உள்ளூர் செய்திகள்

ஏழிசை மன்னர் எம்.கே.தியாகராஜ பாகவதர் (14)

புன்னாகவராளி ராகத்தில் பாடல் ஒன்றை பாகவதர் பாட, அங்கு, தன்னை மறந்து படம் எடுத்து ஆடிக்கொண்டிருந்தது, ஒரு நாகப்பாம்பு.விளாத்திகுளம் சுவாமிகளின் கண்களில் இருந்து, அருவியென கண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. பதறிப் போன பாகவதர், 'என்னாயிற்று சுவாமி, ஏன் கண்ணீர் சிந்துகிறீர்கள்?' என்று, கேட்டார்.'ஐயா, நான் வசிக்கும் பகுதியில், பாம்புகள் நிறைய இருக்கும். புன்னாகவராளி ராகத்தை நான் பலமுறை பாடியுள்ளேன். ஆனால், ஒருமுறை கூட, பாம்பு கண்ணில் தென்பட்டதே இல்லை.'நீங்கள் இருப்பது பட்டணத்தில். இப்பகுதியில், பாம்புகள் இருப்பது அபூர்வம். அப்படியிருக்க, நீங்கள் பாடிய புன்னாகவராளிக்கு, பாம்பு நேரில் வந்து படம் எடுத்து ஆடிற்று என்றால், சத்தியமாக நீங்கள் பூர்வ ஜென்மத்தில் ஒரு கந்தர்வ புருஷன் தான்...' என்றார்.'சுவாமி, நீங்கள் சொல்வதெல்லாம் பெரிய வார்த்தை. ஏதோ பகவான், எனக்கு கொஞ்சம் சங்கீத ஞானத்தைத் தந்துள்ளான். முன்னோர்கள் செய்த புண்ணியம்...' என்று, மிகுந்த தன்னடக்கத்தோடு சொன்னார், பாகவதர்.கடந்த, 1939ல், திருச்சி வானொலி நிலையத்தின் இயக்குனராக இருந்தார், டி.சங்கரன். அன்று மாலை, எஸ்.வி.சுப்பையா பாகவதரின் கச்சேரி நடக்க வேண்டும். ஏதோ அசந்தர்ப்பத்தால், சுப்பையா பாகவதரால் வர முடியாமல் போனது.இப்போது போல், முன்பே ஒலிப்பதிவு செய்து வைத்திருக்கும் வசதி எல்லாம் அப்போது கிடையாது; நேரடி ஒலிபரப்பு தான்.பதறிப் போன நிலைய இயக்குனர் சங்கரன், பாகவதர் வீட்டிற்கு விரைந்தார். 'தயவுசெய்து நீங்கள் தான் உதவ வேண்டும். எங்கள் மானத்தைக் காப்பாற்ற வேண்டும். இன்று மாலை, வானொலி நிலையத்திற்கு வந்து கச்சேரி செய்ய வேண்டும்...' என்று கேட்டுக் கொண்டார்.'சங்கரன் அண்ணா, பதட்டப்பட வேண்டாம். நான் வந்து கக்சேரி செய்கிறேன்...' என்று பாகவதர் சொன்ன பிறகு தான், அவருக்கு உயிர் வந்தது; மகிழ்ச்சியோடு சென்றார். அன்று மாலை, பாகவதர் கச்சேரி நடக்க இருக்கும் தகவலையும் முன்கூட்டியே அறிவிப்பும் செய்து விட்டனர். பாகவதரின் கச்சேரி நடந்தது. யார் யார் வீட்டில் எல்லாம் ரேடியோ இருந்ததோ, அவர்கள் வீட்டின் முன், திருவிழாக் கூட்டம்.தனக்காக ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சி அல்ல, இன்னொருவர் வர இயலாமல் போனதால், 'பதிலியாக' தான் கச்சேரி செய்கிறோம் என்றெல்லாம் அவர் நினைக்கவில்லை. நிலைய இயக்குனரே, வீடு தேடி வந்து வேண்டுகிறார். மறுக்கக் கூடாது என்ற பெருந்தன்மையில், உடனே ஒப்புக் கொண்டார், பாகவதர்.பாகவதரின் அர்ப்பணிப்பு உணர்வை பறைசாற்றிக் காட்டும் இன்னொரு நிகழ்வு...அன்று, திருச்சி வானொலியில், இரவு, 7:30 மணிக்கு பாகவதரின் கச்சேரி. மணி, 7:15ஐ தாண்டி விட்டது. இன்னும் பாகவதரைக் காணோம். தவிப்பில் இருந்தார், நிலைய இயக்குனர்.அப்போது, வேகவேகமாக சைக்கிளில் வந்தார், பாகதவர். 'ஏன் என்னாச்சு?' என்று பதறினார், நிலைய இயக்குனர்.'வழியில் ரயில்வே கேட்டை மூடி விட்டனர். ரயிலும் வரவில்லை, கேட்டும் திறக்கவில்லை. எவ்வளவு நாழிதான் காத்துக் கொண்டிருப்பது. பக்கத்தில் இருந்த ஒருவரிடம், நிலைமையைச் சொல்லி, அவரின் சைக்கிளை வாங்கி வருகிறேன்...' என்றார், பாகவதர்.நெகிழ்ந்து போனார், நிலைய இயக்குனர். சொன்னது போலவே, 7:30 மணிக்கு கச்சேரியைத் துவங்கி விட்டார், பாகவதர்.பாகவதரின் அரும்பெரும் குணங்களில், நேரம் தவறாமையும் ஒன்று.பாகவதரை நேரில் பார்ப்பது என்பது, தேவர் தலைவன், இந்திரனையே பார்ப்பது போல் என்றெல்லாம் பரவசப்பட்டனர், மக்கள்.பாகவதர் எப்போது வீட்டை விட்டு வெளியே வருவார், எந்தெந்த வழியாகச் செல்வார் என்பதெல்லாம் மக்களுக்கு அத்துபடி. சென்னையிலிருந்தோ, வேறு ஊர்களிலிருந்தோ பாகவதர், திருச்சிக்கு செல்கிறார் என்றால், அந்த ரயில் நிற்க வேண்டிய ஸ்டேஷன்கள் அனைத்திலும் கூடுதல் நேரம் ரயில் நிற்க வேண்டிய நிர்ப்பந்தம் இருந்தது. மக்கள், பாகவதரைப் பார்த்து மகிழ்ந்த பிறகு தான், ரயில் பயணத்தைத் தொடர முடியும் என்ற நிலை.ஒருமுறை, எர்ணாகுளத்தில் கச்சேரி முடித்து, கொச்சி எக்ஸ்பிரசில், சென்னை திரும்பிக் கொண்டிருந்தார், பாகவதர். ஒவ்வொரு ரயில் நிலையத்திலும், நீண்ட நேரம் காத்திருந்த பிறகே, வண்டி புறப்பட்டது.பிளாட்பாரத்தில் வண்டி நின்றால், சிறிது நேரத்திலேயே கிளம்பிவிடும். பாகவதரை, நீண்ட நேரம் பார்த்து மகிழ்வதற்கு, ஒரு உபாயத்தைக் கண்டுபிடித்தனர், மக்கள். ரயிலை செல்ல விடாமல் மறித்து விட்டால், எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் பார்த்து மகிழலாமே என்பது தான் அது. வண்டி, ஈரோடு ஸ்டேஷனில் இருந்து நகரவில்லை. ஆம், கிட்டத்தட்ட, 10 ஆயிரத்திற்கும் அதிகமானோர், தண்டவாளத்தில், உட்கார்ந்தும், படுத்தும் மறியல் செய்தால், எப்படி செல்ல முடியும். ஸ்டேஷன் அதிகாரிகள், போலீஸ்காரர்களின் மிரட்டல், உருட்டல் ஒன்றும் எடுபடவில்லை. என்ன செய்தும் பிரயோஜனமில்லை. ஓய்ந்து போனவர்களுக்கு, இப்போது ஒரே வழி, பாகவதர் தான்.பாகவதரைச் சந்தித்து, 'உங்கள் ரசிகர்களை நீங்கள் தான் சமாளித்து, ரயில் செல்ல வழி ஏற்படுத்த வேண்டும்...' என்றனர்.ரயிலை விட்டிறங்கி வெளியில் வந்து, ரசிகர்களைப் பார்த்து சிரித்தபடியே கும்பிட்டார், பாகவதர். ஒரே ஆரவாரம். பிறகு, உள்ளே சென்றார். அப்படியும் வண்டி நகரவில்லை.— தொடரும்ஒருமுறை, திருச்சி வானொலியில், பாகவதர் கச்சேரிக்கு ஏற்பாடாகி இருந்தது. கச்சேரிக்கு தம்புரா போட வந்தவரைப் பார்த்தார். நிலைய இயக்குனரிடம், 'தம்புராக்காரரை மாற்றுங்கள்...' என்றார், பாகவதர்.வேறொருவர் வந்தார். கச்சேரி முடிந்தது.'ஏன் தம்புராக்காரரை மாற்றச் சொன்னீர்கள்...' என்றார், இயக்குனர். 'என் சங்கீத ஆசான்களில் ஒருவர், அவர். பல ஆண்டுகளுக்கு முன், அவரிடம் நான் சங்கீத சிஷை எடுத்துக் கொண்டேன். சிஷ்யன், குருவை, தம்புரா போடச் சொல்வது அபசாரம் அல்லவா. அதனால் தான் வேண்டாம் என்றேன்...' என்றார், பாகவதர். அந்த தம்புராக்காரரைத் தேடிச்சென்று, பெருந்தொகையைக் கொடுத்தார், பாகவதர். ***- கார்முகிலோன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !