க மாட்டார். நாமும், இப்படி பேசிக் கொண்டிருக்க முடியாது...' என்றார், அண்ணாதுரை. 'அதற்காக ஏன் பொய் சொல்ல வேண்டும்?' என்றார், கி.ஆ.பெ., 'உண்மையை ஒப்புக் கொள்கிற குணம் உண்டாகும் வகையில் பொய் சொல்வதில் தவறொன்றுமில்லை...' என்றார், அண்ணாதுரை. அதைக் கேட்டு திகைத்து போனார், கி.ஆ.பெ.,********ஒரு சமயம், காந்திஜியை சந்தித்து, 'பாபுஜி, நான், என் வழக்கறிஞர் தொழிலை விட்டுவிட்டு முழுநேரமும் தேச சேவையில் ஈடுபடப் போகிறேன்...' என்றார், சி.சுப்ரமணியம். 'இந்த வயதில் ஏன் இப்படி ஒரு முடிவு? வக்கீல் தொழிலையும் பார்த்து, மற்ற நேரத்தில் தேச சேவையில் ஈடுபடலாமே...' என்றார், காந்திஜி.உடனே, 'நான் தங்களிடம் அனுமதி கேட்டு வரவில்லை. ஆசீர்வாதம் வாங்கவே வந்தேன்...' என்றார், சி.சுப்ரமணியம்.அதைகேட்ட காந்திஜி, சி.சுப்ரமணியத்தை ஆசீர்வதித்து அனுப்பினார்.***********நாடக ஆசிரியர், பெர்னாட்ஷா, சுத்த சைவம். தான் யாரை சந்தித்தாலும் அவர்களை சைவ உணவுகளையே மேற்கொள்ளும்படி கூறும் வழக்கம் கொண்டவர். ஒருசமயம், பெர்னாட்ஷாவிடம், 'நீங்கள் ஏன் அசைவ உணவுகளை வெறுக்கிறீர்கள்?' எனக் கேட்டார், நண்பர் ஒருவர். அதற்கு, 'என் வயிறு இறந்த மிருகங்களின் சுடுகாடு அல்ல...' என்று பதிலளித்தார், பெர்னாட்ஷா.அந்த பதில், அசைவ நண்பருக்கு அறைந்தது போன்ற உணர்வைக் கொடுத்தது.*********ஒருசமயம், திறந்தவெளி பொதுக்கூட்டம் ஒன்றில், ஜவஹர்லால் நேரு பேசிக் கொண்டிருந்த போது, திடீரென மழை பெய்தது. ஆனால், கூட்டத்தினர் கலையாமல், நேருவின் பேச்சை ஆர்வத்துடன் கேட்டுக் கொண்டிருந்தனர். அப்போது, ஒருவர் ஓடி வந்து, நேருவின் தலைக்கு மேல் குடையை பிடித்தார். உடனே, 'மக்கள் நனைந்து கொண்டிருக்கும் போது, எனக்கு மட்டும் குடை எதற்கு? வேண்டாம்...' என்றார், நேரு. ஆனால், அந்த நபர் தொடர்ந்து குடை பிடித்தபடி இருந்தார். அப்போது, 'இவர் எனக்கு தொடர்ந்து குடை பிடிப்பதைப் பார்த்தால், 'மைக்'கின் சொந்தக்காரராக இவர் இருப்பார் என, நினைக்கிறேன். இவர் எனக்கு குடை பிடிக்கவில்லை. இந்த, 'மைக்' நனைந்து விடாமல் இருக்கவே குடை பிடிக்கிறார்...' என்றார், நேரு. அதை கேட்டு குடை பிடித்தவர் உட்பட, கூட்டத்திலிருந்த அனைவரும் சிரித்து விட்டனர். - நடுத்தெரு நாராயணன்