அந்துமணி பதில்கள்!
ஆர். பத்மப்ரியா, திருச்சி: சமையல் கலையில் நீங்கள், 'ஹீரோ'வா, 'ஜீரோ'வா?'ஹீரோ'வாகத் தான் இருந்தேன். இப்போது, சமையல் அறையை எட்டிப் பார்க்கக் கூட நேரம் கிடைப்பதில்லை. அதனால், தற்காலிகமாக, 'ஜீரோ'வாகி உள்ளேன். வாய்ப்பு கிடைக்கும்போது, புதுப் புது ஐட்டங்கள் கற்று, மீண்டும், 'ஹீரோ'வாகி விடுவேன்!முருகு. செல்வகுமார், சென்னை: சசிகலா, பிரேமலதா இருவரும், அரசியலில் வெற்றி பெற முடியவில்லையே... ஏன்?இருவரும், மக்களுக்காக என்னென்ன நன்மைகள் செய்து விட்டனர் என்பது உங்களுக்குத் தெரியாதா? அதனால் தான், அரசியலில் வெற்றி பெற முடியாமல், வெறும் அறிக்கை அரசியல்வாதிகளாக உள்ளனர்! எச். சாகுல், தஞ்சாவூர்: என் தாத்தா, என்னிடம், 'தர்மம் செய்' என்கிறாரே... இதனால், என்ன பலன் கிடைக்கும்?நீங்கள், தாத்தா சொல்வது போல் தர்மம் செய்யுங்கள். நீங்கள் விரும்பி செய்யும் அந்த தர்மங்களால், உங்களுக்கு, பல மடங்கு பலன் கிடைக்கும்!பா. முருகன், ராமநாதபுரம்: என் நண்பன், அடுத்தவர்களுக்கு நன்மை செய்யாமல், தீமைகள் செய்கிறானே... அவனை எப்படித் திருத்துவது?அவரிடம் சொல்லுங்கள், தீமை செய்தவர்களுக்கு, தீமை தான் விளையும். கெடுதல் செய்ய விரும்பாதோர், அதைச் செய்ய அஞ்சுவர் என்று!ஆர். மோகன், திண்டிவனம்: எண்ணங்கள் எப்படி இருப்பது நலம்?உங்கள் எண்ணத்திற்கேற்ப வசதிகளைப் பெருக்குவதை விட, வசதிகளுக்கு ஏற்ப, எண்ணங்களை குறைத்துக் கொள்வது நலம்!* வி. கணேசன், அவிநாசி: சுறுசுறுப்பாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். நான் என்ன செய்ய வேண்டும்?சுறுசுறுப்பாக இருக்க விரும்புகிறீர்களா, 'குட்!' அப்படியானால், உங்களைச் சுற்றி, சுகமான அதிர்வுகளை எற்படுத்திக் கொள்ளுங்கள்; சூழ்நிலையை ஆனந்தமாக்கிக் கொள்ளுங்கள்; தானாகவே சுறுசுறுப்பு வந்து விடும். கூடவே, சுற்றுச் சூழலையும் ஆனந்தமயமாக்கி விடுங்கள்!* எஸ். சுந்தரம், சேலம்: சான்றோர் என, சிலர் அழைக்கப்படுகின்றனரே... அவர் எவர்?அடக்கமுடையவர், ஆணவம் இல்லாதவர், பிறரை இகழாதவர், பிறரை புண்படுத்தாதவர், பிறரை பற்றி புறம் கூறாதவர், பிறரை பாராட்டுபவர், பிறரின் துன்பத்தையும் தன் துன்பம் போல் எண்ணி, அதைப் போக்குவதற்கு முயற்சிப்பவர்... இவர்கள் தான், சான்றோர் என்று அழைக்கப்படுகின்றனர்!