ஏழிசை மன்னர் எம்.கே.தியாகராஜ பாகவதர் (20)
கடந்த 1937ம் ஆண்டில், பாகவதரின் படங்களான, சிந்தாமணி மற்றும் அம்பிகாபதி வெளிவந்தன. 15 ஆண்டுகளுக்கு பின், 1952ல், பாகவதர் நடிப்பில் இரண்டு படங்கள் வெளிவந்தன. 1937ல் பணமழை கொட்டியது. 1952ல் அப்படியில்லை. காலவெள்ளம் அனைத்தையும் மாற்றிப் போட்டு விட்டது. பிரபல ஆர்ட் டைரக்டரும், 'நியூடோன் ஸ்டூடியோ'வின் முக்கிய பங்குதாரருமான, எப்.நாகூர் தயாரிப்பு மற்றும் டைரக்ஷனில் வெளிவந்த படம் தான், அமரகவி. ராஜமுக்தியில் இடம்பெறாத என்.எஸ்.கிருஷ்ணனும், டி.ஏ.மதுரமும் இதில் நடித்திருந்தனர். டணால் தங்கவேலு என்ற புகழ்பெற்ற நகைச்சுவை நடிகர் மற்றும் உவமைக் கவிஞர் சுரதா, பாடலாசிரியராக அறிமுகம் ஆனதும், இப்படத்தில் தான். இப்படமும், சுமாரான வெற்றியைத்தான் தந்தது. உண்மையைச் சொல்வதென்றால், பாகவதரே கொஞ்சம் அரண்டு தான் போனார். அற்புதமான பாடல்கள், அருமையான கூட்டணி, அனைவரும் நன்கு நடித்திருந்தும் கூட, ஏன் படங்கள் பெரிதாக வசூலைத் தரவில்லை. 'ஆரணங்கே நிஜம் நீ அறியாய், என் ஜீவப்ரியே ஷ்யாமளா, ராஜன் மஹாராஜன், இன்பம் கண்டேன், ஆனந்தமான நாதம்...' என்ற அருமையான பாடல்கள், இன்றைக்கும் நம் செவிகளுக்கு விருந்தளிக்கின்றன. ஆனாலும், படம் பெரிதாக ஓடவில்லை. இன்னொரு வேதனையான விஷயம் என்னவென்றால், பாகவதர் நடித்த, ஷியாமளா என்ற படத்தின் தோல்விக்குப் பிறகு, தயாரிப்பாளர்களே, அவரை வைத்துப் படம் எடுக்க தயக்கம் காட்டத் துவங்கினர். வெளிப்படையாகவே, 'பாகவதருக்கு முதுமை தட்ட ஆரம்பித்து விட்டது. முகத்தில் பழைய சோபை இல்லை. கதாநாயகனாக நடிப்பதற்கு அவர் ஏன், 'ரிஸ்க்' எடுக்க வேண்டும்? மற்ற பாத்திரங்களிலும் நடிக்கலாம் அல்லவா...' என்றனர், இன்னும் சிலர். ஆனால், உபவேஷங்களுக்கு பாகவதர் ஒப்புக்கொள்ளவே இல்லை. நடித்தால், கதாநாயகனாக மட்டுமே நடிப்பேன் என்பதில் உறுதியாக இருந்தார். அப்படியே செய்தும் காட்டினார். புதுவாழ்வு படத்தின் தயாரிப்பாளர் மற்றும் டைரக்டர் பாகவதர் தான். வழக்கம்போல், பாடல்கள் எல்லாம் சிறப்பாக இருந்தன. 'உண்மை ஒன்றே பேசும்...' என்ற பாடல் அருமையிலும் அருமை. 'தேன் குயில் போலே...' என்ற பாடல் கேட்க மிகவும் இனிமையாக இருக்கும். தென்னிந்தியாவின், லதா மங்கேஷ்கர் என்று போற்றப்படும், ஜிக்கி, பாகவதரோடு பாடியது இந்த ஒரு பாடல் மட்டும் தான். புதுவாழ்வு படம் நிச்சயம் மாற்றத்தை தரும் என்று திடமாக நம்பிய பாகவதருக்கு, ஏமாற்றம் தான் கிடைத்தது. பழைய படங்களில் பாகவதரைப் பார்த்தால் தெரியும். பளீரென்ற முகமும், சுண்டி இழுக்கும் கொள்ளைச் சிரிப்பும், கம்பீரமான நடையழகும், எப்போதுமே சந்தோஷத்தில் இருக்கிற அகப்பொலிவும், முகப்பொலிவும், நடிப்பின் துடிப்பிலும், பார்ப்பவர்கள் மெய்மறந்து தான் போவர்.அதே பாகவதரை, சிறை மீண்ட பிறகு நடித்த படங்களில் பார்க்கும் போது, மேற்சொன்ன அத்தனையும் இல்லாமல் போனது.பெரும் புகழோடு இருந்தவர்களுக்கு ஏதோ ஒரு காரணத்தால் களங்கம் ஏற்பட்டு விட்டால், அவர்களுடைய வாழ்க்கையில் அமைதி மற்றும் ஆனந்தம் என்பது, உள்ளத்தளவில் குன்றித்தான் போகும் என்கின்றனர், உளவியல் வல்லுனர்கள்.இது, பாகவதர் விஷயத்தில் நுாற்றுக்கு நுாறு உண்மையானது. கச்சேரிகளில் அதிக கவனம் செலுத்தினார், பாகவதர். அது மட்டுமல்ல, அவருடைய நல்ல உள்ளம், பக்தி உள்ள, ஏராளமான தர்ம கச்சேரிகளை செய்ய வைத்தது. கோவில்களில் சென்று பாடினார். பேன்ட் - ஷர்ட், கோட் - சூட் போட்டு கதாநாயகன் ஓடி, ஆடிப்பாடுவதெல்லாம் புழக்கத்தில் வந்தன. ஜிகினாக் காட்சிகள் ஏராளமாக சேர்க்கப்பட்டன. கதாநாயகனும், கதாநாயகியும் கட்டிப்பிடித்து, நெருக்கமாக நடிப்பதெல்லாம் சகஜமாகிப் போனது. இந்த காலகட்டத்தில், பாகவதருக்கு கண் பார்வை மங்கத் துவங்கியது. பாகவதருக்கு, சர்க்கரை நோய் இருந்துள்ளது. தனக்குத்தானே இன்சுலின் போட்டுக் கொள்வார். உடல்நலம் கருதி, பாடுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என, பாகவதருக்கு அறிவுரை கூறினர், மருத்துவர்கள். சங்கீதம் என்பது பாகவதரின் மூச்சல்லவா! மறுத்து விட்டார். கச்சேரி, நாடகம் என்று முழுவீச்சில் பயணிக்க துவங்கினார். உண்மையில், உச்சஸ்தாயியில் பாடும்போது, நாடி நரம்புகள் அதிகமாக சிரமம் கொள்வது தவிர்க்க முடியாதது. பாகவதருக்கு, ரத்தக்கொதிப்பும் இருந்துள்ளது. சர்க்கரை நோய் விஷயத்தில் கவனம் காட்டிய பாகவதர், ரத்தக்கொதிப்பு பற்றி அதிக அக்கறை கொள்ளவில்லை.மனைவி, குடும்பத்தினர் மற்றும் டாக்டர்கள், பாடுவதோ, நடிப்பதோ கூடாது என்று சொல்லியும் கேட்காமல், கச்சேரிகளை தொடர்ந்து நடத்திக் கொண்டே இருந்தார், பாகவதர். அதுமட்டுமல்லாமல் நாடகங்களிலும் மீண்டும் நடிக்கத் துவங்கினார்.பழைய நாடகங்களை மீண்டும் முழுமூச்சோடு போடத் துவங்கினார். சர்க்கரை நோயும், மன அழுத்தமும் அதிகமாகி விட்டால், அது முதலில் பாதிப்பது கண்களைத்தான். இவ்விரண்டுமே அவருக்கு அதிகமாக இருந்ததனால், கண் பார்வை பாதிக்கப்பட்டது. கண்ணாடி போட்டுக் கொண்டார். உடலும் பலகீனப்பட்டுப் போய்விட்டது.- தொடரும். படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும்போது, காந்திஜி சுட்டுக் கொல்லப்பட்டார். அப்போது, சென்னை, சரஸ்வதி ஸ்டோர்ஸ், பாபநாசம் சிவன் இயற்றிய இரண்டு பாடல்களை காந்திஜிக்கு அஞ்சலியாக வெளியிட்டது. அந்த இரண்டு பாடல்களையும் பாடினார், பாகவதர். அந்த இரண்டு பாடல்கள் விற்பனையில் சக்கை போடு போட்டன. இந்தியா குடியரசு ஆவதைக் கொண்டாடும் வகையில், அதே சரஸ்வதி ஸ்டோர்ஸ், இரண்டு அற்புதமான பாடல்களை கொலம்பியா ரிக்கார்டுகளில் வெளியிட்டது. மகாகவி பாரதியின், 'பாருக்குள்ளே நல்ல நாடு...' பாடலும், உமைதாணுபிள்ளை என்பவர் எழுதிய, 'சுதந்திரக்கொடி...' என்ற பாடலும் ரிக்கார்டுகளாக வெளியிடப்பட்டன. கார்முகிலோன்