எது சந்தோஷம்?
ஒரு காட்டில், மரத்தடி ஒன்றின் கீழ் உட்கார்ந்திருந்தார், ஞானி ஒருவர். காட்டில் மரத்தை வெட்டி, அதை விற்று பிழைத்து வந்தான், விறகு வெட்டி ஒருவன். இதை தினமும் கவனித்து கொண்டிருந்த, ஞானி, 'இதோ பாருப்பா, மரம் வெட்டறதுலயே உன் வாழ்நாளை வீணாக்காதே. இன்னும் கொஞ்ச துாரம் காட்டில் முன்னேறி சென்றால், ஒரு செம்புச் சுரங்கம் இருக்கு. அதுல ஒரு நாள் வேலை செஞ்சா, ஒரு வாரத்துக்கு உனக்கு கவலை இருக்காது. தினம் வேலை செய்ய வேண்டியிருக்காது...' என்றார். அவனுக்கு நம்பிக்கை இல்லாவிட்டாலும், போய் பார்ப்போமே என நினைத்தான். கொஞ்ச துாரம் போனதும், செம்புச் சுரங்கம் இருந்தது. அதில் வேலை செய்ய ஆரம்பிச்சான். வாரத்துல ஒருநாள் வேலை செஞ்சா போதும், குடும்பத்தையும், வருகிற விருந்தினர்களையும் நல்லா கவனிச்சு, உபசரிக்க முடிஞ்சது. மறுபடியும் அவனை கூப்பிட்டு, 'என்ன இது, இன்னமும் விபரம் புரியாம இருக்க. இன்னும் கொஞ்சம் முன்னேறி போ. அங்கே, ஒரு வெள்ளி சுரங்கம் இருக்கு. அங்கே, நீ ஒரு நாள் வேலை செஞ்சா, ஆறு மாதத்துக்கு வேலை செய்ய வேண்டிய அவசியம் இருக்காது...' என்றார், அந்த ஞானி.ஞானி சொன்னபடி அங்கிருந்த வெள்ளி சுரங்கத்தில் ஒரு நாள் வேலை செய்வான். அதை கொண்டு, ஆறு மாதத்துக்கு ஆடம்பர வாழ்க்கை நடத்தினான். மறுபடியும் வந்தவனை பார்த்து, 'இன்னும் கொஞ்சம் முன்னேறிப் போ. ஒரு தங்கச் சுரங்கம் உன் கண்ணுல படும்...' என்றார், அந்த ஞானி. ஆசை யாரை விட்டுது? அங்கேயும் போனான். கொஞ்ச நாள்ல, பெரிய பணக்காரனா ஆயிட்டான். செல்வம் நிறைய சேர்ந்தது. 'இப்படி ஒரு தங்கச் சுரங்கம் இருக்குங்கிறது தெரிஞ்சும், அந்த ஞானி, கண்ணை மூடிக்கிட்டு மரத்தடியிலே உட்கார்ந்திருக்காரே... அவர் எப்பேற்பட்ட ஏமாளியா இருக்கணும்...' என, நினைச்சான். அவரைப் போய் பார்க்கவே இல்லை. ஒருநாள், ஞானியே இவனை கூப்பிட்டார். 'என்ன இது, இப்படி இருந்துட்ட... எனக்கு வயசாகிட்டே இருக்கு. உனக்காக, இனிமேலும் காத்திருக்க முடியாது. இன்னும் கொஞ்சம் முன்னேறிப் போ, வைரச் சுரங்கத்தையே பார்க்கலாம். நீ தங்கத்தோடயே உன் நேரத்தை வீணாக்கிட்டிருக்கியே...' என்றார். அவன் போய் வைரச் சுரங்கத்தையும் கண்டுபிடிச்சான். ரொம்ப நாளா வரவே இல்லை.'உடனே வா, உன்கிட்ட கடைசி ரகசியத்தையும் சொல்ல வேண்டியிருக்கு...' என்று மரணப் படுக்கையிலே இருந்த ஞானி, சொல்லி அனுப்பினார்.'வைரத்தை விட பெரிசா என்ன இருந்துட முடியும்? இன்னும் கொஞ்சம் முன்னேறி போன்னு சொல்லப் போறீங்களா?' எனக் கேட்டான். 'ஆமாம், இன்னும் கொஞ்ச முன்னேறி போனா, அரிதான பொக்கிஷம் இருக்கு. அதைப் பார்க்கலாம். வைரச்சுரங்கம் சீக்கிரம் தீர்ந்து போயிடும்...' என்றார், ஞானி. 'இவ்வளவு துாரம் தெரிஞ்சு வெச்சிருக்கிற நீங்க, இன்னமும் ஏன் இந்த மரத்தடியிலயே உட்கார்ந்திருக்கணும்...' என்றான், அவன். 'அந்த பொக்கிஷம் எனக்குள்ள இருக்கு. அதுக்காகத் தான் உன்னை கூப்பிட்டேன்...' என்றார். அதுக்கப்புறம் ஞானி இறந்துட்டார். இவனுக்கும் வயசானது. ஞானி சொன்னது சரியா இருக்குமோன்னு அப்ப தான் தோணிச்சு. காட்டுக்குப் போய், கண்ணை மூடி உட்கார்ந்திருந்தான். ஞானம் என்ற அந்த பொக்கிஷத்தை அவன் கண்டுபிடிச்சுட்டான். பொன், பொருளைவிட, ஞானம் என்ற சந்தோஷம் மிகப்பெரியது என்பதைப் புரிந்து கொண்டான், அவன். பி. என். பி.,