உள்ளூர் செய்திகள்

அந்துமணி பதில்கள்!

எம். சுப்பையா, கோவை: 'ஓட்டுக்கு பணம் கொடுப்பதை, ஆதாரத்துடன்தெரிவித்தால், 100 நிமிடங்களில் நடவடிக்கை எடுப்போம்...' என, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி உறுதி அளித்துள்ளாரே...நடக்காத காரியம்... 100 நிமிடங்கள் என்ன, ஒரே நிமிடத்தில், பணம் கொடுப்போர் காரியத்தை முடித்து விடுவர். பணம் கொடுப்பதை மொபைல் போனில், 'வீடியோ' எடுத்தால், அந்த மொபைல் போன் உடைந்து போகும்; 'வீடியோ' எடுத்தவருக்கு, அடி, உதையும் கிடைக்கும்!க. சித்தார்த், சென்னை: 'வரும் லோக்சபா தேர்தலில், தி.மு.க., கூட்டணி, 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும்...' என, தமிழக முதல்வர் ஸ்டாலின் கூறுகிறாரே... வாய்ப்பு உள்ளதா?ஆட்சியில் அமர்ந்து, மூன்று ஆண்டுகள் ஆன பின்பும், தேர்தலின்போது கொடுத்த பல வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் இருப்பதால், பெரும்பாலான வாக்காளர்கள், விரக்தியில் உள்ளனர். முதல்வரின், 40 தொகுதிகளில் வெற்றி என்பது, அவர் கனவே!    * ரா. ராஜ்மோகன், முட்டியூர், விழுப்புரம்: 'எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியில், தமிழகமே மகிழ்ச்சியில் திளைத்தது. ஆனால், தி.மு.க., ஆட்சியில், ஸ்டாலின் குடும்பம் மட்டுமே அதை அனுபவித்துக் கொண்டிருக்கிறது...' என்கிறாரே, அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம்?எல்லார் ஆட்சியிலும், அவரவர் குடும்பத்தினரே மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர் என்பது தான், உண்மை நிலவரம்!    எஸ். சுந்தர், திருச்சி: அகந்தை என்று சொல்கின்றனரே... அது என்ன?தான் கூவுவதை கேட்பதற்காகவே, சூரியன் உதிக்கிறான் என்று, சேவல் நினைக்குமானால், அதையே அகந்தை என்று, சொல்கின்றனர்!    எம். வெற்றிவேல், மதுரை: ஆனந்தமாக இருக்க விரும்புகிறேன். அதற்கு, நான் என்ன செய்ய வேண்டும்?தற்பெருமையை கை விடுங்கள். அது எங்கு முடிகிறதோ, அங்கு தான் ஆனந்தம் ஆரம்பிக்கிறது!     எ. ஆதி நாராயணன், சேலம்: என் நண்பனுக்கு சகிப்புத் தன்மை இல்லையே... நான், அவனுக்கு என்ன சொல்வது?சகிப்புத்தன்மை உடையவர்கள் தான் சாதிக்கின்றனர்; சரித்திரத்தில் இடம்பெறுகின்றனர்; சகாப்தங்களை உருவாக்குகின்றனர் என, 'அட்வைஸ்' செய்யுங்கள். திருந்தி விடுவார்!* என். ஜெயம், மேல்புவனகிரி: அரசியல் அனுபவம் மிகுந்த பெரியோர் துணையின்றி, புதியவர்களைக் கொண்டே, அரசியல் களத்தில் இறங்கி இருக்கும், நடிகர் விஜய் அரசியலில் ஜொலிப்பாரா?இவர், அரசியலில் ஜொலிப்பதற்கு, எம்.ஜி.ஆரோ, ஜெயலலிதாவோ அல்ல. இவர் போலவே, அரசியலில் குதித்த மற்ற நடிகர்களின் இன்றைய கதி என்னவென்பது தான், உங்களுக்கு தெரியுமே... அதே கதி தான் இவருக்கும்!  


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !