உள்ளூர் செய்திகள்

அறிந்தும், அறியாமலும்!

'அறிந்தும் அறியாமல் இரு...' எனக் கூறுவர், பெரியோர். அது ஒரு பெரிய பண்பு. சான்றோர் எல்லாம் அப்படித்தான் நடந்து கொள்வர். 'பழமொழி நானுாறு' என்ற சங்க இலக்கியத்தில், 'அறிமடம் சான்றோருக்கு அணி...' என, ஒரு பழமொழி, இடம் பெற்றுள்ளது.அறிந்தும், அறியாதது மாதிரி நடந்து கொள்வது, ஞானிகளின் சிறப்பு என, அதற்கு அர்த்தம். பக்தி அதிகமானால், பைத்தியம் மாதிரி நடந்துக் கொள்வர், சிலர். அதை நாம் தப்பாக புரிந்து கொள்ளக் கூடாது. முல்லைக்கொடி வளர்வதற்காக, தன், தங்கத் தேரையே நிறுத்தி வைத்தார், பாரி. ஒரு மயில் குளிரால் அவதிப்பட்டதற்காக, தன், பீதாம்பரத்தையே போர்த்தினார், பேகன். இவர்களை பற்றி என்ன நினைக்கறீங்க? வரகுண பாண்டியன் என்ற மன்னருக்கு, பக்தி அதிகமானதால், ஒருசமயம் கொஞ்சம் வித்தியாசமாக நடந்து கொண்டார்.திருவிடைமருதுாரில், ஒரு இடத்தில், கோவிலுக்கு எண்ணெய் தயார் செய்து கொடுப்பதற்காக, எள் காய வைத்திருந்தனர். அச்சமயம், அந்த பக்கமாக வந்த ஒருத்தர், ஒரு கைபிடி எள்ளை எடுத்து, வாயில் போட்டு கொண்டார். இதை பார்த்து, 'ஐயய்யோ... அபசாரம் அபசாரம்...' என, கத்தியபடி ஓடி வந்து, அந்த ஆளை பிடித்து, வரகுண பாண்டியன் முன் நிறுத்தினர், காவலர்கள். அவரை பார்த்து ஆச்சரியம் அடைந்தார், வரகுண பாண்டியன்.காரணம், நெற்றியில் திருநீறு, உடம்பெல்லாம் பக்தி மயமாக காட்சியளித்த சிவ பக்தரா, அந்த சிவ அபராதத்தை செய்தார் என, வரகுண பாண்டியனால், நம்ப முடியவில்லை.அவரிடம், 'தாங்கள் ஏன் இப்படி ஒரு காரியத்தை செஞ்சீங்க?' என்றார், மன்னர். 'பசியின் காரணமாக அந்த காரியத்தை நான் செய்யவில்லை. இந்த ஊர் எனக்கு ரொம்பப் பிடித்து விட்டது. சிவ அபராதம் செய்தால், ஏழு ஜென்மங்களுக்கு இந்த கோவிலுக்கு செக்கு இழுக்கும் மாடாக பிறப்பேன் என்பது எனக்குத் தெரியும். அதற்காகத் தான் அப்படி செய்தேன்...' என்றார், அந்த சிவ பக்தர். அந்த ஊரில் செக்கு மாடாக பிறந்து, கோவிலில் தொண்டு செய்ய, தவறு செய்தால் தான் சாத்தியம் என்பதை புரிந்து, அப்படி செய்துள்ளார் என்றால், அவருக்கு எப்பேற்பட்ட பக்தி!'எங்கே உங்கள் வாயை கொஞ்சம் திறங்க...' என்றார், வரகுண பாண்டியன். வாயை திறந்தார், சிவ பக்தர். அங்கே கூடியிருந்தவர்கள் அனைவரும், 'ராஜா, அந்த ஆளோட வாயை கிழிக்கப் போறார்...' என்று நினைத்தனர். ஆனால், அவர் வாயில் ஒட்டிக்கிட்டிருந்த ஒரு எள்ளை எடுத்து, தன் வாயில் போட்டுக் கொண்டு, 'நீங்க செய்த அபராதத்தை நானும் செஞ்சுட்டேன். உங்களோட சேர்ந்து நானும் செக்கு இழுப்பேன்...' என்றார்.இது தான் சான்றோர் இயல்பு.     பி. என். பி.,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !