உள்ளூர் செய்திகள்

ஊருக்குதான் உபதேசம்!

சீனியர் பரதனை, ஒயின் ஷாப் பக்கம் பார்த்ததும், நெருப்பை தொட்டது போல், அதிர்ந்தேன்.அவர் கைகளைப் பிடித்து, 'வேணாம் சார்... வேணாம்! தயவு செய்து, நீங்களே அந்த தப்பை பண்ணாதீங்க. அப்புறம், எங்களுக்கு, நீங்கள் கொடுத்த அறிவுரைகளுக்கு, அர்த்தமே இல்லாமல் போகும். 'ஊருக்கு தான் உபதேசமா?'ன்னு பார்க்கறவங்க கேலியா சிரிப்பாங்க. 'ஒரு தவறான செயலால், நீங்கள் செய்யும் ஏராளமான நல்ல செயல்கள், மதிப்பிழந்துடக் கூடாது சார்... ப்ளீஸ்...' என்று சொல்லி, அவரிடம் இருக்கும், மதுபாட்டிலை வாங்கி, ஓரமாக வீசி விட்டு, அழைத்து வந்துவிட மனம் தவித்தது.ஆனால், அப்படி செய்வது, அதிகப் பிரசங்கித்தனமாகவும், நாலு பேர் முன், அவரை காட்டிக் கொடுக்கும் காரியமாகவும் அமைந்து விடும்.அதேசமயம், 'நீ யார்டா என்னை தடுக்க?' என்று கோபப்பட்டு, தீர்மானமாக குடிக்க ஆரம்பித்தால், என்ன செய்வது என தயக்கம்.பரதன் சாருக்கு, 54 வயது. 'ஓய்வுபெற நாலரை ஆண்டுகள் இருக்கு! இப்பெல்லாம் டென்ஷன் ஜாஸ்தியாவுது. எந்த நேரம் வேணாலும், விருப்ப ஓய்வு வாங்கிடுவேன்...' என்பார்.வேலையை விட்டு போய் விடுவதாக, அவர் சொல்லும் போது, என் வேலையே பறிபோவது போலத் தோன்றும்.அவரது முக்கியத்துவத்தை அறிந்திருந்ததால், 'நீங்க விருப்ப ஓய்வு கேட்டாலும் நிர்வாகம் உங்களை அனுப்பாது சார்...' என்பேன். அவரும், 'அதனால் தான் தைரியமா சொல்லிக்கிட்டு திரியறேன். அனுப்பிருவாங்கன்னு தெரிஞ்சால், வாய் திறப்பேனா...' என்று சிரிப்பார். அடுத்த நொடியே, முகம் இறுக்கமாகும்.'நிறைய, 'கமிட்மென்ட்ஸ்' இருக்குது. நாலரை ஆண்டுகளில் முடிஞ்சவரை நிறைவேத்திடணும். அப்புறமும் வேலை செய்யறேன்னு சொன்னால், கம்பெனி வேணாம்ன்னு சொல்லப் போறதில்லை. ஆனால், உடம்பு ஒத்துழைக்குமான்னு தெரியல...' என்பார்.ஏழ்மையில், வாழ்வைத் துவங்கியவர், பரதன் சார்.படிப்பு, கல்யாணம், வீடு எல்லாமே அவர் உழைப்பில் சாதித்தது. இரண்டு பெண்கள், ஒரு பையன். மூத்த பெண்ணுக்குத் தான் கல்யாணம் முடிந்திருக்கிறது. 'செலவு ரொம்ப இழுத்துட்டுது...' என்று சொல்லிக் கொண்டிருந்தார். சேமிப்பு, கடன், கைமாத்து எல்லாம், அனேகமாக கரைந்து விட்டிருக்க, 'ஓய்வு பெறுவதற்குள் ரெண்டாவது மகள கரையேத்திட்டா போதும்...' என்று, சொல்லிக் கொண்டிருந்தார்.ஸ்கூல் பைனல் போகும் கடைக்குட்டியைப் பற்றி, கவலைப்படவில்லை. 'அவனுக்கென்ன... ஆண்பிள்ளை. எஸ்.எஸ்.எல்.சி., படிச்ச நானே... பேக்டரி மானேஜர் ஆயிருக்கேனே... பிளஸ் 2 முடிக்கப் போறான். அவன் படிப்புக்கு, பில்கேட்ஸ் ஆக மாட்டானா என்ன...' என்பார்.பேக்டரி மானேஜராக இருந்தாலும், அவரிடம் அதிகார தோரணை இருக்காது. கனிவும், கண்டிப்பும், பொறுப்புணர்வும் தான் வெளிப்படும்.வேலையில் தான் கண்டிப்பு... பிசிறு தட்டக் கூடாது; வேலை நேரத்தில் பேச்சு கூடாது.'வேலை கடவுள் மாதிரி; கம்பெனி கோவில் மாதிரி. கோவிலுக்குப் போனா இப்படி தான் அரட்டையடிப்பீங்களா... சன்னிதில நின்று, பயபக்தியோட சாமி கும்பிடறமில்ல... அப்படித்தான் வேலை செய்யுமிடத்திலும் நடந்துக்கணும்.'இது எச்சரிக்கை. ஒழுங்கா இல்லன்னா, நானே மேலிடத்துல சொல்லி, வேலைய விட்டு எடுத்துருவேன்...' என்று கண்களை உருட்டுவார்.சங்கு ஒலித்தால் போதும்...'கிளம்புங்கப்பா... பள்ளிக்கூடம் விட்டாச்சு. பையைத் துாக்கிட்டு ஓடுங்க...' என்று விரட்டுவார்.அதற்கு மேலும், வேலை செய்து கொண்டிருந்தால், 'கொடுத்த நேரத்துக்குள், எல்லா வேலையையும் செஞ்சு முடிக்கிறவனே, நல்ல தொழிலாளி; அதிக நேரம் வேலை பார்க்கறவன் அல்ல...' என்பார்.அதற்கு மேல், யாராவது, மிஷின் முன் நிற்பரா...அவர் சர்வீசில், நிறைய பேரை வேலைக்கு எடுத்து, பயிற்சி கொடுத்து வாழ வைத்திருக்கிறாரே தவிர, யாரும் வேலையை விட்டுப் போக, அவர் காரணமாக இருந்ததில்லை. 'டிஸ்மிஸ்' ஆனவர்களுக்கு கூட, பரிந்து பேசி, வேலையில் நீடிக்க வைத்திருக்கிறார் என்று, பலரும் சொல்ல கேள்விப்பட்டுள்ளேன்.அதனாலேயே, அவர் மேல் ஈர்ப்பு ஏற்பட்டு, கம்பெனிக்கு அப்பாலும், அவருடன் உறவாடினேன். என்னையும் ஒரு மகனாக பாவித்தார்.வீட்டுக்கு அழைத்து போயிருக்கிறார்.'பர்சனலாக' பல அறிவுரைகளை கூறியுள்ளார். அசந்தர்ப்பமாக, எனக்கு ஏற்பட்ட சிக்கல்களால், நான் சோர்வுற்ற சில நேரங்களில், 'எச்சரிக்கையாயிரு பாலா. இந்த மாதிரி சந்தர்ப்பத்துல தான் ஒரு, 'தம்' போடலாமா, ஒரு, 'பெக்' போடலாமான்னு மனசு நினைக்கும்.'அதன் விருப்பத்துக்கு தலையாட்டிடாத. கெட்ட பழக்கம் உறவினரைப் போல வரும்; நண்பனைப் போல பழகும்... அதுவே எஜமானாயிரும்...' என்றவர், இப்போது தானே, மதுவை வரவேற்கும் நிலைக்கு, வந்திருக்கிறாரே என்ற வேதனையுடன், நகர்ந்தேன்.இரண்டு நாள் கழித்து, மெதுவாக பேசினேன்.''சார்... நான் உங்களைப் பார்த்தேன் சார்,''''தினமும் தான் பார்க்கறயே.''''நான் பார்த்தது, பார்க்கக் கூடாத இடத்துல வச்சு... ஒயின் ஷாப்ல. அன்னைக்கு ஏதாவது பார்ட்டியா சார்,'' என்றதும், அவர் கண்கள் கலங்கி விட்டது. குற்றவாளி போல் தலை கவிழ்ந்து, ''பார்த்தியா... ஊருக்கு தான் உபதேசம் என்பது போல பண்ணிப்புட்டேன்ல... முடியலய்யா... எவ்வளவு தான் மனசுல போட்டு உழட்டிக்கிறது. பைத்தியம் பிடிக்காது மனுஷனுக்கு? சட்டையைக் கிழிச்சுகிட்டு அலையறதுக்கு பதில், இது பரவாயில்லைன்னு தோணிச்சு!''''ஆனால், எந்த பிரச்னைக்கும், குடி தீர்வு இல்லையே, சார்.''''என்ன பண்றது பாலா... பையனுக்கு, 'ரிசல்ட்' வந்துடுச்சு. என்ஜினியரிங் படிக்கணும்ன்னு சொல்றான். அந்த ஆசை உள்ளவன், அதுக்கேத்த மார்க் வாங்கியிருக்கணும். ரேங்க் பட்டியல்ல பின் தங்கிட்டான்.''பிரைவேட் காலேஜ்ல சேர்த்து விடுங்கறான். டொனேஷனே லட்சங்கள்ல கேக்குறான். படிச்சு முடிக்கற வரை, ஒவ்வொரு ஆண்டும் ஒரு தொகை வைக்கணும். மகளை இந்த ஆண்டாவது கட்டிக் கொடுத்துடணும். அவளுக்கும் கல்யாணம் பண்ணிக்கணும்ங்கற ஆர்வம் வந்திருக்கு.''ரெண்டையும் நிறைவேத்தணும்னா பெருந்தொகை வேணும். இப்போதுள்ள சூழ்நிலையில் வீட்டை வித்தால் தான் முடியும். ஆனால், மனைவிக்கு அதில் விருப்பமில்லைன்னு தெரியும். என்ன பண்ணட்டும்... சொல்,'' என்று, மனம் விட்டுப் பேசினார்.''சார்... நான் ஒண்ணு கேட்கட்டுமா?''''என்ன கேட்கப் போற பாலா?''''நீங்க சொன்ன எல்லாமே முக்கியமான விஷயங்கள். ஆனால், நிறைவேத்த சாத்தியமில்லாத நிலைமை. இது உங்கள் குடும்பத்தாருக்கு தெரியாதா... அவங்க என்ன நினைக்கிறாங்க?''''எல்லாத்தையும் நான் நிறைவேத்தி வச்சுடுவேன்னு நம்பிகிட்டிருக்காங்க. அதுக்கு நான் தான் காரணம். துவக்கத்திலிருந்தே, குடும்பத்தார் ஆசைபட்ட எல்லாவற்றையும், 'இது முடியாது, இது வேணாம்...'ன்னு ஒதுக்குனதில்லை. எப்பாடு பட்டாவது நிறைவேத்திடுவேன். என் தேவைகளை தள்ளிட்டு, அவங்க தேவைகளை பூர்த்தி செஞ்சுடுவேன்.''''பொறுப்பும், அக்கறையும் கொண்ட குடும்பத் தலைவனா நடந்திருக்கீங்க.''''அதனால வந்த வினை தான், இப்ப யாருக்கும் பதில் சொல்ல முடியாம முழிக்கறேன். தண்ணி போடற அளவுக்கு போயிட்டதா நினைக்க கஷ்டமாயிருக்கு!''''சார்... உங்க நிலைமையை, குடும்பத்தார்கிட்ட வெளிப்படையா பேசிடுங்களேன். உள்ளுக்குள்ளயே வச்சு குமையறத விட, அது பெட்டர் இல்லையா... என்னடா இவன் புத்தி சொல்ல வந்துட்டானேன்னு நினைக்காம ஒரு வேண்டுகோளா எடுத்துகிட்டு செய்து பாருங்களேன்.''''ஒவ்வொருத்தர் மனசுலயும் என்ன இருக்கு, என்ன எதிர்பார்க்கறாங்கன்னு எனக்கு தெரியும். கூடிப் பேசலாம் தான். எல்லாருக்கும் வருத்தம் உண்டாயிடக் கூடாது. அவங்கவங்க விருப்பம் நிறைவேறாதுன்னு தெரிஞ்சால், ஏமாற்றமடைவாங்க, பாலா.''''எத்தனை நாள் தள்ளிப் போடுவீங்க. ஒருநாள் நிலைமை சுடத் தானே செய்யும். ஒருமுறை உடைச்சு பேசிடுங்களேன்,'' என்றேன்.அவர், மையமாக தலையசைத்தார்.எவ்வளவு திறமைசாலிகளாக இருந்தாலும், அவர்களுக்குள்ளும், பலவீனம் இருக்கும் என்பது, பரதன் சார் விஷயத்தில் நான் அறிந்து கொண்டேன். அவருக்கு தெரியாத விஷயமே இருக்க முடியாது என்று, நம்பிக் கொண்டிருந்த எனக்கு, அவர், தன் குடும்பத் தாரிடம் வெளிப்படையாக பேசாத குணம் கொண்டவராக இருந்தது, ஏமாற்றத்தை அளித்தது.வீட்டுக்கு குறை தெரியக் கூடாது. எந்த பிரச்னையானாலும், தானே தலையில் சுமந்து, மனைவி, மக்களுக்கு சிரமம் கொடுக்காமல், பார்த்துக் கொள்ள வேண்டும் என்று நினைத்து, வாழ்ந்து விட்டவர்.'முடியாது' என்று சொல்லி, கையாலாகாதவனாய் தன்னை காட்டிக் கொள்ள விரும்பாத அவரது, 'ஈகோ'வும் அனுதாபத்தை உண்டாக்கியது. இரண்டு நாட்களாக, கம்பெனிக்கு வரவில்லை, பரதன் சார். பதற்றமாயிருந்தது, எனக்கு.நல்லவேளையாக மூன்றாம் நாள், பணிக்கு திரும்பி விட்டார். 'பளிச்'சென்று தெரிந்தார். நிம்மதியாக இருந்தது. என்னைப் பார்த்தபோது, அவர் கண்கள் மின்னியது.''இனிமே நீ தான் குரு,'' என்று தோளில் தட்டினார்.சிலிர்த்தது. என்ன நடந்தது என்று அறிய ஆவல் மேலிட்டது. உணவு இடைவேளையில், பக்கத்தில் உட்கார வைத்து, ''பாலா... நீ சொன்னதை போல செய்தேன். வீட்ல எல்லாரும் கூடிப் பேசினோம். வீட்டை வித்து மகள் கல்யாணத்தையும், சின்னவன் படிப்பு செலவையும் சமாளிக்கலாம்ன்னு, ஒப்புகிட்டாங்க, மனைவி. ''பொண்ணுக்கு வீட்டை விற்கறதுல சம்மதமில்லை. 'கல்யாணம் வேணாம். தம்பி படிப்பு முடியட்டும், மெதுவா பண்ணிக்கறேன்...'ன்னு சொன்னாள். 'என்னால அக்கா கல்யாணம் தடைபடக் கூடாது. இன்ஜினியரிங் வேணாம். ஏதாவது டிகிரியில சேர்ந்துக்கறேன்...'ன்னான், பையன்.''அந்த சமயம் மூத்த மருமகன் வந்திருந்தாரு. பையனை படிக்க வைக்கற பொறுப்பை அவர் ஏத்துக்கிட்டாரு. எனக்கு அழுகையே வந்துருச்சு, பாலா. ஒருத்தருக்கொருத்தர் அனுசரிச்சு விட்டுக் கொடுப்பாங்கன்னோ, உதவி செய்ய முன்வருவாங்கன்னோ எதிர்பார்க்கலே.''வெண்ணெய கைல வச்சுகிட்டு, நெய்க்கு அலைஞ்ச கதையா, தீர்வை வீட்ல வச்சுகிட்டு, நான் எங்கெங்கோ தேடி அலைஞ்சுட்டேன். நல்ல வேளை... நீ தடுத்தாட்கொண்டாய்.''''என்ன சார்... பெரிய வார்த்தையெல்லாம் சொல்லிட்டு,'' நான் கூச்சப்பட்டேன்.என் தோளில் கை போட்டு, ''சந்தோஷமாயிருக்கு பாலா... வர்றியா ஒரு, 'பெக்' அடிப்போம்,'' என்றார்.துாக்கிவாரிப் போட, ''சார்,'' என்று அலறினேன்.''சும்மா, தமாஷ்,'' என்றார், அவர், வாய் விட்டு சிரித்தபடி!- எஸ். சிரஞ்சீவி


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !