உள்ளூர் செய்திகள்

அந்துமணி பா.கே.ப.,

கேஅன்று காலை... அலுவலகத்தினுள் நுழைந்ததுமே, 'டெலிபோன் ஆபரேட்டர்' வழிமறித்தார். 'மணி... உன்னோட தீவிர வாசகர் ஒருவர், உன்னோடு பேசணும்ன்னு பலமுறை, போன் செய்துவிட்டார். அவரது, மொபைல் எண்ணை வாங்கி வைத்துள்ளேன். போன் போட்டு தரவா...' என்றார். 'சரி...' என்று கூறி, என் கேபினுக்கு சென்று அமர்ந்தேன். வாசகரின் போன் வர, என்னை, குறுகுறுவென்று பார்த்துக் கொண்டிருந்த, லென்ஸ் மாமா, 'ஸ்பீக்கரில் போடுப்பா. என்ன சொல்றார்ன்னு கேட்போம்...' என்றார். பேச ஆரம்பித்தேன்... 'யாரு... அந்துமணியா? உங்க, நீண்ட நாள் வாசகர்களை இப்படி ஏமாற்றலாமா? உம் மனசுல என்னதான் நினைச்சுட்டு இருக்கிறீர்?' என்றார், அதிரடியாக. நான் பதறி, 'நீங்க சொல்றது ஒண்ணும் புரியலையே...' என்றேன். 'வாரமலர் இதழ்ல, பா.கே.ப., பகுதியில் நிறைய விஷயங்கள் எழுதுகிறீர்; நல்லாவும் இருக்கு. ஆனால், அப்பக்கத்தில் வெளியாகும் புகைப்படங்கள் தான், எங்களுக்கு மண்டை குடைச்சல் தருது. 'புகைப்படத்துக்கும், மேட்டருக்கும் சம்பந்தமே இல்லையே! அதில் உங்களுடன் இருப்பவர்கள் யார் என்ற விபரம் போட வேண்டாமா?'ஆனால், எல்லாருக்கும் தெரிஞ்ச சில, 'மூஞ்சி'களை வெளியிடும்போது மட்டும், பட விளக்கம் வருகிறது. மற்றவர்களுக்கும் பட விளக்கம் கொடுத்தால் என்ன? அந்துமணியுடன் இருக்கும் அந்த அதிர்ஷ்டக்காரர்கள் யார் என்று, நாங்களும் தெரிந்து கொள்ள வேண்டாமா!'அதுமட்டுமல்லாமல், டீ கப், முக கவசம் வேற நீர் போட்டுக்கிறிங்க. உம்மோட, 'ஒரிஜினல்' முகத்தை பார்க்க, நாங்களும் பல வருஷமா ஏங்கிக்கிட்டு இருக்கிறோம். இனிமேலாவது, வாரா வாரம் பட விளக்கத்தையும், வருஷத்துக்கு ஒரு முறையாவது, உம், 'ஒரிஜினல்' முகத்தை வெளியிடுங்கள்...' என்று காட்டமாக பொரிந்து தள்ளினார். இவ்வளவையும் கேட்டுக் கொண்டிருந்த, லென்ஸ் மாமா, 'மாட்டிக்கினியா?' என்பது போல் பார்த்து, நக்கலாக சிரித்தார். இவர் மட்டுமல்ல, இவரைப் போன்ற பல வாசகர்கள், இதே கேள்வியை என்னிடம் கேட்டுள்ளனர். வாசகருக்கு அளித்த பதிலை அப்படியே கொடுத்துள்ளேன்: மேட்டர் எழுதுவதோடு என் பணி முடிந்தது. பா.கே.ப., பக்கத்தில், என்ன புகைப்படம் வெளியிட வேண்டும் என்று, முடிவு செய்வது, பொறுப்பாசிரியர் தான். படத்தில், என்னுடன் இருப்பவர்களில் பெரும்பாலோர், ஆசிரியரை சந்திக்க வருபவர்கள். அவரை சந்தித்த பின், போனால் போகிறது என்று, என்னுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துக் கொள்வதுண்டு. ஆசிரியரும், பெரிய மனது பண்ணி, அந்த புகைப்படத்தை வெளியிட செய்வார். அதற்கு, பட விளக்கம் கொடுப்பதும், கொடுக்காததும், ஆசிரியர் முடிவு. நீங்கள் கவனித்துப் பார்த்தால், பல வாரங்கள், நான் மட்டும் தனியாக இருக்கும் படங்கள் தான் வெளியாகும். மேலும், ஆசிரியரை சந்திக்க வருபவர்கள், தங்களைப் பற்றி விபரம் வெளியாவதில் விருப்பம் இல்லாமல் இருக்கலாம். இதிலெல்லாம் நான் தலையிடுவதில்லை. என்னை, எனக்காக, மட்டும் பார்க்க வரும் அந்த சில, 'மூஞ்சி'களுடன் இருக்கும் புகைப்படங்களுக்கு, நான் பட விளக்கம் கொடுத்து விடுவேன். அடுத்து, முக கவசத்துடன் உள்ள புகைப்படம் தான் வெளியாக வேண்டும் என்று ஆரம்பத்திலேயே எடுக்கப்பட்ட முடிவு. காரணம், என்னை அடையாளப்படுத்திக் கொண்டால், பொது இடங்களில், சுதந்திரமாக சென்று, பல விஷயங்களை சேகரித்து, உங்களுடன் பகிர்ந்து கொள்ள முடியாமல் போய் விடக்கூடும். மக்களோடு மக்களாக பழக விரும்புகிறேன். என்னை, வி.ஐ.பி., வளையத்துக்குள் சிறைப்படுத்தி, தனிமைப்படுத்தி கொள்வதில் எனக்கு விருப்பமில்லை. - இப்படி நான் கூறியதும், வாசகரும் புரிந்து கொண்டு, 'எங்கள் ஊருக்கு வந்தால், என் வீட்டுக்கு அவசியம் வர வேண்டும்...' என்று அன்பு கட்டளை இட்டார். அழைப்பை ஏற்று, அவரது வீட்டு விலாசத்தை பெற்றுக் கொண்டேன். வாசகர்கள் எதிர்பாராத நேரத்தில், அவர்கள் முன் சென்று, இன்ப அதிர்ச்சி கொடுக்க வேண்டாமா! பட விளக்கம் கேட்கும் வாசகர்களே... இப்போது புரிந்து கொண்டிருப்பீர்கள்தானே! சின்ன குழந்தைகள், விரல் சூப்பும், நகம் கடிக்கும். இதுக்கு, என்ன காரணம் தெரியுமா? 'குழந்தைகள் மனசுல ஏற்படக் கூடிய ஒருவித பாதுகாப்பின்மை அல்லது தான் சரியா கவனிக்கப்படறதில்லைங்கிற எண்ணத்தின் வெளிப்பாடு தான் இது...' என்கின்றனர், டாக்டர்கள். சில இடங்களில், இரண்டாவது குழந்தை பிறந்தவுடன், பெற்றவர்கள் கவனம், முதல் குழந்தையிடம் இருந்து கொஞ்சம் விலகி, இரண்டாவது குழந்தையிடம் போகும். அந்த சமயத்தில் முதல் குழந்தைக்கு, இந்தப் பழக்கம் ஏற்படறதுக்கு வாய்ப்பு உண்டு. சில குடும்பங்களில், கணவன் - மனைவி இருவருமே வேலைக்குப் போறவங்களா இருப்பாங்க. ரொம்ப நேரத்துக்கு, பெற்றவர்களை பிரிஞ்சு இருக்க வேண்டிய சூழ்நிலையில் குழந்தை, ஒரு பாதுகாப்பின்மையை உணர ஆரம்பிக்கும். அப்போது, இந்த பழக்கம் வந்துடும். அதனால், குழந்தைக்கு, தான் ஒதுக்கப்படறோம்ங்கிற நினைப்பு வராம பார்த்துக்கணும். சில வயசானவங்ககிட்டயும் இந்த பழக்கம் இருக்கும். இது, மனச்சிதைவின் வெளிப்பாடு என்கின்றனர், மன நல நிபுணர்கள். நாம தவறு பண்ணிட்டோம்ங்கிற நினைப்பு வர்றவங்களும், நகம் கடிக்க ஆரம்பிச்சுடுவாங்க. ஏதோ ஒண்ணை அடையணும்ன்னு நினைச்சு, அதை அடைய முடியல என்ற ஏக்கம் வர்ற சமயத்திலயும், சிலர், நகத்தை கடிக்க ஆரம்பித்து விடுவாங்களாம். இந்த பழக்கம் உலகம் பூரா உண்டு. நகம் கடிக்கிறவங்களை அந்தப் பழக்கத்திலிருந்து மீட்கிறதுக்கு என்ன வழின்னு, லண்டன்ல உள்ள நிபுணர்கள் யோசிச்சிருக்காங்க. நகம் கடிக்கிற பழக்கம் உள்ளவங்களை வரச்சொல்லி, மூணு பிரிவா பிரிச்சாங்க. ஒரு பிரிவினரிடம், 'உங்களுக்கு, நகத்தை கடிக்கணும்ங்கிற நினைப்பு வரும் போதெல்லாம், டைரி எழுத ஆரம்பிச்சுடுங்க...' என்றனர். இன்னொரு பிரிவினரிடம், 'உங்களுக்கு அந்த நினைப்பு வரும் போதெல்லாம், உங்க நகத்துக்கு, வண்ணம் பூசி, அழகுபடுத்த ஆரம்பிச்சுடுங்க...' என, யோசனை கூறினர்.மூணாவது குழுவினரிடம், 'உங்களுக்கு நகத்தை கடிக்கணும்ங்கிற எண்ணம் வரும்போது, விரல்களை இறுக்கமா மூடி வச்சுக்கிட்டு, வேறு விஷயங்களில் கவனம் செலுத்துங்க...' என்றனர். இப்படி, மூணு விதமாக முயற்சி செய்ததில், மூணாவது குழுவினரிடம் நல்ல பலன் தெரிஞ்சுது. நகம் தெரியாதபடி விரலை இறுக மூடிக்கிட்ட குழுவிடம், நகம் கடிக்கிற பழக்கம், மெல்ல மெல்ல குறைஞ்சு போயுள்ளது. அதனால், நகம் கடிக்கிற பழக்கம் உள்ளவங்க, இதை முயற்சி பண்ணிப் பார்க்கலாம். எங்கோ, எதிலோ, எப்போதோ படித்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !