உள்ளூர் செய்திகள்

திண்ணை!

எழுத்தாளர் வாஸந்தி எழுதிய, 'நினைவில் பதிந்த சுவடுகள்' நுாலிலிருந்து:நான், இமாச்சல பிரதேசம், ஷில்லாங்கில் வசித்த காலம். 'தி இல்லஸ்டிரேட் வீக்லீ ஆப் இந்தியா' ஆங்கில இதழில், பிரபல எழுத்தாளர், அசோகமித்ரன் கதை ஒன்று, ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டு வந்திருந்தது. அத்துடன் அவருடைய தெளிவில்லாத படமும் வெளியாகியிருந்தது. அசோகமித்ரனின் வெகு சில கதைகளை, நான் அதுவரை படித்திருந்தேன். அவருடைய எழுத்து என்னை மிகவும் கவர்ந்திருந்தது. ஒருநாள், சினிமா அரங்கம் ஒன்றில், ஒருவரை அழைத்து வந்து, 'இவர் தான், எழுத்தாளர் அசோகமித்ரன். ஷில்லாங்குக்கு, 'ஹாலிடே'க்கு வந்திருக்கிறார்...' என்று கூறினார், நண்பர். எனக்கு இன்ப அதிர்ச்சி. நினைத்ததை விட அசோகமித்ரன், இளைஞராக இருந்தார். புகைப்படத்தில் இல்லாத குறுந்தாடி இருந்தது. 'போட்டோவில் வித்தியாசமாக தெரிகிறீர்கள்...' என்றேன். புன்னகைத்தார்.தமிழ் எழுத்துக்கும், பேச்சுக்கும் ஏங்கிக் கொண்டிருந்த நான், அவரை, என் வீட்டிற்கு அழைத்தேன். அசோகமித்ரன் இல்லத்துக்கு வருகிறார் என்ற எண்ணமே, என்னை திக்குமுக்காட வைத்தது. அசோகமித்ரன் வந்தார். தேநீரையும், சிற்றுண்டியையும் அளித்த பின், ஆர்வத்துடன் தமிழ் எழுத்து, புத்தகங்கள், பத்திரிகைகள் என்று, நான் பேச முற்பட்டபோது, அவர் நழுவினார். தமிழ் எழுத்துக்கு கொஞ்சமும் சம்பந்தமில்லாத, தான் சமீபத்தில் சென்ற, ஜெர்மன் வகுப்பைப் பற்றி வெகுநேரம் ஆங்கிலத்தில் பேச, நான் சோர்ந்து போனேன். ஏமாற்றமும் ஏற்பட்டது. இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு, நான், நிஜ அசோகமித்ரனை சென்னையில் சந்தித்தேன். முன்பு, போலி ஆசாமியிடம் ஏமாந்தது, என் குற்றம் என்று சமாதானப்படுத்திக் கொண்டேன்.     பட்டத்தி மைந்தன் எழுதிய, 'கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன்' நுாலிலிருந்து:எழுத்தாளர் உலகத்தின் சுய மரியாதையை காப்பாற்றியவர், என்.எஸ்.கிருஷ்ணன்.* மணமகள் படத்தை, என்.எஸ்.கிருஷ்ணன் இயக்கி முடித்ததும், சிறப்பு காட்சி ஏற்பாடு செய்தார். படத்திற்காக பணிபுரிந்த தொழிலாளர்களுக்கும், தொழில்நுட்ப கலைஞர்களுக்கும், நகர பிரமுகர்களுக்கும், தியாகராஜ நகர், ராஜகுமாரி திரையரங்கில், மணமகள் படத்தை திரையிட்டார்.* இதை பார்த்தவர்களில், கல்கி கிருஷ்ணமூர்த்தி மற்றும் சாண்டில்யன் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள். அடுத்த நாள் காலை, கல்கி கிருஷ்ணமூர்த்தி, பெரிய மாலையோடு வந்து, கலைவாணர் கழுத்தில் அணிவித்து, 'சுதந்திர தினம், காந்தி ஜெயந்தி போன்ற நாட்களில் பெருமதிப்பிற்குரிய பெரிய மனிதர், யாருடைய வீட்டிற்காவது சென்று, மாலை அணிவிப்பது என் வழக்கம்.'நேற்று, மணமகள் படத்தை பார்த்ததும், இதை உங்களுக்கு அணிவிப்பது என, முடிவு செய்து விட்டேன். பிரச்னைகளை அழகாக எடுத்துச் சொல்லி, அவைகளுக்குரிய தீர்வையும் சிறப்பாக சொல்லியிருக்கிறீர்கள்.'சொந்தத்தில் ஸ்டூடியோவையும், மற்ற எல்லா வசதிகளையும் பெற்றுள்ள பெரிய பெரிய தயாரிப்பாளர்கள் எல்லாரையும் விட, நீங்கள், மணமகள் படத்தின் மூலம் மாபெரும் சாதனையை செய்து விட்டீர்கள்...' என, பாராட்டினார்.அன்றே எழுத்தாளர், சாண்டில்யனும் வந்தார். படத்தின் டைட்டிலில் கதை, முன்ஷி பரமு பிள்ளை எனும் எழுத்துக்களோடு, அவரது போட்டோவையும் காட்டி, 'எழுத்தாளர் உலகின் சுய மரியாதையை காப்பாற்றி விட்டீர்கள். அதற்காக, என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்...' என்றார்.இரு எழுத்தாளர்கள் வந்து, தன்னை பாராட்டியதில், ரொம்பவும் மகிழ்ந்தார், என்.எஸ்.கிருஷ்ணன்.- நடுத்தெரு நாராயணன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !