உள்ளூர் செய்திகள்

தீர்வு!

வழக்கத்தை விட இன்று, வீட்டிலிருந்து புறப்படுவதற்கு தாமதமாகி விட்டது.'இந்நேரம் கிளினிக்கில் இருந்திருந்தால், இரண்டு நோயாளிகளையாவது பார்த்து முடித்திருக்கலாம்...' என, மனதிற்குள் நொந்தபடி, மருத்துவமனைக்குள் நுழைந்தார், மதன். அவருக்காக காத்திருந்த நோயாளிகளின் வரிசை நீண்டிருந்தது.தன் அறைக்குள் நுழைந்து, சுழல் நாற்காலியில் தலை சாய்த்து, சில நிமிடங்கள் கண்களை மூடி அமர்ந்திருந்தார். மனம் குழப்பத்தில் ஆழ்ந்தது. மற்றவர்களின் குழப்பத்தை தீர்க்கும் பணியைச் செய்பவர் குழப்பத்தில் இருந்தால், அவரை யார் மீட்டு எடுப்பது?அறைக்குள் நுழைந்த அடுத்த நிமிஷமே, அழைப்பு மணியை அழுத்தி நோயாளிகளை பார்க்க ஆரம்பிக்கும் இயல்புடையவர். இன்னும் அழைக்கவில்லையே என்ற தயக்கத்தோடு இன்டர்காமில் அழைத்தாள், ரிசப்ஷனிலிருந்த பெண்.''சார், நோயாளிகள் எல்லாம் ரொம்ப நேரமா காத்திருக்காங்க. உள்ளே அனுப்பட்டுமா?'' என்றாள்.''சிட்... எனக்கு தெரியாதா, ரேவதி. நான் அழைக்கும் வரை காத்திருங்க,'' சுள்ளென்று இணைப்பைத் துண்டித்து, நெற்றியை மெல்ல அழுத்தியபடி அமர்ந்திருந்தார், மதன்.மகன் கபிலன், காலையில் செய்த ஆர்ப்பாட்டம், மனதை தைத்தது. கபிலன் மீது பெற்றவர்களுக்கு பாசம் அதிகம். மதனுக்கும், அகல்யாவிற்கு திருமணம் முடிந்து, மூன்று ஆண்டுகள் காத்திருக்க வைத்து பிறந்தான். இதனாலோ என்னவோ, அந்த பாசம் என்ற வளையம், அவனின் எதிர்காலத்தை ஒரு சின்ன கட்டத்திற்குள் அடைத்து விட்டதோ என்று கவலை.இனியும் தாமதிக்க முடியாது என்பதால், அழைப்பு மணியை அடித்து நோயாளிகள் வர அனுமதி அளித்தார். தன் முன் இருந்த சிஸ்டத்தில் பைலை திறக்க, முதல் டோக்கனுக்கான நோயாளியின் பெயரும், அவர் பற்றிய குறிப்பும், திரையில் மிளிர்ந்தது.உள்ளே நுழைந்த நபருக்கு, 45 வயது இருக்கும். உடன், அவர் மனைவியும் வந்தாள்.இருக்கையை காட்டிவிட்டு, அவர்கள் பேசட்டும் என்று காத்திருந்தார். காலவரையற்ற மவுனத்தோடு இருவரும் அமர்ந்திருந்தனர்.''சொல்லுங்க மிஸ்டர் பரணி... இப்ப என்ன விஷயத்துக்காக என்னைப் பார்க்க வந்திருக்கீங்க?''பரணி, மனைவி பக்கம் திரும்பிப் பார்க்க, அவள் பேச ஆரம்பித்தாள்.''கொஞ்ச நாளா மன அழுத்தத்தில் இருக்கார். அதிலிருந்து வெளியே வர முடியாம ரொம்பவே கஷ்டப்படறார், சார்.'' ''நீங்க?''''அவர் மனைவி, பத்மாவதி.''''எதனால மன அழுத்தம். எதற்கும் ஒரு ஆரம்ப புள்ளி இருக்கும் இல்லையா?''''இவருக்கு, தம்பின்னா ரொம்ப பிரியம். அஞ்சு வருஷத்துக்கு முன், விபத்துல தம்பி இறந்துட்டார். அந்த இழப்பை அவரால தாங்க முடியல. அதிலிருந்து குடிக்க ஆரம்பிச்சார். தன்னிலை மறந்து, அளவுக்கு அதிகமாக குடிக்க ஆரம்பிச்சுட்டார்.''ஒரு பைனான்ஸ் கம்பெனியில், 15 வருஷமா, 'கலெக் ஷன் டிபார்ட்மென்டு'ல இருந்தார். குடியால், ஒரு வாடிக்கையாளரிடம் கலாட்டாவாகி, இவரை வேலையிலிருந்து நீக்கிட்டாங்க.''படிக்கிற இரண்டு பிள்ளைகள் வேற, குடும்பம் நடத்துணுமே. அதனால, நான் அந்த கம்பெனியில், இரண்டு வருஷமா வேலைக்கு போறேன். இப்போ குடிக்கிறதை நிறுத்திட்டார். ஆனாலும், எங்கேயும் அவரால வேலைக்கு போக முடியல. ''வேலை செய்த இடத்தில், என் தவறால வெளியேற்றப்பட்டேன். அந்த அவமானத்திலிருந்து என்னால மீள முடியலைன்னு சொல்லி வருத்தப்படறார்.''பரணியின் முகத்தைப் பார்க்க, 'உலகத்திலேயே, பாவமான மனிதன், நான் தான்' என்பது போல அமர்ந்திருந்தான்.''புதுசா என்னென்ன இடத்துல எல்லாம் வேலைக்கு போனீங்க?'' என்றார், டாக்டர்.''ஒரு ஜவுளிக் கடை, மார்கெட்டிங் ஏஜென்சி, அப்பறம் ஒரு சூப்பர் மார்கெட்,'' என்றாள், பத்மாவதி.கைகளால் தாடையை தாங்கி, பார்த்துக் கொண்டிருந்தார். ஏனோ அந்த பரணியின் முகத்தில் மகன் கபிலன் தெரிந்தான். உள்ளுக்குள் பூனைக்குட்டி ஒன்று முன்னங்காலால் பிராண்டுவது போல் உணர்வுகள். காத்திருப்பிற்கு பிறகு பிறந்ததால், கவனமாக கையாள வேண்டும் என்ற எச்சரிக்கை உணர்வில், பெற்றவர்கள் இருவருமே, அவன் சுதந்திரத்தில் தலையிடுவதே இல்லை. என்ன வேண்டுமென்றாலும், தன் குரலை உயர்த்தி அதை சாதித்துக் கொள்ள கற்றிருந்தான்.மெடிக்கல் சீட்டுக்காக பெற்றவர்கள் இருவரும் முக்கிக் கொண்டிருக்க, 'ஆர்வமில்லை...' என, ஒரே வார்த்தையில், இருவருடைய கனவை முடித்து வைத்தான்.பி.இ., கோர்சில் சேர்ந்து, நாலே மாதத்தில் கோர்ஸ் பிடிக்கவில்லை என, வீட்டில் அமர்ந்தான். கடும் சிரமத்திற்கு மத்தியில் இன்னொரு கோர்சுக்கு மாற்ற, அதை படிக்கவும் ஆர்வமில்லை என்றான். கடும் சவாலுக்கும், பெற்றவர்களின் போராட்டத்திற்கும் நடுவே எப்படியோ, பி.இ., முடித்தான். அடுத்த பிரச்னை தன்னால் வந்தது.மிகப்பெரிய நிறுவனத்தில் தன் செல்வாக்கை பயன்படுத்தி, வேலை வாங்கி தந்தார், மதன். முதல் மாதம் சம்பளம் வாங்குவதற்கு முன், வேலையை துாக்கி எறிந்துவிட்டு வந்து நின்றான்.இருவரும் பதறினர்.'ஒருத்தன்கிட்ட கை கட்டி வேலை செய்ய வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. தனியா, 'பிசினஸ்' செய்யலாம்ன்னு இருக்கேன்...' என்றான்.மகனின் திறமையும், குணமும் தெரிந்திருந்ததால், அவனின் இந்தப் பேச்சை, பெற்றவர்களால் ரசிக்க முடியவில்லை. 'சரிடா, அதுக்காக நீ வேலை பார்த்த முதல் மாத சம்பளத்தை கூடவா வாங்காம வேலையை விட்டுட்டு வருவ. அது, உன் உழைப்பிற்கான முதல் ஊதியம் இல்லையா?' கேட்டாள், அகல்யா.'அறுபதாயிரம் ரூபாய், அதெல்லாம் ஒரு பணமாம்மா... அதுக்காக, 'சேலரி வவுச்சர்'ல கையெழுத்துப் போட்டுட்டு, அரை மணிநேரம் காத்திருந்து, பல்லைக் காட்டிட்டு வாங்கிட்டு வரணுமா? எனக்கு பிடிக்கல...' என்று சொல்லி, எழுந்து போனவன் தான்.காலையில், மதனின், 'டென்ஷனு'க்கு இது தான் காரணம்.மகன் பொருட்டு, கணவன் - மனைவி இருவருக்கும் பெரிய வார்த்தை போர் நடந்தது. 'உன்னால் தான் உன்னால் தான்' என்று, பரஸ்பரம் குற்றம் சுமத்திக் கொண்டாலும், நம்மால் தான் என்று இருவரும் பொறுப்பேற்க தயாராக இல்லை.''நம்பிக்கையை எல்லாம் வார்த்தைகளில் தர முடியாது. அதை அவரவர் தான் உணர வேண்டும்,'' என, தியானம், யோகா மற்றும் மனதை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரும் ஆலோசனைகளை, பரணிக்கு கூறினார், மதன்.மாத்திரைகளை தந்து, ''அடுத்த வாரம் என்னை வந்து பார்,'' என, சொல்லி அனுப்பி வைத்தார். நோயாளிகளை பார்த்து முடிக்கவும், நண்பகலானது. உதவியாளரை உணவு வாங்கி வர பணித்துவிட்டு, மொபைல் போனை எடுக்க போக, ஜன்னலை ஒட்டி பேச்சுக்குரல் கேட்டது. கிளினிக்கின் வெளிப்பக்கம் இருந்த நீண்ட சிமென்ட் பெஞ்சில் அமர்ந்து, யாரிடமோ போனில் பேசிக் கொண்டிருந்தாள், பத்மாவதி.புற சத்தத்தின் இரைச்சலோ என்னவோ, 'ஸ்பீக்கரை ஆன்' செய்திருக்க, எதிர்முனையில் தடிப்பான குரலில் ஒரு பெண் பேசுவது தெளிவாக கேட்டது.''இப்போ எங்கே இருக்கீங்க?''''ஹாஸ்பிடல்ல தான், சித்தி. பக்கத்தில் யாரோ ப்ரெண்டை பார்க்க போய் இருக்கார். வந்ததும் கிளம்பிட வேண்டியது தான்.''''டாக்டர் என்ன சொன்னார்?'' வார்த்தைகளை சுருக்கி, விஷயத்தை விவரித்தாள், பத்மாவதி.''நான் ஒண்ணு சொல்லட்டுமா, பத்மா... இதெல்லாம் இங்கிலீஷ் வைத்தியத்துக்கு கட்டுப்படற வியாதி இல்லை. கை வைத்தியத்துல கஷாயம் வச்சு, மூக்கை பிடிச்சுக்கிட்டு உடம்புக்குள்ள தள்ளவேண்டியது தான்.''''சித்தி, ஐந்து வருஷமா தம்பியை இழந்துட்டு, இழப்பிலிருந்து அந்த மனுஷன் மீள முடியாம தவிச்சுட்டு இருக்கிறதை கண்ணால பார்க்கிறேன். அவர் கவலையை அத்தனை லேசா யோசிச்சுட முடியாது,'' கண்ணை ஒற்றிக் கொண்டாள், பத்மாவதி.''அடிப்போடி. ஏன், உன் வீட்டில், என் வீட்டில், யாருமே சாகலயா? 'பிறப்பும், இறப்பும் இல்லாத வீட்டிலிருந்து ஒரு கைப்பிடி அரிசி வாங்கிட்டு வா, உனக்கு சாகாத வரம் தர்றேன்'னு கடவுள் சொல்லி, இது இரண்டும் வாழ்க்கையில் மனுஷனுக்கு சர்வ நிச்சயம்ன்னு புரிய வச்ச புராண கதைகளை நாம கேட்டதில்லையா?''அப்பா இறந்தப்போ, உனக்கு, 10 வயசு. என் மூத்த பையன் இறந்து, ஏழு வருஷம் ஆச்சு. நீயும், நானும், ஏன் நம்மளைச் சேர்ந்த யாராவது அந்த துக்கத்தை கொண்டாடிட்டேவா சுத்தறோம்?''ஏன்னா, நமக்கு கடமை இருந்துச்சு. கவலைகளை காரணம் காட்டிட்டு, கடமைகளை கை விடற சுயநலவாதிகளா இல்லாம இருந்தோம். உன் புருஷன் சுணங்கிப் போய் நிற்கிறதுக்கு கவலை மட்டும் தான் காரணம்ன்னா நினைக்கிற? நீயும் தான்.''சித்தி சொன்னதை கேட்டதும், பத்மாவை விட, அதிர்ந்து நின்றது, மதன் தான். காதுகளை இன்னும் தீட்டிக் கொண்டார்.''என்ன சித்தி சொல்றீங்க... நானா?''''நீயே தான். உன் புருஷன், ஆரம்பத்தில் வேலை செய்த இடத்தில் அவ்வளவு உடல் உழைப்பு இல்லை. அந்த வேலையை தக்க வச்சுக்க முடியாம ஏதோ தப்பு நடந்து போச்சு. அதன் பின், ஒவ்வொரு வேலையிலிருந்து அவர் திரும்பி வந்ததுக்கு, சோம்பேறித்தனமும், நீயும் தான் காரணம்.''காசு கேட்டு நச்சரிக்காம, நீயே வேலைக்கு போய், குடும்ப பொறுப்பை ஏத்துகிட்ட பின், முழுக்க முழுக்க, அவர் கவலைக்கு தத்து பிள்ளை ஆயிட்டார். ஏதோ எல்லா துயரங்களும் அவருக்கு மட்டும்தான்கிற மாதிரி, செத்து இத்துப் போன சோகத்தை துாக்கி தோள்ல போட்டுக்கிட்டு, தன் கடமையை மறந்து சுத்தறார்.''அவருக்கு இப்போ தேவை கவுன்சிலிங் கிடையாது. உன் பொறுப்பு இதுன்னு சுட்டிக்காட்டி செவிட்டில் அறையுற மாதிரியான புத்திமதி. உடல் உழைக்க ஆரம்பிச்சா, தன்னால மனசு கட்டுப்பாட்டுக்குள்ள வரும். சவலை பிள்ளைகளை சரி பண்ண ஒரே வழி, அதுங்களை துாக்கி வச்சு கொஞ்சாம கை விடறது தான்,'' என்றார், சித்தி.பொட்டில் அறைந்தது போல் இருந்தது, மதனுக்கு. அனுபவ அறிவு தரும் உபதேசங்கள், ஆயிரம் இரண்டாயிரத்துக்கு தான் செய்யும் ஆலோசனைகளை விட, எத்தனை வீரியமானது என்று, அந்த நிமிஷம் புரிந்தது.எல்லாவற்றையும் விட, கபிலனை கை விடுவது தான் அவனை உயிர்ப்பாக்கும் என்ற பெரிய தீர்வும் கிடைத்தது.மன நிறைவோடு அந்த செய்தியை, மனைவியிடம் பகிர, மொபைல் போனை எடுத்தார், மதன்.     எஸ். பர்வீன் பானு


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !