உள்ளூர் செய்திகள்

திண்ணை!

கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம், 'நண்டு செய்த தொண்டு!' என்ற தலைப்பில், கவிதை எழுதி, 'ஜனசக்தி' பத்திரிகையில் வெளியிடுவதற்காக, அதன் ஆசிரியர், கே.முத்தையாவை சந்தித்தார்.கவிதை, ஆசிரியருக்கு மிகவும் பிடித்துப் போனது. ஆனால், கவிதைக்கு கீழே எழுதப்பட்டிருந்த அவரது பெயர் தான், ஆசிரியருக்கு சற்று பிடிக்காமல் இருந்தது. உடனே, 'கல்யாணசுந்தரம் என்ற பெயரே நீளமாக இருக்கிறது. அதோடு, பெயருக்கு முன், பட்டுக்கோட்டை என்ற அடைமொழியையும் சேர்த்திருக்கிறீர்கள். கம்பன், வள்ளுவன், இளங்கோ என, கவிஞர்களின் பெயர்கள் சுருக்கமாக இருப்பது போல், உங்கள் பெயரையும் சுருக்கிக் கொள்ளலாமே?' என்றார், முத்தையா.'ஐயா, அவர்கள் எல்லாரும் பெரிய கவிஞர்கள். அதனால் தான், அவர்கள் சின்ன பெயர்களாக வைத்துக் கொண்டனர். நான் சிறு கவிஞன் தான். அதனால், பெயராவது பெரியதாக இருக்கட்டுமே...' என்றார், கல்யாண சுந்தரம்.  தேசபந்து என அழைக்கப்பட்டவர், சித்தரஞ்சன் தாஸ். சி.ஆர்.தாஸ் என்றும் சுருக்கமாக அழைக்கப்பட்டார். கோல்கட்டாவில் பிறந்தவர். சிறு வயதிலேயே தந்தையை இழந்தவர். பின், கஷ்டப்பட்டு படித்து, பாரிஸ்டர் ஆனார். வக்கீல் தொழில் செய்து நிறைய சம்பாதித்தார்.ஒருநாள், தன் தந்தை, புபன் மோகன் தாஸின் பழைய பெட்டியை திறந்து பார்த்தார். அதிலிருந்த கணக்குப் புத்தகத்தை எடுத்து பார்த்தவருக்கு ஒரே அதிர்ச்சி.அவர் தந்தை உயிருடன் இருந்த போது, நிறைய பேரிடம் கடன் வாங்கியிருந்த விபரம், அதில் குறிக்கப்பட்டிருந்தது. உடனே, தன் தாய் நஸ்தாரிணியிடம், 'அப்பா, பலரிடம் கடன் வாங்கியிருந்ததாக இதில் எழுதியுள்ளார். உண்மையா?' எனக் கேட்டார், தாஸ்.'ஆம், மகனே. ஆனால், கடன் கொடுத்தவர்கள் நம் ஏழ்மை நிலையை பார்த்து கடன்களை ரத்து செய்து விட்டனர்...' என்றார்.உடனே, செய்தி தாளில் விளம்பரம் கொடுத்து, கடன் கொடுத்தவர்களை வீட்டுக்கு வரவழைத்து கடனை வட்டியோடு கொடுத்தார், சி.ஆர்.தாஸ்.***********தமிழறிஞர் கி.ஆ.பெ.விசுவநாதரிடம், 'இவ்வுலகில் யோசிக்காமல் எடுக்க வேண்டிய முடிவு ஏதேனும் இருக்கிறதா?' எனக் கேட்டார், ஒருவர்.'இருக்கிறது. இவ்வுலகில், மூன்று செயல்களை யோசிக்காமல் முடிவெடுக்கலாம். ஒன்று: வாங்கிக் கொள்ளலாமா, வேண்டாமா என, எண்ணும் நிலை வந்தால், அதை வாங்க வேண்டாம். இரண்டு: கொடுத்து விடலாமா, வேண்டாமா என, எண்ணும் நிலை வரும்போது, உடனே கொடுத்து விட வேண்டும். மூன்று: உண்ணலாமா, வேண்டாமா என, எண்ணும் நிலை வரும் போது, உண்ண வேண்டாம்...' என்றார். அவரது அபார அறிவை எண்ணி வியந்தார், கேள்வி கேட்ட அன்பர். - நடுத்தெரு நாராயணன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !