உள்ளூர் செய்திகள்

பிரிகேடியர் முத்துலட்சுமி!

கடந்த, 1965ல் இந்தியா - பாக்., போர், உக்கிரமாக நடந்து கொண்டிருந்தது. பஞ்சாப் மாநிலம், வாகா எல்லையில் இருந்த ராணுவ மருத்துவமனையில், குண்டடிபட்ட ராணுவ வீரர்களை கொண்டு வந்து சேர்த்தபடி இருந்தனர். அவர்களை ஓடி ஓடிக் கவனித்துக் கொண்டிருந்த நர்ஸ்களில் ஒருவர், முத்துலட்சுமி.இரவு - பகல் பாராது, உணவு, தண்ணீர் கேளாது, வீரர்களை குணப்படுத்தும் பணியில் தன்னை முழுமையாக அர்ப்பணித்த அவரது சேவையைப் பாராட்டி, அவரின் சொந்த ஊரில், 3 ஏக்கர் நிலம் வழங்கியது, அரசு.அந்த 3 ஏக்கர் நிலத்தையும், முதியோர் இல்லம் கட்ட, தானமாக வழங்கி, இன்றைக்கும் சமூகப் பணியாற்றிக் கொண்டிருக்கிறார், 86 வயதாகும், பிரிகேடியர் முத்துலட்சுமி.கடந்த, 1938ல், திருநெல்வேலி மாவட்டம் கரிசல்குளத்தில் பிறந்தார். மருத்துவம் சார்ந்த துறைகளில் இருப்பவர்கள், ராணுவத்தில் பணியாற்ற முன்வர வேண்டும் என்ற, அப்போதைய பிரதமர் நேருவின் அழைப்பை ஏற்று, நர்சிங் படித்திருந்த, முத்துலட்சுமி, ராணுவத்தில் சேர்ந்தார்.பாக்., - பங்களாதேஷ் உள்ளிட்ட பல்வேறு போர்கள் நடந்தபோது, போர் முனையிலிருந்து பணியாற்றியவர். பணியில் இருக்கும்போதே அனுமதி பெற்று, சட்டம் படித்தார்.கிட்டத்தட்ட, 34 ஆண்டு ராணுவ சேவைக்கு பின், பணி ஓய்வு பெற்றதும், வீட்டில் முடங்கிக் கிடக்காமல், வழக்கறிஞராக பணியை தொடர்கிறார். ராணுவ வீரர்கள் தொடர்பான வழக்குகளில் நீதி பெற, நீதிமன்றம் சென்று வருகிறார்.ராணுவத்தில் லெப்டினென்ட், கேப்டன், மேஜர், கர்னல், பிரிகேடியர், மேஜர் ஜெனரல் வரை பதவி உண்டு. இதில், பிரிகேடியர் வரையிலான பதவி வகித்து, அந்த பட்டத்துடன் வலம் வந்து, ராணுவத்தின் பெருமையை, இளைஞர்களுக்கு, குறிப்பாக, பெண்களிடம் எடுத்துச் சொல்லி வருகிறார்.மகன்கள், வெளிநாடுகளில் பெரிய வேலையில், நிறைய சம்பாதிக்கின்றனர். இருப்பினும், அன்றாடம், யாருக்காவது உதவ வேண்டும் என்பதற்காக, சுறுசுறுப்பாக ஓடிக்கொண்டிருக்கிறார்.'அதிகம் ஆசைப்படாதீர்கள், யாரைப் பார்த்தும் பொறாமைப்படாதீர்கள், எதற்கும் பதற்றப்படாதீர்கள். வாழ்க்கையை எளிமையாக, அதேநேரம், வலிமையாக எதிர்கொள்ளுங்கள். வயது என்பது முதுமையின் அடையாளம் அல்ல; அது ஒரு எண் அவ்வளவு தான்...' என்கிறார்.இவரைப் பற்றி கேள்விப்பட்ட, தமிழக கவர்னர் ரவி, கவர்னர் மாளிகைக்கு, இவரை வரவழைத்து, பாராட்டி கவுரவித்தார்.அவரது மின் அஞ்சல் முகவரி: brigkml@yahoo.comஎல். முருகராஜ்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !