உண்மைக்கு அழிவில்லை!
சரஸ்வதி நதிக்கரையிலிருந்த ஒரு நாட்டின் அரசன், பிரபஞ்சன்.ஒருநாள், காட்டுக்கு வேட்டையாட சென்றவன், பெண் மான், தன் குட்டிக்கு பால் கொடுத்துக் கொண்டிருந்ததை அறியாமல், அதன் மீது அம்பை எய்தான்.மரண தருவாயில், 'அம்பு வீசிய அரசர், புலியாக மாறக் கடவது...' என, சாபம் கொடுத்தது, பெண் மான்.புலியாக மாறிய அரசன், தன்னை மன்னிக்குமாறு வேண்ட, 'நீ 100 ஆண்டு புலியாக இருந்து, சாபத்தை அனுபவிக்க வேண்டும். அதற்கு பின், நந்தா என்ற பசு மூலமாக உனக்கு சாப விமோசனம் ஏற்படும்...' என்று சொல்லி, உயிரை விட்டது, மான்.நுாறு ஆண்டுக்கு பின், ஒருநாள், அந்த காட்டுக்குள் பசு மாடுகள் மேய்ந்து, ஊருக்கு திரும்பின. அதில், ஒரே ஒரு பசு மாடு மட்டும் பின் தங்கி மெதுவாக நடந்தது. அச்சமயம், தன் குட்டிகளுக்கு இரை தேடி அந்த பக்கமாக வந்த புலி, பசு மாட்டை பார்த்து, அதன் மீது பாய தயாரானது.கோகுலத்தில் தனக்காக காத்திருக்கும் கன்றுக்குட்டியை நினைத்து கலங்கிய பசு, 'ஐயா, கோகுலத்துல கன்றுக்குட்டி, ரொம்ப பசியோட எனக்காக காத்துக்கிட்டிருக்கும். 'நான் போய் பால் குடுத்துட்டு, கன்றுக்குட்டியை மத்த பசுக்கள்கிட்ட ஒப்படைச்சுட்டு, வர்றேன். நீங்க, அதுக்கு அனுமதி கொடுங்கள்...' என்றது.மனது இளகி, 'உன்னை நம்புறேன். நீ போயிட்டு வா. வாக்கு கொடுத்தபடி இங்கே வந்து சேரணும்...' என்றது, புலி. வேகமாக ஊருக்குள் ஓடிய, பசு, கன்றுக்குட்டிக்கு பால் கொடுத்து, நடந்ததை சொல்லியது. 'அப்படின்னா, நானும் உன் கூட வந்து, அந்தப் புலிக்கு இரையாயிடறேன்...' என்றது, குட்டி.'அப்படியெல்லாம் செய்யக் கூடாது...' என்று சொல்லி, மற்ற பசுக்கள் தடுத்தும் கேட்காமல், கன்றுக் குட்டியை ஒப்படைத்து, காட்டுக்கு சென்றது, பசு. ஆனால், இதற்கு முன்பே, கன்றுக்குட்டி அங்கே நின்று கொண்டிருந்தது. 'தாயோடு சேர்த்து என்னையும் உனக்கு இரையாக்கிக்க...' என்றது, கன்றுக்குட்டி. அப்போது தன் குட்டிகளைப் பற்றி நினைத்தது, புலி. 'நான் இறந்துட்டா, என் குட்டிகள் என்ன பாடுபடும். அதே நிலைமை தானே இந்த கன்றுக்குட்டிக்கும் ஏற்படும்...' என்று நினைத்து, மனதை மாற்றிக் கொண்டது. வாய்மை ஜெயித்தது; சத்தியம் காப்பாற்றியது. பசுவிடம், 'நீ, எனக்கு ஒரு உபதேசம் பண்ணணும்...' என்றது புலி. 'எல்லா உயிர்களுக்கும் எவன் அபயம் அளிக்கிறானோ, அவன் பிரம்மத்தை அடைகிறான்...' என்றது, பசு. உடனே, புலியின் உருவம் மாறி, அரசனானான். மறுபடியும் நாட்டுக்குத் திரும்பி ஆட்சி செய்ய ஆரம்பித்தான், பிரபஞ்சன். — இந்த கதையிலிருந்து நாம் தெரிந்து கொள்ள வேண்டியது, உண்மையானவர்களுக்கு என்றுமே ஆபத்து ஏற்படாது என்பது தான்! பி.என்.பி.,