உள்ளூர் செய்திகள்

இன்னொரு ரகசியம்!

சிதம்பரம் நடராஜர் கோவில் என்றாலே, சிதம்பர ரகசியம் பற்றி தான் பேசுவர். இங்கே, இன்னொரு ரகசியமும் இருக்கிறது.பொதுவாக, வீட்டை விட்டு வெளியே கிளம்பிய ஒருவரை, திரும்ப அழைக்கக் கூடாது என்று கூறுவர். அதற்கு காரணமாக இருப்பதும் இந்த ஊர் தான்.சிதம்பரத்தில், சிவன், ஆனந்த தாண்டவம் ஆட இருந்தார். தேவலோகமே திரண்டிருந்தது. அப்போது, சிவன் கண்ணில் சனீஸ்வரர் பட்டு விட்டார். 'சனி... நீ, ஏன் இங்கு நிற்கிறாய். நான் நடனமாடும் போது, நீயும் என்னைப் பார்ப்பாய் இல்லையா? அது நல்லதல்ல. கிளம்பு, கிளம்பு...' என, சொல்லி விட்டார். சனீஸ்வரனுக்கு ஏக வருத்தம். ஆனாலும், சிவன் உத்தரவிட்ட பின் என்ன செய்வது? போய் விட்டார்.இதன் பின் மீண்டும் ஒருநாள், சனியைச் சந்தித்தார், சிவன்.'சனி, நான் கைலாயத்தில் குடியிருக்கப் போகிறேன். எனக்கென்று மாளிகையோ, ஏன், சிறு குடில் கூட அங்கு தேவையில்லை. யாராவது, எனக்காக, இங்கு வீடு கட்டினால், நீ தாராளமாக இடித்து விடு...' என்றார். சனீஸ்வரனும் தலையாட்டினார். இதன் பின், இமவான் மகள் பார்வதிக்கும், சிவனுக்கும் திருமணம் நடந்தது. தான், கணவருடன் தனித்திருக்க ஒரு வீடு கூட இல்லையே என வருத்தப்பட்டாள், பார்வதி.ஒருமுறை, உலகுக்கு படியளக்க, சிவன் சென்றிருந்த போது, தேவதச்சன் மயன் என்பவரை அழைத்த பார்வதி, ஒரு மாளிகையை உருவாக்க கட்டளையிட்டாள். மாளிகை தயாரானது.திரும்பி வந்த சிவன், பார்வதியிடம், தனக்கும், சனிக்கும் உள்ள ஒப்பந்தத்தை தெரிவித்தார்.'சரி... நீங்கள், சனியை சந்தியுங்கள். என் மனைவி அறியாமல் மாளிகை கட்டி விட்டாள். இருந்து விட்டு போகட்டுமே என, சிபாரிசு செய்யுங்கள்...' என்றார், பார்வதி.சிவனும் கிளம்பி வாசலுக்கு வந்து விட்டார். கிளம்பியவரை மீண்டும் அழைத்த பார்வதி, 'ஒருவேளை, இதற்கு, சனி சம்மதிக்கவில்லை என்றால், நீங்கள், உங்கள் உடுக்கையை அடியுங்கள். அதன் ஒலி கேட்டதும், நான் இதை இடித்து விடுகிறேன்...' என்றாள். அதாவது, வெளியே கிளம்பிய சிவனை, திரும்பவும் அழைத்து விட்டாள், பார்வதி.சனியை சந்தித்து விபரம் சொன்னார், சிவன்.'அறியாமல் செய்தது தானே, இருந்து விட்டு போகட்டும்...' என்றார்.'சனி, இதற்கு கைமாறாக, ஏதாவது கேள் தருகிறேன்...' என்றார், சிவன்.'பகவானே... நீங்கள், எனக்கு சிதம்பரத்தில் மறுத்த ஆனந்த தாண்டவத்தை, இங்கே ஆட வேண்டும். நான் ரசிக்க வேண்டும்...' என்றார், சனி.'நான் வாத்தியங்களுடன் வரவில்லையே. எப்படி நடனமாடுவது...' என்றார், சிவன்.'அது தான் உங்கள் கையில் உடுக்கை இருக்கிறதே... அதை அடித்து ஆடுங்கள். அது போதும்...' என்றார், சனி.பிறகென்ன நடந்திருக்கும்... சிவன் உடுக்கையை அடித்து ஆட, அரண்மனையை இடித்து விட்டாள், பார்வதி.சனியும், கடமை தவறவில்லை. சிவனும், வாக்கைக் காப்பாற்றினார். அத்துடன், 'நடராஜ தரிசனம் காண்பவர்களை, என் தோஷம் ஏதும் செய்யாது...' என அருளினார், சனி. வெளியே கிளம்பியவர்களை மீண்டும் அழைக்கக் கூடாது என்ற பழக்கம், இதன் பிறகு தான் உருவானது. இப்படியும் ஒரு வித்தியாசமான சிதம்பர ரகசியம். தி. செல்லப்பா


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !