ஏழிசை மன்னர் எம்.கே.தியாகராஜ பாகவதர் (21)
படங்களின் தோல்வி, சர்க்கரை மற்றும் ரத்தக் கொதிப்பு நோய் பாகவதரை ரொம்பவே பாதித்தது.வெள்ளியால் ஆன சங்கிலியிலும், சந்தன மரத்தால் ஆன பலகையிலும் ஊஞ்சல் ஆடிய பாகவதர், தற்போது பற்றற்ற துறவி போல் மாறி விட்டார் என்பது தான் உண்மை. பாகவதரின் இறுதிப்படம், சிவகாமி. 1959ல், எம்.ஏ.வேணு, தயாரித்தார். இவர் பாகவதரின் உற்ற நண்பரும் கூட.எம்.ஏ.வேணு, மாடர்ன் தியேட்டர்ஸ் ஸ்டூடியோவில் சாதாரண தொழிலாளியாக இருந்தவர். வேலையில், கண்ணும் கருத்துமாக இருப்பார். முதலாளி, டி.ஆர்.சுந்தரம், அற்புதமான மனிதர்; யாராக இருந்தாலும், திறமைக்கு மட்டுமே முக்கியத்துவம் தருகிற உயர்ந்த மனிதர். வேணுவின் குணத்தையும், வேலை நேர்த்தியையும் கண்ட அவர், மாடர்ன் தியேட்டர்சில், தயாரிப்பு நிர்வாகியாக நியமித்தார். எல்லாருடைய நம்பிக்கையையும், பாராட்டையும் பெற்றார், வேணு. சினிமா பற்றிய சகலத்தையும் கற்றுத் தேர்ந்த வேணு, பிறகு, மாடர்ன் தியேட்டர்சில் இருந்து விலகி, தனியாக படம் எடுக்கத் துவங்கினார். டவுன் பஸ், சம்பூர்ண ராமாயணம், முதலாளி போன்ற அருமையான படங்களை எடுத்தவர், இவர். சிவகாமி படத்தில், பாகவதர், கண்ணாடி அணிந்தபடி தான் நடித்திருப்பார். வசனங்களைக் கூட, தெளிவாக உச்சரிக்க முடியாத அளவிற்கு உடல் பலகீனம் அடைந்து விட்டது. அவருடைய உடல் தளர்வு, நடிப்பிலும் தெரிய ஆரம்பித்தது. பொள்ளாச்சியில் ஒரு கச்சேரி. மூன்று மணி நேரத்திற்கும் மேலாக கான மழை. கச்சேரி முடித்துவிட்டு, மக்கள் வெள்ளத்தின் இடையே, காரை நோக்கி வந்தார்.அப்போது, 'ஐயா, தங்கள் கால்கள் வீங்கிக் காணப் படுகின்றனவே. கந்தர்வன் போன்ற தங்களுடைய ரூப லாவண்யம் மங்கிக் கிடக்கிறதே. இதை நீங்கள் உணரவில்லையா... எனக்கு நாட்டு வைத்தியம் தெரியும். சுரைக்காய் கொடியை சூப் செய்து சாப்பிட்டால், வீக்கம் குறையும், தேகமும் புஷ்டி பெறும்...' என்று பாகவதரிடம் கூறியுள்ளார், சாமியார் ஒருவர். 'அப்படியானால், நீங்களே தயார் செய்து தாருங்களேன்...' என்றார், பாகவதர். சூப் தயாரிக்கப்பட்டு, பாகவதரும் பருகியிருக்கிறார். பிறகு, தன் குழுவினரோடு சேலத்திற்கு திரும்பி விட்டார். மறுநாள் பொழுது விடியும்போது, பாகவதர் மூச்சு விடுவதற்கே மிகவும் சிரமப்பட்டுள்ளார். டாக்டரை அழைத்து வந்து காண்பித்தால், 'இது கொஞ்சம் சீரியஸ் கேஸ். உடனே, மதராஸ் சென்று வைத்தியம் பார்ப்பது தான் உசிதம். காலதாமதம் வேண்டாம்...' என்று, எச்சரிக்கை செய்துள்ளார். அனைவருக்கும் அதிர்ச்சி. என்ன செய்வதென்று புரியவில்லை. பட அதிபர், எம்.ஏ.வேணுவிற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அலறிப் புடைத்து, ஓடி வந்து, தன் காரிலே பாகவதருடன், உடனே சென்னைக்கு விரைந்தார். சென்னையில், அரசு பொது மருத்துவமனையில் அக்., 22, 1959ல், அனுமதிக்கப்பட்டார், பாகவதர். மிகவும் தீவிரமாக வைத்தியம் பார்த்தனர். ஆனாலும், நாளுக்கு நாள், மெலிந்து கொண்டே வந்தார், பாகவதர். பாகவதருக்கு தன் முடிவு தெரிந்து விட்டது. தன் சிஷ்யர் ரத்னப்பாவிடம் தியாகப் பிரம்மத்தின் கீர்த்தனைகளை பாடுமாறு கேட்டுக் கொண்டார். சுற்றியுள்ளோர் கவலை தோய்ந்த முகத்தில், செய்வதறியாது நின்றனர். தியாகைய்யரின் கிருதிகளை மனமுருகப் பாடினார், ரத்னப்பா. அதை, கண்கள் கசிந்துருக, அமைதியாக கேட்டுக் கொண்டிருந்தார், பாகவதர். புன்னைகையின் மெல்லிய கீற்று முகத்தில் படர, அமைதியாக, இறைவனோடு ஐக்கியமானார், பாகவதர். நவம்பர் 1, 1959, மாலை, 6:00 மணிக்கு, பொன்னுடல் நீங்கி, புகழுடல் எய்தினார், பாகவதர். பாகவதரின் புகழுடல், திருச்சிக்கு எடுத்துச் செல்லப்பட்டது.பாகவதரை, தன் காரில் சேலத்திலிருந்து, சென்னை அரசுப் பொது மருத்துவமனைக்கு அழைத்து வந்த, தயாரிப்பாளர் வேணு, 'இது என்னுடைய பூர்வஜென்ம புண்ணியம்...' என்று சொல்லி, பாகவதரின் புகழுடலை, தன் காரில் திருச்சிக்கு கொண்டு வந்தார். 'அன்னையும் தந்தையும் தானே, பாரில், அண்டசராட்சரம் கண்கண்ட தெய்வம்...' என்று பாடிய பாகவதரின் புகழுடல், திருச்சி, சங்கிலியாண்டபுரத்தில், அவரது பெற்றோர் சமாதிகளோடு வைக்கப்பட்டு பூஜிக்கப்பட்டது. அப்போது, தமிழக முதல்வர் காமராஜர் மற்றும் பல முக்கிய பிரமுகர்கள் வந்திருந்து, பாகவதருக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர். உயிர் விண்ணுக்கு செல்ல, உடல் மண்ணிற்குள் செல்ல, அவருடைய பெரும் கீர்த்தி, சூரியன், சந்திரன் உள்ள வரைக்கும் இருந்து கொண்டே இருக்கும். இன்றும் தம் கந்தர்வ கானத்தால், நம் மனதில், நீக்கமற நிறைந்து உள்ளார், பாகவதர்.எத்தனையோ கோவில்களில், பாகவதர் கச்சேரி செய்திருந்தாலும், மார்ச், 1949ல், சென்னை கபாலீஸ்வரர் கோவிலில் கச்சேரி நடந்தபோது கூடிய கூட்டம், அனைவரையும் திக்குமுக்காட வைத்தது. மாலையில் நடக்கப் போகிற கச்சேரிக்கு, மதியம் முதலே திரள ஆரம்பித்து விட்டனர், மக்கள். திடீர் கடைகள் முளைத்து விட்டன என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். கோவில் முழுவதும் கூட்டம். கோவில் வெளியேயும் கூட்டம். எங்கு பார்த்தாலும் மக்கள் தலைகள் தான் தெரிந்தன. மாலை ஆரம்பித்த கச்சேரி, நள்ளிரவு வரை நீண்டது. நேரம் ஆக ஆக, கூட்டம் அதிகமாக கூடிக்கொண்டிருந்ததே தவிர, கொஞ்சமும் குறையவில்லை. அந்த விழாவில் தான், பாகவதருக்கு கந்தர்வ கான ரத்னா மற்றும் விஷாரத் ஆகிய பட்டங்களை வழங்கினர். * பாகவதர் நடித்த பவளக்கொடி, நவீன சாரங்கதாரா, அம்பிகாபதி மற்றும் திருநீலகண்டர் ஆகிய நான்கு படங்களின் கதைகள் மீண்டும் தயாரிக்கப்பட்டன. டி.ஆர்.மகாலிங்கம் நடித்த பவளக்கொடி, 1949ம் ஆண்டும், சிவாஜி நடித்த சாரங்கதாரா, 1958ம் ஆண்டும், சிவாஜி நடித்த, அம்பிகாபதி 1957ம் ஆண்டும், டி.ஆர்.மகாலிங்கம் நடித்த, திருநீலகண்டர் 1972ம் ஆண்டும் மீண்டும் திரையுலகப் பிரவேசம் கண்டன. பாகவதர் நடித்த, 14 படங்களில், 133 பாடல்கள் பாடியுள்ளார். அவைகளில், 103 பாடல்கள் தனித்தும், 30 பாடல்கள் பிறரோடு இணைந்தும் பாடியவை.— முற்றும் கார்முகிலோன்