திண்ணை!
இந்திய விடுதலை போராட்டம், தீவிரமாக நடந்து கொண்டிருந்த காலம். புதுச்சேரியில் ஆங்கிலேயருக்கு தெரியாமல், மறைமுகமாக, விடுதலை புரட்சி வீரர்களுக்கு துப்பாக்கி சுடக் கற்றுக் கொடுத்து கொண்டிருந்தார், வ.வே.சு., ஐயர். துப்பாக்கி சுடப் பயிற்சி பெற்று வந்தவர்களில், சுப்ரமணிய பாரதியும் ஒருவர். அவர், இலக்கை குறிபார்த்து சுட, மிக விரைவிலேயே கற்றுக் கொண்டார். அதை பார்த்து ஆச்சரியப்பட்டு, 'குறி தவறாமல் சுட எப்படி இவ்வளவு விரைவில் கற்றுக் கொண்டீர்கள்? நானும் தொடர்ந்து முயற்சிக்கிறேன். ஆனால், என் குறி தவறி விடுகிறதே...' என, வருத்தத்துடன் கூறினார், விடுதலை புரட்சி வீரர் ஒருவர். புன்னகைத்தபடியே, 'அது மிக எளிது. நீ குறிபார்க்கும் பொருளை, ஒரு ஆங்கிலேயனாக நினைத்துக் கொள். அந்த வெறிபிடித்தவனின் தலையையோ, மார்பையோ குறி வைத்துச் சுடுவது போல், சுடு; குறி தவறாது. நான் இப்படி நினைத்து தான் குறி தவறாமல் சுடக் கற்றுக் கொண்டேன்...' என்றார், பாரதி.*******ஒரு கூட்டத்தில், சொற்பொழிவு நிகழ்த்தி கொண்டிருந்தார், கிருபானந்த வாரியார். அப்போது, சிலர் எழுந்து வெளியே சென்று கொண்டிருந்தனர். அதைக்கண்டு, 'சொல்லின் செல்வர் என, ராமாயண அனுமனை குறிப்பிடுவர். இங்கும் அதே போல் சொல்லின் செல்வர்கள் இருப்பதை பார்க்கிறேன். அதாவது, நல்ல நல்ல விஷயங்களை நான் சொல்லின், அவற்றை கேட்காமல் செல்பவரை தான் சொல்கிறேன்...' என்றார். அவரது சிலேடை நயத்தை கேட்டு கூட்டத்தினர் சிரிக்க, சொற்பொழிவு முடியும் வரை இடையிடையே யாரும் எழுந்து வெளியில் செல்லவில்லை.******சோழ சாம்ராஜ்ஜியத்தின் அவைப் புலவர், ஒட்டக்கூத்தர். 'குலோத்துங்க சோழன் பிள்ளைத்தமிழ், மூவருலா, நாலாயிரக்கோவை' ஆகிய, சிற்றிலக்கியங்களை இயற்றி, புகழ் பெற்றவர். பாண்டிய மன்னர்களின் அவைப்புலவர், புகழேந்தி. சிறு காப்பியங்களில் ஒன்றான, 'நளவெண்பா'வை இயற்றி புகழ் பெற்றவர். ஒருசமயம், ஒட்டக்கூத்தரும், புகழேந்தி புலவரும் சந்தித்துக் கொண்டனர். புகழேந்தி புலவரிடம், 'எங்கள் சோழ மன்னர், முதுகுக்கு கவசம் அணிவது இல்லை. அதற்கு காரணம், போரில் புறமுதுகு காட்டி ஓட மாட்டார்கள், எங்கள் சோழ மன்னர்கள். உங்கள் பாண்டிய மன்னர்கள் உறுதியான முதுகு கவசம் அணிகின்றனர்...' என்றார், கிண்டலாக ஒட்டக்கூத்தர்.'ஒட்டக்கூத்தரே, உங்கள் சோழ சாம்ராஜ்ஜியத்து மன்னர்கள், முதுகு கவசம் அணியாததற்கு காரணம், நீங்கள் சொன்னதல்ல. புறமுதுகிட்டு ஓடும் கோழைகள் மீது, எங்கள் பாண்டிய மன்னர்கள் வேல் எறிவதில்லை என்ற நம்பிக்கை தான் அதற்கு காரணம்...' என்றார், புகழேந்தி புலவர். அதைக்கேட்டு தலை கவிழ்ந்தார், ஒட்டக்கூத்தர். - நடுத்தெரு நாராயணன்