குற்றம் குற்றமே! (25)
முன்கதை சுருக்கம்: 'கார்த்திகா இண்டஸ்ட்ரீஸ்' நிறுவனர் கிருஷ்ணராஜின் காணாமல் போன மகன், துப்புரவு பணியாளர் வீட்டில், சந்தோஷ் என்ற பெயரில் வளர்ந்து வந்ததையும், தற்போது திருமணமாகி இரு குழந்தைகளுக்கு தந்தையாக இருப்பதையும், கிருஷ்ணராஜிடமும், கார்த்திகாவிடமும் சொல்கிறான், தனா. இதைக் கேட்டு இருவரும் சந்தோஷம் அடைகின்றனர். மறுநாள் காலை 10:00 மணிக்கு, கிருஷ்ணராஜ் வீட்டுக்கு வருவதாகவும் கூறுகிறான், சந்தோஷ். இத்தகவலை, கிருஷ்ணராஜின் எதிராளி தாமோதரின் மகன் விவேக்கிடம் கூற, 'என்னையும், என் அப்பாவையும் போலீஸ் தேடுகிறது. எனவே, நாங்கள் இடம் மாறி சென்று கொண்டே இருப்போம். கிருஷ்ணராஜ் வீட்டில், தங்கியிருந்தபடி, நான் சொல்லியபடி செய்தால், மாதம், 5 லட்ச ரூபாய் தருகிறேன்...' என, சந்தோஷிடம் கூறுகிறான், விவேக். 'கிருஷ்ணராஜ் சொத்து முழுவதும் அடித்துக் கொண்டு, எனக்கு, 5 லட்ச ரூபாய் தானா! முதலில் இவனை போலீசில் பிடித்துக் கொடுப்பது தான் முதல் வேலை...' என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டான், சந்தோஷ். சந்தோஷ், விவேக்கோடு பேசி முடித்து, போனை முடக்கவும், எதிரில் வந்து நின்றாள், அவன் மனைவி சுமதி. ''யாருங்க... அந்த விவேக்கா?'' ''ஆமாம், அந்த கேப்மாரியே தான்.'' ''டிவி'யில செய்தி பார்த்தீங்களா?'' ''இல்லையே, என்ன செய்தி?'' ''எல்லாம் இந்த விவேக்கோட அப்பா தாமோதரன்கிறவனைப் பற்றி தான். இவங்க, உலக மகா திருடங்களாமுல்ல. எந்த வெளிநாட்டுக்கு போனாலும், அந்த நாட்டு போலீஸ் பிடிச்சுடுமாமுல்ல?'' ''ஆமாம், இவங்கள்லாமே இன்டர்நேஷனல் ஸ்மக்ளர்ஸ்.'' ''அப்படின்னா?'' ''கடத்தல் பேர் வழிங்க. கஞ்சா, அபின், சாமி சிலைன்னு இவங்க எதை வேணா கடத்துவாங்க.'' ''உங்க அப்பான்னு சொல்ற அந்த கிருஷ்ணராஜும் தானே?'' ''ஆமாம், அதனால தான் தனக்கு பிறந்த குழந்தையை துாக்கி குப்பைத் தொட்டியில் போட வெச்சான். நல்ல மனுஷனா இருந்தா செய்வானா?'' ''இப்படி ஒரு கூட்டத்தோட போய் நீங்க சேரணுமா?'' ''ஆரம்பிச்சுட்டியா... நான் எங்கடி சேர்ந்தேன். அவங்க தானே தேடி வர்றாங்க?'' ''இருந்தாலும், பயமா இருக்குதுங்க. பேசாம, நான், உங்க மகன் இல்லைங்கிற உண்மைய சொல்லிட்டு விலகிடுங்க.'' ''போடி பொச கெட்டவளே... வாழ்க்கையில், அதிர்ஷ்டம்ங்கிறது எப்பவாவது தான் வரும். அது, இப்ப வந்திருக்கு. நானும் சும்மா விடப் போறதில்லை. அந்த பங்களாவுக்கு போய் சொத்தெல்லாம் எனக்கு வந்த மறு நிமிஷம், இந்த விவேக்கை போட்டுத் தள்ளிடுவேன். நீ, அநாவசியமா பயப்படாத.'' ''ஆள் மாறாட்டம் பெரிய தப்பு. இதுல கொலை வேறயா? போலீஸ் உங்களை மட்டும் சும்மா விட்டுடுமா?'' ''இவங்க விஷயம் எதுலையும் போலீஸ் வராது. இந்த விவேக் செத்துட்டான்னு தெரிஞ்சாலும், இவங்க கூட்டத்துல யாரோ கொன்னுட்டாங்கன்னு தான் நினைப்பாங்க.''அதெல்லாம் நான் பார்த்துக்கிறேன். நீ கொஞ்சம் வாயை மூடிக்கிட்டு இரு. ஒரு, 'டூ வீலர்' மெக்கானிக், கோடீஸ்வரனாகப் போறேன்டி. அதை நினைச்சு சந்தோஷப்படு,'' என்று, திமிராக பேசிவிட்டு, மளமளவென்று முகத்துக்கான ஷேவிங்கை துவங்கினான், சந்தோஷ். கிருஷ்ணராஜின் பங்களாவில், வாழை மரம், மாவிலைத் தோரணங்களின் அலங்காரங்கள் நடந்து கொண்டிருந்தன. மேற்பார்வை செய்தபடி இருந்தாள், கார்த்திகா. ஒரு தட்டில் ஆரத்தி கரைத்து வைத்திருந்தாள். ஸ்பீக்கரில், 'மைல்'டாக, நாதஸ்வரம் ஒலித்துக் கொண்டிருந்தது.சந்தோஷை அழைத்து வர கிருஷ்ணராஜின், பி.எம்.டபிள்யூ., கார் தயாராக இருந்தது. அது, இனிமேல் சந்தோஷுக்குத் தான். அய்யர் நேரம் பார்த்துக் கொடுத்திருந்தார். அந்நேரத்தில், சந்தோஷை அழைத்து வர, குமாரும், தனாவும் புறப்பட்டனர். உற்சாகமாக அனுப்பி வைத்தாள், கார்த்திகா. கார் விலகவும், கிருஷ்ணராஜின் அறைக்கு வந்து, ''அப்பா, அண்ணனைக் கூட்டிக்கிட்டு வர, கார் கிளம்பிடிச்சு,'' என்றாள், கார்த்திகா. ''நானும், 'டென்ஷன்'ல தான்மா இருக்கேன். அன்னைக்கு அலட்சியமா துரத்தியடிச்சேன். இன்னைக்கு, ஆரத்தி எடுத்து வரவேற்கப் போறேன். என் வாழ்க்கையில தான் எவ்வளவு விசித்திரங்கள்?'' ''தப்பு செய்யிறத விட பெருசு, அதை துணிஞ்சு திருத்திக்கறது தான். அது உங்ககிட்ட இருக்கேப்பா.'' ''என்னை பாராட்டாதம்மா, நான் குற்றவாளி. ஏதோ இப்ப தான் கொஞ்சம் மனுஷனாகி இருக்கேன்.'' ''மனுஷனா மட்டுமில்லப்பா, நீங்க தேவனாவே ஆயிட்டீங்க.'' ''ஆமா, நம்ப வக்கீலை வரச்சொல்லி இருந்தேனே வந்துட்டாரா?'' ''வந்துக்கிட்டே இருக்கேன்னு போன் பண்ணினார்,'' என்றாள்.''அப்புறம்மா... தனஞ்ஜெயன் குடும்பத்துக்கும், நாம எதாவது செய்யணும். நீ என்ன சொல்ற?'' என்றார்.''இதுல சொல்ல என்னப்பா இருக்கு. தனான்னு ஒருத்தர் மட்டும் வரலேன்னா, இப்ப இங்க எந்த நல்லதும் நடந்திருக்காது. அவரை நம்ப, 'ஜாய்ன்ட்' டைரக்டரா ஆக்கி, 'ஷேர்' கொடுத்துருவோம். அந்தஸ்த்தாவும் இருக்கும்; நாம் நன்றியை காட்டின மாதிரியும் இருக்கும்.'' ''நான் நினைச்சதையே நீயும் நினைச்சுருக்க.'' கிருஷ்ணராஜும், கார்த்திகாவும் சந்தோஷமாக பேசிக் கொள்ள, தனாவும், குமாரும் காரில் ஏறி, சந்தோஷின் மிக எளிமையான ஆஸ்பெஸ்டாஸ் கூரை வீட்டை அடைந்திருந்தனர்.இருப்பதில் சற்று, 'பளிச்'சென்று இருக்கும், 'பேன்ட், ஷர்ட்' அணிந்து, தலை வாரி, சந்தனப் பொட்டு வைத்திருந்தான், சந்தோஷ். அவன் மனைவி சுமதியும், தன் இரு குழந்தைகளோடு, 'பளிச்'சென்று தயாராக இருந்தாள். கார் வரவும், வீட்டுக் கதவை பூட்டிக் கொண்டு கிளம்பவும், அக்கம் பக்கத்தில் உள்ளோர் ஆச்சரியமாகப் பார்த்தனர். அது, சுமதிக்கு என்னவோ போல் இருந்தது. ''ஏங்க, எல்லாரும் பார்க்கிறாங்க.'' ''நல்லா பார்க்கட்டும். அதனால என்ன இப்போ?'' ''கண்ணு விழுந்திருமோன்னு பயமா இருக்குதுங்க.'' காருக்குள் ஏறி அமர்ந்த நிலையில், ''பேசாம வாடி... கண்ணு, காது, மூக்குன்னுகிட்டு. நீ, இனிமேட்டு கோடீஸ்வரன் பொண்டாட்டி. அதுக்கு தகுந்த மாதிரி நடந்துக்க,'' என்று, மனைவியை அதட்டி அடக்கினான், சந்தோஷ். தனாவையும் அலட்சியமாக பார்த்தான். தனா, அவனை பார்க்கவும், அளவாக சிரித்தான். காரும் கிளம்பியது. ''ஆமா, உங்க பேர் என்னன்னு சொன்னீங்க?'' ''தனஞ்ஜெயன், சந்தோஷ்.''''சந்தோஷா... சார்ன்னு மரியாதையா கூப்பிடு. ஆமா, நீ எங்க அப்பாவுக்கு செகரட்ரி தானே?'' என்று சந்தோஷ் கேட்ட விதமும், தோரணையும் துாள் பறந்தது. ''எஸ் சார்.'' ''எனக்கு ஒரு தங்கச்சி இருக்குன்னு சொன்னேல்ல?'' ''ஆமாம் சார்.'' ''அவ அம்மா இருக்காளா, இல்லை அவளையும் எங்கப்பா அடிச்சு துரத்திட்டாரா?'' ''அதெல்லாம் இல்லை சார். அவங்க, 'ஹார்ட் அட்டாக்'ல இறந்துட்டதா சார் சொன்னார்.''''போனா போகுதுன்னு தான், நான் இப்ப வரேன். நிஜத்துல எனக்கு கொஞ்சம் கூட விருப்பமே இல்லை. அப்பா யாருன்னு தெரியாம, அம்மா யாருன்னும் தெரியாம வாழ்ந்த என் கஷ்டம், இந்த உலகத்துல யாருக்குமே வரக்கூடாது,'' என்று சொல்லி, மிகவும் அலட்டிக் கொண்டான், சந்தோஷ். அப்போது, அவன் மொபைல் போனில், விவேக்கிடமிருந்து அழைப்பு. ''சந்தோஷ், என்ன பண்ணிக்கிட்டிருக்க?'' ''சார்... அது... என் அப்பாவை பார்க்க போய்கிட்டு இருக்கேன்,'' கிசு கிசு குரலில், முகத்தை திருப்பிக் கொண்டு சொன்னான். ''உங்கப்பன் தான் செத்து பல வருஷமாச்சே... இது, 'டூப்' அப்பன். என்கிட்டயேவா?'' ''சார்... கார்ல, தனஞ்ஜெயன் இருக்கான். அப்புறமா பேசட்டுமா?'' ''சரி சரி... உன்னை வரவேற்க, தடபுடலா ஏற்பாடெல்லாம் செஞ்சுருக்காங்களாம். என் காதுக்கு செய்தி வந்தது. 'ஆச்சுவலா' அந்த கார்த்திகாவை கல்யாணம் பண்ணிகிட்டு, நான் அனுபவிக்க வேண்டிய சொத்து, இப்ப, என்னால உனக்கு வரப்போகுது.'' ''எனக்கு வந்தாலும், உங்களுக்கு வந்தாலும், ரெண்டும் ஒண்ணுதானே சார்...'' ''இப்படி பேசி, நீ எனக்கு சமமாக பார்க்கறியா? நீ என்கிட்ட சம்பளம் வாங்கப் போற வேலைக்காரன்; அதை மறந்துடாத.'' ''மறக்க மாட்டேன் சார். அந்த தனா பார்க்கிறான். நான் போனை வெச்சுடறேன் சார்,'' போனை வேகமாக, 'கட்' செய்தான், சந்தோஷ்.சந்தோஷின் கிசுகிசு பேச்சும், செயலும், குமாருக்குள் நெருடலைத் தந்திருந்தது. அப்படியே, தனாவைப் பார்த்தான், குமார். தனா முகத்திலும் சலனங்கள். பங்களாவின் மெயின் கேட்டை கடந்து, உள் நுழைந்து நின்றது, கார். ஓடி வந்து கதவைத் திறந்தான், யூனிபார்ம் அணிந்த வேலைக்காரன். கையில் ஆரத்தி தட்டோடு, சமையல்கார சாரதா மாமியோடு தயாராக இருந்தாள், கார்த்திகா. காரிலிருந்து இறங்கிய சந்தோஷ், சுமதி மற்றும் அவர்களின் இரு குழந்தைகளையும் கண்கள் விரிய பார்த்தாள். பதிலுக்கு அவர்களும், பக்கத்தில் வளப்பமாய் வளர்ந்திருந்த விசிறி வாழையை, பிரமாண்ட அந்த பங்களா முகப்பை, அகண்ட விழிகளோடு பார்த்தனர். தனா, அவர்களை சைகையில் நடக்கச் சொல்ல, ஓடி வந்து ஆரத்தி எடுத்தாள், சாரதா மாமி. கண்களில் கண்ணீர் ததும்ப பார்த்தபடியே இருந்தாள், கார்த்திகா. தனா, அவளை அறிமுகப்படுத்த துவங்கினான். ''சார், இவங்க தான் உங்க சிஸ்டர் கார்த்திகா...'' என்றதும், பதிலுக்கு ஒரு மாதிரி பார்த்தான், சந்தோஷ். ''அம்மாடி நல்லா இருக்கியா?'' என்று பரவசத்தோடு கேட்டு, அவள் கைகளை பற்றினாள், சுமதி. ''இருக்கேன் அண்ணி... நீங்க?'' ''இருக்கேன்மா. ஏங்க, வாயைத் திறந்து பேசுங்க. உங்க தங்கச்சிங்க,'' என்று துாண்டிவிட்டாள். பதிலுக்கு சந்தோஷும், ''நீ தான் கார்த்திகாவா?'' என்று, இறுக்கமான குரலில் கேட்டான். ''ஆமாண்ணே... வாங்க, உள்ளே போவோம். அப்பா துடிச்சுக்கிட்டிருக்காரு.'' ''ஏன், அவர் வெளிய வந்து வரவேற்க மாட்டாராமா?'' ''அண்ணே... அவரால எழுந்து நடக்க முடியாது.'' ''ஓ... அதான் கடைசி காலத்துல புத்தி வந்திருக்காட்டம்,'' சடைத்தான், சந்தோஷ். ''ஏங்க, பேசாம வாங்க. என்னமோ நிஜப் பிள்ளைங்க மாதிரியே புலம்பறீங்களே,'' அவன் காதோரமாக கிசுகிசுத்தாள், சந்தோஷின் மனைவி சுமதி. பற்களை நரநரவென்று கடித்தபடி, ''தெரியும்டி, நீ முதல்ல பேறசாம இரு...'' என்றான்.கிருஷ்ணராஜின் அறை வந்தது. ஒரே மருந்து வாசம். எல்லாரும் வரவும், அங்கிருந்த நர்ஸ் ஒதுங்கிக் கொண்டாள். சந்தோஷை கண்களில் கண்ணீர் மினுங்கப் பார்த்தார், கிருஷ்ணராஜ். ''அப்பா, அண்ணன் வந்துருக்குப்பா...அண்ணே, இதான் நம் அப்பா...'' என்றாள், கார்த்திகா.சுமதிக்கு, அவரின் அந்த படுக்கை கோலம் நெஞ்சைப் பிசைந்தது. ஒரு கையில், 'சலைன் வாட்டர்' இறங்கியபடி இருக்க, முகத்தில் மூக்கை மூடியிருக்கும் ஆக்சிஜன் மாஸ்க்.வேண்டுமென்றே மவுனமாக அவரை முறைத்துப் பார்த்தான், சந்தோஷ். ''உன் பார்வைக்கு, எனக்கு அர்த்தம் புரியுதுப்பா. என்னை முதல்ல மன்னிச்சுடுப்பா,'' என்று தழுதழுத்தார், கிருஷ்ணராஜ். அப்போது, அவரின் பங்களா வாசலில், போலீஸ் கார் ஒன்றின் பிரவேசம். காருக்குள், 'ஸ்பெஷல் இன்வெஸ்டிகேஷன்' ஆபீசர், சந்திரமோகன் ஐ.பி.எஸ்., — தொடரும்.- இந்திரா சவுந்தர்ராஜன்