உள்ளூர் செய்திகள்

அன்புடன் அந்தரங்கம்!

அன்புள்ள அம்மாவுக்கு —நான், 26 வயது பெண். பெற்றோருக்கு ஒரே பெண். ஐ.டி., நிறுவனத்தில் பணிபுரிந்தேன். 'புரொபஷன் பீரியட்' முடிந்து, வேலை நிரந்தரம் ஆகும் சமயத்தில், திருமணம் முடிவானது. மாப்பிள்ளை வெளியூரில் பணிபுரிவதால், திருமணத்துக்கு பின் கணவர் வீட்டுக்கு செல்ல வேண்டுமே என்று, வேலையை ராஜினாமா செய்தேன்.திருமணத்தை சிறப்பாக நடத்தினர், என் பெற்றோர். திருமணத்துக்கு பின், என்னை, சிறிது நாட்கள் பெற்றோர் வீட்டிலேயே தங்கியிருக்க சொன்னார், கணவர். காரணம் கேட்டதற்கு, வீட்டில் கட்டுமான பணிகள் நடந்து வருகிறது. அது முடிந்த பின், அழைத்துச் செல்வதாக கூறி சென்றார்.கணவருடன் பிறந்தவர்கள் இரு தம்பிகள். அவர்கள், சென்னையில் தான் ஹாஸ்டலில் தங்கி படித்து வந்தனர்.நாட்கள் ஓடியதே தவிர, என்னை தன்னுடன் அழைத்துச் செல்வதாக தெரியவில்லை. என் பெற்றோர் வற்புறுத்திய பின்னர், தான் வேலை பார்த்த அலுவலகம் அருகில், ஒரு வாடகை வீடு பார்த்து என்னை அழைத்துச் சென்றார். அங்கு சென்ற சிறிது நாட்களிலேயே, அவர் ஆண்மையற்றவர் என்று தெரிந்து விட்டது.வீட்டுக்கு இவர் தான் மூத்த பிள்ளை. இவருக்கு திருமணமானால் தான், தம்பிகளுக்கு, 'லைன் கிளீயர்' ஆகும் என்று, என்னை ஏமாற்றி, திருமணம் செய்திருக்கிறார்.இதைவிட கொடுமை, கணவரின் அப்பாவுக்கு, உடல்நலம் சரியில்லாததால், அவர் இறப்பதற்குள் பேரனையோ, பேத்தியையோ பார்த்துவிட வேண்டும் என்று, ஏதேதோ லேகியம் வாங்கி சாப்பிடுவதும், ஆபாச படங்கள் பார்த்துவிட்டு, படுக்கைக்கு வருவதுமாக இருந்தார்.தன் இயலாமையை மறைக்க, என்னை கொடுமைப்படுத்தவும் ஆரம்பித்தார். எதுவும் செய்ய முடியாத நிலையில், செயற்கை கருத்தரிப்பு செய்து கொள்ள வற்புறுத்தினார். இதற்கு நான் ஒப்புக்கொள்ளாததால், கொடுமை அதிகமானது.தன் உறவினர்களிடம், என்னை நோயாளி போல சித்தரிப்பார். என்னை பிடிக்காமல் தான், யாருடைய வற்புறுத்தலால் திருமணம் செய்திருக்கிறாள். இவளுக்கு வேறு யாருடனோ தொடர்பு இருக்கிறது என்றெல்லாம் கூறி, பழி சுமத்தினார்.வெளியில் எங்கும் அழைத்துச் செல்லாதது, என் மொபைல் போனை எடுத்து ஆராய்வது, பெற்றோரை பார்க்க அனுமதிக்காதது, வீட்டுக் காவலில் வைத்திருப்பது என, 'டார்ச்சர்' செய்ய ஆரம்பித்தார்.உயிருக்கு ஆபத்து வந்து விடுமோ என்று பயந்து, அவர் இல்லாதபோது, எப்படியோ தப்பித்து, ஊர் வந்து பெற்றோரிடம் அடைக்கலமானேன். நடந்த அனைத்தையும் கூற, பெற்றோர் மிகவும் வேதனைப்பட்டனர்.எங்கள் திருமணத்தை முன்னின்று நடத்திய உறவினர் ஒருவரை அழைத்து விசாரிக்க, எதையெதையோ கூறி மழுப்பி விட்டார். கணவரது பெற்றோரிடம் விசாரிக்க சென்ற, என் பெற்றோரை அவமானப்படுத்தி அனுப்பி விட்டார்.ஏதும் செய்ய இயலாத நிலையில், ஒருநாள், கணவன் வேலைக்கு சென்ற பின், அவர் வீட்டுக்கு சென்று, எனக்கு கொடுத்த சீர் வரிசை மற்றும் தங்க நகைகளை எப்படியோ கொண்டு வந்து விட்டனர், என் பெற்றோர்.யாரும் இல்லாத நேரத்தில், பூட்டை உடைத்து, பொருட்களை திருடி சென்று விட்டதாக, போலீசில் புகார் கொடுப்போம் என்று மிரட்டுகின்றனர். 'நீங்கள், போலீசுக்கு சென்றால், நாங்களும் செல்வோம்...' என்று என் பெற்றோர் மிரட்டியதும், அமைதியாகி விட்டனர்.மன வருத்தத்தில் இருக்கும் என் பெற்றோரை எப்படி சமாதானப்படுத்துவது என்று தெரியவில்லை. இருந்த வேலையையும் விட்டு விட்டு, அடுத்து என்ன செய்வது என்ற குழப்பத்திலிருக்கும், எனக்கு நல்ல ஆலோசனை தாருங்கள் அம்மா!— இப்படிக்கு,உங்கள் மகள்.அன்பு மகளுக்கு —வேலைக்கு செல்லும் பெண்களுக்கு, வரன் பார்க்கும்போது கீழ்க்கண்ட விஷயங்களை மனதில் கொள்ள வேண்டும்.* மணமகன், மணமகள் பணி இடங்கள், இருவரும் குடும்பம் நடத்தப் போகும் வசிப்பிடத்துக்கு அருகாமையில் அமைந்திருக்கிறதா?* மணமகளின் பணியும், மணமகனின் பணியும் ஒன்றோடொன்று முட்டிக்கொள்ளாமல் ஒத்துப் போகுமா? வரன் ஆணாதிக்க குரங்கா அல்லது சுயத்துடன் மனைவியும் சம்பாதிக்கட்டும் என்ற சாமர்த்தியனா?* மணமகன் மற்றும் மணமகள் வீட்டாரின் நடத்தை மற்றும் அவர்களது குடும்பப் பின்னணியை முழுமையாக உளவறிய வேண்டும். இந்த உளவு வேலைக்காக தனியார்களை அமர்த்துதல் பொருத்தமானது.இனி, நீ செய்ய வேண்டியவைகளை பார்ப்போம்:* பணி செய்த அலுவலகத்தை மீண்டும் தொடர்பு கொண்டு பணியில் சேர பார். கிடைக்கா விட்டால் வேறு பணியிடங்களை தொடர்பு கொண்டு, எதாவது ஒரு வேலையில் சேர்ந்து விடு.* கணவர் ஆண்மையற்றவர் என குறிப்பிட்டு, குடும்ப நீதிமன்றத்தில் மனு கொடுத்து முறைப்படி விவாகரத்து பெறு.* வேலை பார்த்துக் கொண்டே தொடர்ந்து படிக்க முடியும் என்றால் படி.* அதிகமாக சாப்பிட்டோ, குறைத்து சாப்பிட்டோ உடலை கெடுத்துக் கொள்ளாதே. சிறுசிறு உடற்பயிற்சிகள் செய்து, உடலை கச்சிதமாக வை.* மீண்டும் வரன் பார்க்கும்போது, முழு உடல் மற்றும் ரத்த பரிசோதனை அறிக்கைகளை பரஸ்பரம் பகிர்ந்து கொண்டால் தான் திருமணம் என, நிபந்தனை விதி.இனி வரும் காலங்களில், ஜாதக பொருத்தம் பார்ப்பது போல, உடல் பொருத்தம், ரத்த பொருத்தம், ஆண்மை, -பெண்மை பொருத்தம் பார்க்கும் கட்டாயம் வர வேண்டும்.ஒரு பொருளை உற்பத்தி செய்யும் போது, பல தரக்கட்டுபாடுகளை பின்பற்றுவது போல, வரன் பார்க்கும் போது, பல வடிகட்டும் உத்திகளை கடைப்பிடித்து, திருமணங்களை வெற்றிகரமானதாக ஆக்குவோம்.— என்றென்றும் தாய்மையுடன், சகுந்தலா கோபிநாத்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !