தகுதி!
காசி மாநகரத்தை பிரம்மதத்தன் என்ற ராஜா ஆட்சி செய்து வந்தார். ஆண்டுக்கு ஒருமுறை இங்கு நடக்கும் திருவிழாவில், வைகுண்டம் மற்றும் தேவலோகத்தில் இருந்து வந்து கலந்து கொள்வர்.அவ்வாறு நடந்த திருவிழாவுக்கு வந்திருந்த, நான்கு தேவக்குமாரர்களை சுற்றி ஏகப்பட்ட கூட்டம். அவர்கள் அணிந்திருந்த மலர்களில் இருந்து வெளிப்பட்ட நறுமணத்தை, அந்த ஊர் மக்கள் அனுபவித்தது இல்லை. 'எங்களுக்கும் இது மாதிரி மாலையை போட்டுக்க ஆசை. அதற்கு நீங்க தான் அருள் செய்யணும்...' என்றனர், மக்கள்.'பூலோகவாசிகளே, நான் சொல்றதை கொஞ்சம் பொறுமையா கேளுங்க. 'சுக்கரு' அப்படிங்கிற கற்பக விருட்சத்தின் மலர்களால் தொடுக்கப்பட்டது, இந்த மாலை. இதற்கு நிறைய சக்தி உண்டு. எந்தக் காலமும் வாடாது. வாசனையும் குறையாது. ஆனா, இதை அணிந்து கொள்ள சில தகுதிகள் தேவை...' என்றார், அந்த நான்கு தேவகுமாரகளில் ஒருவர். 'என்ன தகுதி, சொல்லுங்களேன்...' என்றனர்.'தீய இயல்புகள் உள்ளவர், இழிந்த சிந்தனை மற்றும் இழிந்த செயல் செய்பவர் இந்த மாலையை அணிய முடியாது...' என்றார்.'அடுத்தவர் பொருளை அபகரிக்காதவன், அடுத்தவங்களுக்கு கெடுதல் செய்யும் பொய் பேசாதவன், பேராசையால் கெட்ட வழியில் பொருள் ஈட்ட நினைக்காதவன், இந்த மாலையைப் போட்டுக்கலாம்...' என்று சொன்னார், இன்னொரு தேவகுமாரன்.கூட்டத்தில் இருந்து யாரும் முன்வரவில்லை. 'எனக்கு தகுதி இருக்கு. அந்த மாலையைப் போட்டுக் கொள்ள...' என, பொய் சொல்லி அந்த மாலையை வாங்கி கொண்டார், பெரியவரும், படித்தவருமான, ராஜகுரு. இவ்வாறு, மற்ற தேவகுமாரர்களும் சொன்ன தகுதி தனக்கு இருப்பதாக கூறி, அவர்களிடம் இருந்த மாலையை வாங்கி போட்டுக் கொண்டார், ராஜகுரு.திருவிழா முடிந்து, எல்லாரும் திரும்பி போயினர்.மறுநாள், நான்கு மாலைகளையும் போட்டு ராஜசபைக்கு வந்தார், ராஜகுரு. மாலை எல்லாம் வாடி, வாசனை எதுவுமின்றி, கடுமையான தலைவலியுடன், மாலையை கழட்டவும் முடியாமல்துடித்தார்.'எதற்கு பொய் சொல்லி மாலையை வாங்கணும், ஏன் இப்படி கஷ்டப்படணும்?' என, அனைவரும் கிண்டல் செய்தனர்.இதை பார்த்த ராஜா, மறுபடியும், திருவிழாவுக்கு ஏற்பாடு செய்தார். தேவக் குமாரர்கள் வந்தனர். மக்கள் முன்னிலையில் அவர்கள் காலில் விழுந்து, 'இந்த மாலையை போட்டுக்கிற தகுதி எதுவும் எனக்கு இல்லை. தகுதியில்லாத ஒருத்தன், தகாத தகுதியை, பொய் சொல்லி பெறணும்ன்னு ஆசைப்படுபவர்களுக்கு என்னுடைய தண்டனை ஒரு எச்சரிக்கையாக இருக்கட்டும்...' என, மன்னிப்பு கேட்டார், ராஜகுரு. ராஜகுரு கழுத்தில் இருந்து மாலையை கழட்டினர், தேவகுமாரர்கள். அடுத்த நொடி, அந்த மாலைகளும் பழைய படி மணம் கொடுக்க ஆரம்பித்தது.இதிலிருந்து நாம் தெரிந்து கொள்ள வேண்டியது:தகுதியில்லாதவர்களுக்கு, கவுரவம் தானாக வந்தாலும், அதை விலக்குவது தான், புத்திசாலித்தனம். பி. என். பி.,